டெல்லி: எனது தந்தை ராஜேஷ் பைலட் விமானப்படையில் இருந்தபோது குண்டு வீசித் தாக்குதலில் ஈடுபட்டது உண்மைதான். ஆனால் பாஜகவினர் கூறுவது போல அது மிஸோரமில் அல்ல.. கிழக்கு பாகிஸ்தானில்தான் அவர் தாக்குதலில் ஈடுபட்டார் என்று மறைந்த ராஜேஷ் பைலட்டின் மகனும், காங்கிரஸ் இளம் தலைவர்களில் ஒருவருமான சச்சின் பைலட் கூறியுள்ளார்.
டிவிட்டரில் சமீபத்தில் பாஜகவின் ஐடி விங் தலைவர் அமித் மாளவியா ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில் சச்சின் பைலட்டின் தந்தை ராஜேஷ் பைலட்டும், இன்னொரு காங்கிரஸ் தலைவரான சுரேஷ் கல்மாடியும் 1966ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி, விமானப்படையில் பணியாற்றியபோது, மிஸோரம் தலைநகர் அய்ஸ்வாலில் குண்டு வீசித் தாக்கினர். சொந்த நாட்டு மக்களையே கொன்றவர்கள் இவர்கள். இவர்களுக்கு பின்னர் இந்திரா காந்தி பதவிகளை அளித்துக் கெளரவித்தார் என்று கூறியிருந்தார்.
இதை சச்சின் பைலட் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அமித் மாளவியா சொல்வது தவறான தகவல், பொய்யான தகவல் என்று அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில் கூறியிருப்பதாவது:
அமித் மாளவியா.. நீங்க தேதியையும் தப்பா சொல்லிருக்கீங்க, தகவல்களையும் தப்பா சொல்லிருக்கீங்க. இந்திய விமானப்படை விமானியாக இருந்தபோது எனது தந்தை குண்டு வீச்சில் ஈடுபட்டார், உண்மைதான். ஆனால் அது அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில். அதுவும் 1971ம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின்போதுதான் அது நடந்தது.
நீங்க சொன்னது போல 1966ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி நடக்கவில்லை. எனது தந்தை விமானப்படையில் இணைந்ததே 1966ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதிதான். இதுதொடர்பான சான்றிதழையும் இணைத்துள்ளேன். பாருங்க.. ஜெய்ஹிந்த், இனிய சுதந்திர தின வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் சச்சின் பைலட்.
மணிப்பூர் விவகாரத்தில் பாஜகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக நெருக்கி வரும் நிலையில் மிஸோரமை கையில் எடுத்துள்ளது பாஜக. இந்த விவகாரத்தை ஆரம்பித்து வைத்ததே பிரதமர் நரேந்திர மோடிதான். அவர்தான் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதில்அளித்து உரையாற்றியபோது மிஸோரமில் சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீசித் தாக்கியது காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான் என்று கூறியிருந்தார்.
ஆனால் பாஜகவினர் உணர்ச்சிவசப்பட்டு இதுகுறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக தற்போது சலசலப்பு கிளம்பியுள்ளது.
{{comments.comment}}