டெல்லி: நாட்டின் பெயரை பாஜக அரசு பாரத் என்று மாற்றினால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயரையும் நாம் பாரத் என்று மாற்றி விடலாம் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் யோசனை தெரிவித்துள்ளார்.
பாரத் என்ற பெயருக்கான விரிவாக்கத்தையும் கூட அவர் பரிந்துரைத்துள்ளார். இதனால் இந்தியா - பாரத் விவகாரம் சூடு பிடித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் இணைந்து மிகப் பெரிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. நாட்டில் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் இதில் இணைந்துள்ளன. இதுவரை 3 முறை இவை கூடி ஆலோசித்துள்ளன. மூன்று முறையும் கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது அதிகரித்துள்ளது. இதனால் பாஜக தரப்பு இதை சமாளிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் பாஜக தலைவர்கள் பலரும், பாஜக முதல்வர்கள் பலரும் இந்தியா என்ற பெயரைப் பயன்படுத்துவதில்லை. மாறாக பாரத் என்று சொல்லி வருகின்றனர். இதன் உச்சமாக குடியரசுத் தலைவர் மாளிகையும், பிரதமர் அலுவலகமும் சமீபத்தில் வெளியிட்ட சில அழைப்பிதழ்களில் பாரத் என்ற பெயரே இடம் பெற்றுள்ளது.
இது பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்த நிலையில் சசி தரூர் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ஒரு யோசனையை தெரிவித்துள்ளார்.
இந்தியா என்ற பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்யுமானால் எதிர்க்கட்சிகளும் நமது கூட்டணியின் பெயரை சற்றும் தயங்காமல் பாரத் என்று மாற்ற வேண்டும். பாரத் என்றால், "Alliance for Betterment, Harmony And Responsible Advancement for Tomorrow (BHARAT) என்பதாகும் என்றும் சசி தரூர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், நமது கூட்டணியின் பெயரை பாரத் என்று தாராளமாக மாற்றலாம். அப்படி செய்தால்தான் இந்த நேம் கேமிலிருந்து ஆளும் கட்சி சற்று விலகி நிற்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா என்ற பெயரை பாஜகவினர் தவிர்த்து பாரத் என்று சொல்ல ஆரம்பித்ததிலிருந்தே எதிர்க்கட்சிகளின் கூட்டணியும் கூட பாரத் என்ற பெயரையும் இணைத்தே பேசி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பெயர் விளையாட்டு எங்கு போய் முடியும் என்று அப்பாவி மக்கள் தலை மேல் கைவைத்து கவலையுடன் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
{{comments.comment}}