சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் இணைந்தது ஏன் என்று நடிகர் சரத்குமார் விரிவான தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார் சரத்குமார். இந்தக் கட்சியை தற்போது பாஜகவில் கொண்டு போய் இணைத்து விட்டார். இதுகுறித்து பெரும் சலசலப்பு நிலவிய நிலையில் தனது முடிவு குறித்து சரத்குமார் நீண்டதொரு விளக்கம் அளித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வர நானே காரணம்:
இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: 1996 ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அக்கட்சி எதிர்த்து பிரச்சாரம் செய்ய முடிவெடுத்ததே என் அரசியல் பயணத்தின் துவக்கம். அரசியல் அனுபவம் அதிகம் இருந்தபோதும் அன்று நான் கொடுத்த ஒற்றை எதிர்ப்பு அறிக்கை திமுகவின் முன்னோடிகளை என் இல்லம் நோக்கி பயணிக்க செய்தது.
எந்த ஒரு சுயநலத்திற்காகவும், சுய லாபத்திற்காகவும் அல்லாமல் எந்த ஒரு அரசியல் சூழ்ச்சியும் அறியாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அவர்களை கூட்டணியான தமிழ் மாநில காங்கிரசையும் ஆதரித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதன் பங்கு என்னையும் என்னைச் சார்ந்த ரசிகப் பெருமக்களையும் தமிழக மக்களையும் சாரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுகவில் கிடைத்த கசப்பான அனுபவங்கள்:
அதன்பிறகு கலைஞர் அவர்களால் ஈர்க்கப்பட்டு, அழைக்கப்பட்டு முதன்முறையாக ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர் ஆனேன். அரசியல் பாடம் அரசியல் அணுகுமுறை இவை அனைத்தும் கலைஞர் அவர்களுடன் பயணித்ததில் கற்றுக் கொண்டேன். அங்கு நடந்த சில கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு அக்கட்சியில் இருந்து விலகி மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். அங்கும் திமுகவிலிருந்து விலக காரணமாய் இருந்த சிலரைப் போல் அறிவும் ஆற்றலும் இருப்பவரை எப்படி கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று சிந்தித்த சிலர் புரட்சித்தலைவி அவர்களின் கட்சியில் இருந்து நான் விலக காரணமானார்கள்.
அதன் பிறகு 2007 ஆகஸ்ட் 31-ல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உருவானது. 16 ஆண்டுகள் அரசியல் பயணம். பாராளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக, என் சமத்துவ சொந்தங்களுக்கு குடும்பத் தலைவராக, மக்கள் சேவையில் என்னை அர்ப்பணித்துக் கொண்டு பல மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆக்கபூர்வமான அரசியலில் ஈடுபட்டிருக்கின்றேன். எந்த ஒரு பேருதவியும் இல்லாமல் நான் நடித்து ஈட்டிய பொருளாதாரத்தின் அடிப்படையில் நேற்று வரை என் இயக்கத்தை நடத்தி மக்கள் பணியில் என்னை அர்ப்பணித்திருக்கின்றேன். அப்பழுக்கற்ற பெருந்தலைவர் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைய வேண்டும் என செயல்பட்டு இருக்கின்றேன்.
ஜனநாயகம் குறைந்து பணநாயகம் மேலோங்கி விட்டது:
ஆனால் ஜனநாயகம் குறைந்து பணநாயகம் மேலோங்கி அரசியல் நாம் நினைத்த இலக்கை அடைய முடியவில்லை என்ற என் சிந்தனைக்கு இந்த நாடாளுமன்ற தேர்தல் ஒரு ஞானோதயமாக அமைந்தது என்றே சொல்லலாம். காரணம் தேர்தல் வரும்போதெல்லாம் எந்த கட்சியுடன் கூட்டணி, எத்தனை இடங்கள் தரப்போகிறார்கள் என்ற பேச்சு தான் மேலோங்கி நிற்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. பதவி இருந்தால்தான் மக்கள் பணியாற்ற முடியும் என்பது உண்மை என்றாலும் கூட்டணி கூட்டணி என்ற பேச்சுகளும், அதற்கு மட்டும்தான் நாம் பயணிக்கிறோமா என்ற எண்ணமும் என் அமைதியை இழக்கச் செய்தது.
என் பயணத்தில் நான் தோல்வியடைந்து விட்டேன் என்று பிறர் பலவிதமாக பேசினாலும் அதற்கெல்லாம் கவலைப்படாமல் நாம் மக்களுக்கு சேவை செய்ய நல்ல எண்ணத்தோடு செயல்படுகிறோம் என்பதை மனதில் தாங்கி, சக்தி வாய்ந்த நாட்டின் வளர்ச்சியும் நாட்டு மக்களின் நன்மையையும் இந்தியர்களின் பெருமையை உலகறிய செய்யும் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் திறமையான ஆட்சிக்கு, மீண்டும் அப்பழுக்கற்ற பெருந்தலைவர் அவர்களின் ஆட்சி அமைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியுடன் உறுதுணையாக இருந்து ஏன் செயல்படக்கூடாது என்று சிந்தித்தேன். அதன் வாயிலாக 2026 இல் தமிழகத்தில் கோலோச்சி வரும் இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்திட, நம் இலக்கையும் மக்களின் எண்ணங்களையும் இணைத்து பிரதிபலித்திட வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக தோன்றியது.
இது முடிவல்ல.. எழுச்சியின் தொடக்கம்:
இந்த சிந்தனை உந்திக் கொண்டிருந்ததால், மக்கள் பணியில், பதவியில் இருந்தால்தான் ஒரு இலக்கை அடைய முடியும் என்ற எண்ணத்தை கடந்து ஒரு மாபெரும் சக்தியாக இந்தியாவை அனைத்து துறைகளிலும் முன்னேற்றச் செல்கின்ற பாரதிய ஜனதா கட்சியுடன் பாரத பிரதமராக மறைந்த மோடி அவர்கள் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டிற்கும் நம் மாநிலத்திற்கு நம் மொழிக்கு நம் கலாச்சாரத்திற்கும் பெருமை சேர்த்திட எண்ணி, எனது 28 ஆண்டுகள் அரசியல் அனுபவத்தையும் என் உழைப்பையும் என் இயக்கத்தின் சகோதரர்களின் உழைப்பையும் தமிழக மக்களுக்காகவும் தேசத்தின் ஒற்றுமைக்காகவும் தேசத்தின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணித்திட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்து செயல்பட அனைவரின் ஆதரவுடன் முடிவு எடுத்தேன்.
என் வளர்ச்சியிலும் இன்ப துன்பங்களையும் என்னுடன் பயணித்து ஆதரவளித்த தமிழக மக்களுக்கும் சமத்துவ சொந்தங்களுக்கும் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கும் நன்றி கூறி, இது என் முடிவல்ல, ஒரு வருங்கால எழுச்சியின் தொடக்கம் என அறிவித்து மக்கள் பணியில் மேலும் என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சரத்குமார்.
'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
{{comments.comment}}