சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023:  துலாம் முதல் மீனம் வரை.. யாருக்கு சொத்து வாங்கும் பாக்கியம் இருக்கு?

Dec 20, 2023,05:09 PM IST

சனிப்பெயர்ச்சி 2023 இன்று, டிசம்பர் 20 ம் தேதி மாலை 05.20 மணிக்கு நடைபெறுகிறது. சனி பகவான் தனது சொந்த வீடான மகர ராசியில் இருந்து, மற்றொரு சொந்த வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.


சனிப் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்கு என்ன மாதிரியான பலன்களைக் கொடுக்கும், யாருக்கு என்ன மாதிரியான மாற்றம் வரும் என்பது குறித்து ராசி வாரியாக பார்த்து வருகிறோம். நேற்று மேஷம் முதல் கன்னி ராசி வரையிலானவர்களுக்கான பலன்களைப் பார்த்தோம். ( சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023: மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான பலன்கள்).  இன்று துலாம் ராசி முதல் மீனம் ராசி வரையிலான ஆறு ராசிக்காரர்களுக்குரிய பலன்களைப் பார்ப்போம். 


துலாம் ராசி 




ஞானமும், தர்ம சிந்தனையும், கொடுத்த வாக்கை காப்பாற்றும் எண்ணமும், தைரியமும் மிகுந்த துலாம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு இதுவரை 4ம் பாவத்தில் இருந்த சனி பகவான், அர்த்தாஷ்டம சனியாக இருந்தார்.  இதனால் பல விதமான சிரமங்கள், காரிய முடக்கம், செய்கின்ற தொழில் சிரமங்கள், திருமணம், குழந்தை ஆகியவற்றில் தாமதம், பலவிதமான சங்கடங்கள், வேதனையை கொடுத்தார். தற்போது நடக்கும் சனிப்பெயர்ச்சியால், சனி பகவான் 5ம் பாவத்திற்கு வருகிறார். 5ம் இடம் பெற்ற புத்திர பேறுகளை வழங்கக் கூடியது. இது ஒரு நல்ல இடமாகும். 


5ல் இருக்கக் கூடிய சனி பகவான் உங்களுக்கு பலவிதமான நன்மைகளை வழங்குவார். குழந்த பாக்கியம், தொழில் வளர்ச்சி, தெய்வத்தை வழிபடுவதற்கு இருந்த தடை நீங்குதல் ஆகியவை ஏற்படும். இதுவரை இருந்த செய்தொழிலில் லாபம் இல்லை என்ற நிலை இனி மாறும். அதோடு பழைய முதலீடுகள் மூலம் லாபம் ஏற்படுவதற்கு, கடன் அடைவதற்கும், கொடுத்த பணம் திரும்பி வருவதற்கும் நல்ல வாய்ப்புகள் ஏற்படும். 


சித்திரை நட்சத்திரம் 3,4 பாதங்களில் பிறந்தவர்களுக்கு பரிபூரணமான வெற்றியையும், திருப்தியையும் ஏற்படுத்தும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோரர்கள் மூலம் நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விசாகம் நட்சத்திரம் 1,2,3 ஆகிய பாதங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்வாதார உயர்வை சனி பகவான் வழங்க போகிறார். 


துலாம் ராசிக்காரர்கள் இந்த சனிப்பெயர்ச்சியில் மகாலட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும். துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரம் என்பதால் அவருக்குரிய வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை வழிபடுவதால் நன்மைகள் பரிபூரணமாக கிடைக்கும்.


விருச்சிகம் ராசி




நேர்மையான சிந்தனையும், குழந்தைகள் மீது பாசமும், தெய்வ நம்பிக்கையும், கொள்கை பிடிப்பும், வாழ்க்கை துணையிடம் அன்பும் பக்தியும் கொண்ட, எதையும் கடந்து செல்லக் கூடிய மனப்பக்குவம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு 3ம் பாவத்தில் இதுவரை சனி பகவான் இருந்து வந்தார். அதற்கு முன்பு ஏழரை சனி இருந்தது. அதற்கு பிறகு 3ம் இடமான விமோசன ஸ்தானத்திற்கு வந்தாலும் குருவின் சரியில்லாமல் இருந்தது. இதனால் தேவையற்ற விரய செலவுகள், கால மாற்றம், தேவையற்ற இடமாற்றம் ஆகியவற்றை கொடுத்திருப்பார்.


தற்போது சனி பகவான் உங்கள் ராசிக்கு 4ம் வீட்டிற்கு வருகிறார். அர்த்தாஷ்டம சனியாக இருந்தாலும் பயப்பட தேவையில்லை. உங்களுக்கு சனி பகவான் பல நல்ல விஷயங்களை வழங்க போகிறார். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீர்க்க போகிறார். நீண்ட தூரம் பயணம் செய்து வேலைக்கு போக வேண்டி இருந்தால் அந்த தூரத்தை குறைப்பார். வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும். நீண்ட நாட்களாக இருக்கக் கூடிய மனக் கவலைகள் நீங்கும். முன்னோர் சொத்துக்கள் கிடைப்பதில் இருந்த கால தாமதங்கள் நீங்கும். குழந்தை இல்லதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். 


உங்களுடைய ராசிக்கு 10, 3, 7 ஆகிய இடங்களில் சனியின் பார்வை படுவதால் பல நன்மைகள் கிடைக்கும். தன்னம்பிக்கையாக உணர்வீர்கள். செய் தொழிலில் வளர்ச்சி, கடன் தீருதல் ஆகியவை ஏற்படும்.


விசாக நட்சத்திரம் 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தொழில் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கடுமையான போராட்டத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடற்பயிற்சி போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் ஆரோக்கியம் ஏற்படும். அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு பல விதங்களில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். 


விருச்சிக ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சியின் காரணமாக விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். சனி பகவானை வழிபாடு செய்வதும் நல்லது. ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை வாங்கி போடுங்கள். சனி பகவானுக்கு சனிக்கிழமையில் எள் தீபம் ஏற்றுவது நல்லது.


தனுசு ராசி




இரக்கமான மனமும், மற்றவர்களுக்கு உதவும் குணமும், பெரியவர்களிடம் மதிப்பும் மரியாதையும் கொண்ட, எந்த செயலில் ஈடுபட்டாலும் முழுமையான பங்களிப்பை அளிக்கக் கூடிய, நேரம் காலம் பார்க்காமல் உழைக்கக் கூடிய குணம் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இதுவரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 2வது ஸ்தானம் இருந்தார். இதற்கு பாத சனி என்று பெயர். இதனால் அதிகப்படியான தீய பலன்களையே உங்களுக்கு கொடுத்தார். அதிகப்படியான உடல் உபாதைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. உடலில் சில வயோதிக தன்மையை சனி பகவான் உங்களுக்கு கொடுத்து வந்தார். பல விஷயங்களில் கால தாமதம், இந்த விஷயம் எப்போது தான் முடியும் என நீங்களே வெறுத்து போகும் அளவிற்கு நிலைமை இருந்திருக்கும். 


தற்போது சனி பகவான் 3ம் இடத்திற்கு வருகிறார். இதை விமோசன சனி என்றும், நிவர்த்தி சனி என்றும் சொல்லலாம். இந்த விமோசன சனியால் எடுத்த காரியங்களில் உடனடி வெற்றி, நீண்ட காலமாக இருந்த தடை விலகுதல், மனக்கஷ்டங்கள் நீங்கும். திருமணம் ஆக வேண்டியவர்களுக்கு திருமணம், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை ஆகிய பாக்கியங்கள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி, செய்யும் தொழிலில் பல மடங்கு லாபம், வெளிநாடுகளில் இருந்து நிதி ஆதாரங்கள் கிடைப்பது போன்றவை நடக்கும். ராகு பகவானும் நல்ல இடத்தில் உள்ளதால் வேறு மொழி பேசக் கூடியவர்களால் உங்களுக்கு பணவரவு ஏற்படும். வெளிநாட்டிலும் கூட உங்களின் வியாபாரம் விருத்தி அடையும். 


சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 12 ம் இடத்தை பார்ப்பதால் சுப முதலீடுகள் இருக்கும். 5 ம் இடத்தை பார்ப்பதால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். 9 ம் பாவத்தை பார்ப்பதால் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். 


மூல நட்சத்திரக்காரர்களுக்கு தொழிலில் உள்ள பல விதமான தடைகள் விலகி, அசுர வளர்ச்சி ஏற்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இதுவரை பயன்படுத்த முடியாமல் இருந்த நல்ல வாய்ப்புக்களை இனி பயன்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் ஏற்படும். உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை துணை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மூலமாக பல நன்மைகளும், கூட்டு தொழில் மூலம் லாபமும் ஏற்படும்.


தனுசு ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சி காரணமாக விநாயகரையும், பெருமாளையும் வழிபாடு செய்ய வேண்டும். விநாயகருக்கு உகந்த விநாயகர் அகவல் படிக்கலாம். பெருமாளுக்குரிய ஸ்லோகங்கள், திருப்பாவை போன்றவற்றை தினமும் படிப்பதால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.


மகரம் ராசி




நிதானமான தன்மையும், எதிலும் நன்கு ஆராய்ந்த பிறகு காரியத்தில் இறங்கும் தன்மையும், பொறுமைசாலியாகவும், மனப்பக்குவமும், சூழ்நிலை அறிந்து விட்டுக் கொடுக்கும் தன்மை கொண்ட மகர ராசிக்காரர்களே, உங்களுடைய ராசிக்கு அதிபதியான சனி பகவான் இதுவரை உங்களின் ஜென்ம ராசியிலேயே இருந்தார். இதனால் தேவையற்ற அழுத்தமான நிலை, பணிகளை சரியாக செய்ய முடியாத சூழ்நிலை, கடன் கொடுக்கல் வாங்கலில் முடக்கம் ஏற்பட்டிருக்கும். தற்போது சனி பகவான் உங்களுக்கு பாத சனியாக வரப் போகிறார். இதனால் ஓரளவிற்கு பரவாயில்லை என்ற நிலை ஏற்படும்.


2026 மார்ச் மாதம் வரை உங்கள் ராசிக்கு 8ம் பாவத்தில் சனி பகவான் இருக்க போகிறார். இதனால் முன்பை விட கஷ்டங்கள் ஓரளவிற்கு குறையும். அதே சமயம் சில நல்ல பலன்களையும் சனி பகவான் தரப் போகிறார். பணவரவு, தொழில் ஆகியவற்றை ஏற்படுத்தி தருவார். ஆனால் மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். அதே போல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 


சனி பகவானின் பார்வை அஷ்டம ஸ்தானத்தையும், 3ம் பாவையாக 4ம் இடத்தையும் பார்க்கிறார். இதனால் உங்களுக்கு சகோதரர்களுக்கும் சுமூகமான உறவு ஏற்படும். வாழ்க்கை துணை மூலமாக நிதி வரவுகள் ஏற்படும். புதிய வேலைகள் ஏற்படும். பணவரவும் கணிசமாக இருக்கும். கணவன்- மனைவி உறவு சுமூகமாக இருக்கும்.


உத்திராடம் நட்சத்திரம் 2,3,4 பாதங்களில் பிறந்தவர்களுக்கு சில பயணங்களும், பயணங்களால் சாதகமான பலன்களும் ஏற்படும். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வளர்ச்சி என்பது ஏற்படும். அவிட்டம் நட்சத்திரம் 1, 2 பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளும், புதிய இடங்கள் வாங்கக் கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். கடன் குறையும் ஏற்படும்.


மகர ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சியின் காரணமாக சனி பகவானையும், ஆஞ்சநேயரையும் வழிபட வேண்டும். ஐப்பன், ஐய்யனார் ஆகியோரையும், மதுரை வீரன் போன்ற காவல் தெய்வங்களையும் வழிபாடு செய்வது  நல்லது. குலதெய்வத்துடன் தொடர்புடைய தெய்வத்தை வழிபடுவதால் நல்ல பலன்களும், யோக பலன்களும் கிடைக்கும்.


கும்பம் ராசி




மதியுகமும், காரியத்தை துவங்குவதில் தயக்கமும், எந்த காரியத்தையும் முழுமையாக செய்ய வேண்டும் என நினைக்கும் கும்ப ராசிக்காரர்களே, உங்களின் ராசிக்கு அதிபதியான சனி பகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் இருந்தார். இதனால் காரிய விரயங்கள், பொருள் விரயங்கள், கால தாமதங்கள், பொருட்க செலவு போன்றவற்றை கொடுத்தார். தற்போது சனி பகவான் பெயர்ச்சி அடைந்து உங்களின் ராசிக்கே வருகிறார். உங்களுடைய ராசிக்கு ஆட்சி அதிபதி என்பதால் இந்த சனிப்பெயர்ச்சி பெரிய அளவில் கெடு பலன்களை தர மாட்டார். அதோடு பல நன்மைகளையும் அவர் வழங்க போகிறார்.


தன்னம்பிக்கையுடன் எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை தருவார். தைரியங்களையும், வாழ்க்கை துணை மூலமாக பல ஆதரவுகளையும் தருவார். வேலையை உறுதி செய்வார். அதே சமயம் உறவினர்கள், நண்பர்களிடம் பேசும் போது கவனமுடன் இருப்பது அவசியம். உங்களுக்கு ஆதரவானவர்களே எதிராக திரும்பக் கூடிய நிலையும் ஏற்படலாம். அதனால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களுக்கு உதவி செய்யும் போதும், பயணம் செய்யும் போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் கொடுக்கல் வாங்கலிலும் கவனமாக இருக்க வேண்டும்.


சனி பகவான் உங்கள் ராசிக்கு 3ம் இடத்தையும், களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார். இதனால் மன தைரியம், மன பக்குவம், மன திடம் ஏற்படும். வாழ்க்கை துணைக்கும் உங்களுக்கும் நல்ல உறவு இருக்கும். திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் ஏற்படும்


அவிட்டம் நட்சத்திரம் 3,4 பாதங்களில் பிறந்தவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி புதிய முதலீடுகளுக்கான வாய்ப்பை தரும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதற்கும், புதிய சொத்துக்கள் சேர்வதற்கு வாய்ப்புகள் அமையும். பூரட்டாதி நட்சத்திரம் 1,2,3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு பழைய கடன்கள் நிவர்த்தியாவதற்கு, புதிய நகை, ஆபரணங்கள் சேருவதற்கு சாதகமாக சூழ்நிலைகள் உருவாகும்.


கும்ப ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சியால் ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய வேண்டும். அவருக்கு உகந்த அமாவாசை நாளில் வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள். ஆஞ்சநேயருக்கு அமாவாசையில் வடைமாலை சாத்தி வந்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.


மீனம் ராசி




நண்பர்களிடம் நன்மதிப்பும், பாரம்பரியமும், அனைவரையும் மதிக்கும் குணமும், நிதானமும் கொண்ட மீன ராசிக்காரர்களே, இதுவரை சனி பகவான் உங்களுடைய ராசிக்கு 11ம் வீட்டில் லாப சனியாக இருந்தார். இதனால் கணிசமான பணவரவுகளையும், சில செலவுகளையும் கொடுத்திருப்பார். இப்போது 12ம் இடமான விரய ஸ்தானத்திற்கு விரய சனியாக வருகிறார். அதோடு மீன ராசிக்கு தற்போது ஏழரை சனி துவங்குகிறது. இருந்தாலும் உங்களுடைய ராசிக்கு லாபம், விரயம் இரண்டு இடங்களுக்கும் அதிபதியாக இருப்பவர் சனி பகவான் என்பதால் உங்களுக்கு நேரடியாகவே பல நன்மைகளையும் வழங்க உள்ளார்.


திருமணம் ஆக வேண்டியவர்களுக்கு திருமணம் நடைபெறும். விரய ஸ்தானத்திற்கு சனி வருவதால் சுப செலவுகள் இருக்கும். வீட்டில் இது வரை நடைபெறாமல் இருந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறும். அதனால் சுப செலவுகள் ஏற்படும். 


சனி பகவானின் பார்வை 2ம் இடத்தை பார்ப்பதால் தனவரவு ஏற்படும். செலவுகள் இருந்தாலும் அதற்கு ஏற்ப பணவரவும் இருந்து கொண்டே இருக்கும். 6 ம் இடத்தை பார்ப்பதால் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். 9ம் இடத்தை பார்ப்பதால் இறைவழிபாடு செய்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். கடவுளின் அணுகிரகம் கிடைக்கும். இதனால் கஷ்டமாக சூழ்நிலைகள் கூட மாறும். வாழ்க்கையில் முன்னேற்றத்தை, வளர்ச்சியை தரும்.


பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கடினமான போராட்டமான காலமாக இருக்கும். கடின முயற்சிக்கு பிறகே வெற்றி பெற வேண்டிய சூழல் ஏற்படும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கெளரவ செலவுகள் ஏற்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வம்ச அபிவிருத்திக்கான வாய்ப்பு ஏற்படும். அதன் மூலம் சில செலவுகளும் ஏற்படும்.


மீன ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சியால் வழிபட வேண்டிய தெய்வம், தட்சிணாமூர்த்தி. அதோடு ஆஞ்சநேயரையும், சனி பகவானையும் சனிக்கிழமையில் வழிபட வேண்டும். சனிக்கிழமையில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடலாம். ஆஞ்சநேயருக்கு நெற்றிலை மாலை வாங்கி சாற்றுவதால் நிச்சயமாக நல்ல வழி பிறக்கும்.


அனைத்து ராசிக்காரர்களுக்கும் சனிப்பெயர்ச்சி நல்ல பலன்களை வழங்கட்டும்.. அனைவரும் நலம் பெற்று, சனி பகவானின் கருணையைப் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

சமீபத்திய செய்திகள்

news

சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!

news

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

news

மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!

news

வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!

news

பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!

news

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு

அதிகம் பார்க்கும் செய்திகள்