சபரிமலை : கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் 2024ம் ஆண்டிற்கான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை திறக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கார்த்திகை முதல் தேதியான இன்று (நவம்பர் 16) அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி துவங்கி, டிசம்பர் 26ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற உள்ளது. டிசம்பர் 26ம் தேதி படிப்பூஜைக்கு பிறகு கோவில் நடை சாத்தப்படும். அதற்கு பிறகு பக்தர்கள் யாரும் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். மீண்டும் டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து 2025ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி வரை கோவில் நடைதிறந்திருக்கும். முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் ஜனவரி 15ம் தேதி மாலை நடைபெறும்.
கடந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் மலையேற முடியாமலும், சாமி தரிசனம் செய்ய முடியாமலும் பக்தர்கள் பாதி வழியிலேயே திரும்பி வந்ததாக சொல்லப்பட்டது. அதுமட்டுமின்றி பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை செல்வதற்கே 48 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த ஆண்டு அப்படி ஏதும் நடக்கக் கூடாது. பக்தர்கள் அனைவரும் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யும் வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
தரிசன முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் :
* தினசரி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பகல் 1 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிப்படுவார்கள். பிறகு கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் பகல் 3 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, இரவு 11 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யப்படுவார்கள். மொத்தமாக ஒரு நாளைக்கு 18 மணி நேரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
* கூட்ட நெரிசலை தடுக்கவும், பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காகவும் வசதியாக தினமும் பகல் 1 மணியளவில் தான் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் நோக்கி மலையேறி செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
* தினமும் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களில் 70,000 வரையிலான பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் செய்து சாமி தரிசனம் செய்வதற்கு 10,000 பக்தர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது.
* ஆன்லைனில் தரிசனத்திற்கு புக் செய்யாமல் வரும் பக்தர்கள் பம்பை, எரிமேலி, வண்டிப்பெரியாறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஸ்பாட் புக்கிங் மையங்களில் தங்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஏதாவது ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்றை காட்டி, முன்பதிவு செய்து கொண்டு சாமி தரிசனம் செய்யலாம்.
* முதல்கட்டமாக ஸ்பாட்புக்கிங் இல்லாமல் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
* பக்தர்கள் கோவிலில் நடக்கும் பூஜைகள், தரிசன நேரம், கூட்ட நிலவரம், அருகில் இருக்கும் மருத்துவமனை வசதி, உணவு, போலீசார், வனத்துறை, பிரசாத இருப்பு போன்ற விபரங்களை எளிதில் தெரிந்து கொள்வதற்காக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் முத்தூட் குழுமத்துடன் இணைந்து Swami chatbot என்ற ஏஐ தொழில்நுட்பத்துடனான மொபைல் ஆப்பினை அறிமுகம் செய்துள்ளனர். இந்த ஆப்பினை https://tinyurl.com/2843fjha இணையதளம் வழியாக மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். இது தவிர 6238008000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலம் தகவல் அனுப்பியும் கோவில் தரிசன விபரங்களை பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
{{comments.comment}}