பிள்ளைகள் பொறுப்பற்றவர்களாக வளர்வதற்கு அம்மாக்கள் மட்டும்தான் காரணமா?.. ஒரு கேள்வி.. பல பதில்கள்!

May 14, 2024,06:41 PM IST

- பொன் லட்சுமி


விஜய் டிவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான விவாதம் பெருத்த பேசு பொருளாகியுள்ளது. பலரும் இன்னும் அதுகுறித்து விவாதித்த வண்ணம் உள்ளனர். பிள்ளைகளை கெடுப்பதே இந்த பெற்றோர்கள்தான் என்று பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


உண்மையில் பிள்ளைகள் பொறுப்பற்றவர்களாக வளர்வதற்கு யார் காரணம்.. பெற்றவர்கள் மட்டும்தான் காரணமா.. வாங்க நாமும் விவாதிப்போம்.


இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் பிள்ளைகளை பொறுப்பானவர்களாகவும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உள்ளவர்களாகவும், தைரியசாலியாகவும் மாற்றுவதில் பெரும் பங்கு பெற்றோர்களையே சாரும்... ஆனால் இன்று எத்தனை பெற்றோர் தன் குழந்தைகளை பொறுப்பானவர்களாக வளர்கிறார்கள் என்று தெரியவில்லை.. குழந்தைகளின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதில் எந்த தவறும் இல்லை. அதே சமயம் அவர்களின் ஆடம்பர செலவுகளுக்கு பணத்தை அள்ளி அள்ளி வழங்கும்போதுதான் பல குழப்பங்கள் வந்து நிற்கின்றன. 


விவாதத்தைக் கிளப்பிய நீயா நானா




கடந்த ஞாயிற்றுக்கிழமை நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு தாய் தன்னுடைய மகனை பற்றி பேசினார். அவர் மகன்  இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு கார் ஷோரூமில்  சம்பளத்திற்கு வேலை பார்த்துவிட்டு அந்த வேலை பிடிக்கவில்லை என்று வந்துவிட்டார் என்று அவர் கூறுகிறார்... மகனிடம் ஏன் அந்த வேலை பிடிக்கவில்லை என்று கேட்டதற்கு. எனக்கு கார் ஓட்டுவது என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் வேலை பார்த்த ஷோரூம் போலே தனியாக ஒரு ஷோரூம்  வைக்க வேண்டும். அதற்கு 50 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்கிறார் என்றார்...  அவரின் தந்தை மேஸ்திரி வேலை பார்க்கிறாராம். அத்தோடு விடவில்லை மகன்.. 2 லட்சம் ரூபாய்க்கு செல்போன் கேட்டுள்ளார். இதற்காக ஒரு மாதமாக சரியாக சாப்பிடாமல் அடம் பிடித்து வாங்கியுள்ளார். இந்த போனை வாங்கித் தர 6 மாதமாக தான் சம்பாதித்த பணத்தை சேர்த்து வைத்தாராம் அவரது தந்தை.


இதைக் கேட்டதும் அயர்ச்சியாகத்தான் வந்தது. நம் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே வீட்டின் பொருளாதாரத்தை அவர்களுக்கு தெரியப்படுத்தி வளர்க்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும்  தாய் தந்தை செய்யும் வேலையில் உள்ள கஷ்டத்தை குழந்தைகளுக்கு தெரியுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் தான் ஒரு பொருளை அவர்கள் வாங்குவதற்கு முன்பு நம் தந்தை எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று அவர்களுக்கு தெரியும்... அதே சமயத்தில் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் சில வீடுகளில் ஆண் பெண் என்று பேதம் பார்க்கிறார்கள். இதுவே அந்த குழந்தைகள் பொறுப்பற்றவர்களாக வளர்வதற்கு முக்கிய காரணமாக அமைகிறது... அதாவது பெண் பிள்ளைகள் வீட்டில் வேலை செய்ய வேண்டும். அவர்களுக்கு தேவையான பொருள்களை வாங்கும் போது பொம்பள பிள்ளைக்கு இப்ப எதுக்கு இதெல்லாம் அப்படின்னு சொல்கிற பெற்றோர்களும் இன்றும் இருக்க தான் செய்கிறார்கள்.. 


கேட்டதையெல்லாம் வாங்கித் தரலாமா




அதே சமயத்தில் ஆண் குழந்தைகள் கேட்கும் அனாவசியமான செலவுகளை கூட எவ்வளவு கடன் வாங்கியாவது பையனுக்கு செய்து விட வேண்டும் என்று நினைத்து அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்களைப் பொறுப்பற்றவர்களாக வளர்த்து விடுகிறார்கள்... சில வீடுகளில் இதற்கு நேர் மாறாக பெண் குழந்தைகளும் எனக்கு இது வேண்டும் கடன் வாங்கியாவது  இத்தனை பவுனில் நகை போட வேண்டும்  என்று  அடம்பிடித்து வாங்குகிறார்கள்... இப்படி பொறுப்பேற்றவர்களாக வளரும் குழந்தைகளை பார்க்கும் பொழுது  எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அது பொறுப்பற்றவர்களாவது அன்னை வளர்ப்பினிலே என்றுதான் பாடலை மாற்றிப் பாட வேண்டியுள்ளது. 


சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் நடித்த திரைப்பட  சூட்டிங்கில் அவர் கீழே விழுந்து அடிபடும் தருணத்தை திரையில் பார்த்துவிட்டு அவர் மகள் அழுகிறார்.. அதுவரையிலும் தன் தந்தை ஒரு ஹீரோ என்று மட்டுமே அந்த குழந்தைக்கு தெரிந்திருக்கும் அந்த வீடியோவை பார்க்கும் போது தன் தந்தை எவ்வளவு கஷ்ட  பட்டு உழைக்கிறார் என்று தெரிய வரும் போது அந்த குழந்தை அவர் தந்தையை ஒரு ரியல் ஹீரோவாகவே பார்க்கிறார்.. அதேபோல இன்றும் வெளிநாடுகளில் ஒரு சில பள்ளிகளில் குழந்தைகளுக்கு அவர்களது தந்தை செய்யும் தொழிலை திரையில் காண்பிக்கிறார்கள்.. அதை பார்க்கும்போது  தன்னுடைய தந்தை தன் குடும்பத்திற்காக எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறார் என்று அந்த குழந்தைகளுக்கு தெரிய வரும் போது தன்னுடைய அனாவசியமான செலவுகளை குறைத்துக் கொள்ள முடிகிறது.


கஷ்டத்தைச் சொல்லி வளர்க்க வேண்டும்




அதேபோல  பெற்றோர்களாகிய நாம் தான் குழந்தைகளுக்கு தந்தையும், தாயும் தங்கள் குடும்பத்திற்காக படும் கஷ்டத்தை சொல்லி வளர்க்க வேண்டும்... அதற்காக குழந்தைகளுக்கு எதுவும் வாங்கிக் கொடுக்கக் கூடாது என்று அர்த்தம் இல்லை. அத்தியாவசியமான பொருளாக இருந்தால் கண்டிப்பாக நாம் வாங்கி கொடுத்தே ஆக வேண்டும்... கல்விக்கு தேவையான செலவையும் உணவுக்கு தேவையான செலவையும் கண்டிப்பாக செய்து தான் ஆக வேண்டும்... ஆனால் வீட்டின் கஷ்டம் அறிந்து அனாவசியமாக ஆடம்பரமான பொருட்களை வாங்க முற்படும்போது  பெற்றோர்கள் தான் தங்களால் இப்பொழுது அந்த பொருட்களை வாங்கி தர இயலாது என்று புரிய வைக்க வேண்டுமே தவிர பையன் கேட்டு விட்டான் அதனால் கடன் வாங்கியாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவர்களை பொறுப்பற்றவர்களாக வளர்த்து  விட கூடாது.


உங்கள் குழந்தை ஒரு பொருளை கேட்கிறது என்றால் உங்களால் அந்த பொருளை வாங்க முடியும் என்னும் பட்சத்தில் இருந்தாலும் அந்த பொருள் அவர்களுக்கு முக்கியமானதா என்று தெரிந்துவிட்டு அந்த பொருளை வாங்கி கொடுங்கள்.. இல்லையென்றால் கையில் பணம் இருந்தால் கூட அந்தப் பொருள் அனாவசியமானது என்று தெரிந்தால் இப்பொழுது என்னிடம் கையில் பணம் இல்லை பணம் வரும்போது வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லி அதற்கு தடை போடுங்கள்... நிறைய பெற்றோர் செய்யும் தவறு என்னவென்றால் தங்களுக்கு சிறுவயதில் கிடைக்காத பொருளும் சரி அனுபவிக்காத பொருளும் சரி தன் குழந்தைகளுக்கு எல்லாமே கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அதில் தவறு ஒன்றும் இல்லை... ஆனால் அந்த பொருள் அவர்களுக்கு உபயோகப்படுமா என்று பார்த்துவிட்டு அதன் பிறகு வாங்கி கொடுங்கள்.


தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்




முதலில் தங்கள் தகுதிக்கு ஏற்ப அதுவும் அவர்களுக்கு அத்தியாவசியமான பொருளாக இருந்தால் மட்டும் வாங்கி கொடுங்கள். இல்லை என்றால் உனக்கு அந்த பொருள் தான் வேண்டும் என்றால் நீயாக வேலைக்கு சென்று உழைத்து அந்தப் பணத்தில் பொருள் வாங்கிக் கொள் என்று சொல்லி விடுங்கள்... நீங்கள் இப்படி எதை கேட்டாலும் வாங்கிக் கொடுப்பதினால் அவர்களுக்கு நம் தேவைகள் அனைத்தையுமே அப்பா அம்மா நிறைவேற்றி விடுவார்கள் அதனால் நாம் வேலைக்கு செல்ல வேண்டாம் என்ற எண்ணம் தான்  உருவாகும்.


எந்த ஒரு ஆண் குழந்தையும் சரி ஓரளவுக்கு வயது வரும் வரை தான் தந்தையின் சம்பாத்தியத்தில் இருந்து சாப்பிட வேண்டும்... வேலைக்கு செல்லும் வயது வந்ததுக்கு அப்புறம் கூட அப்பாவின் சம்பாத்தியத்தில் இருந்து சாப்பிட வேண்டும் என்று நினைக்க கூடாது... இதுவரையிலும் நம்முடைய எல்லா தேவைகளையும் நம் தாய் தந்தையர் தான் நிறைவேற்றி இருக்கிறார்கள் இனிமேல் நான் வேலைக்கு சென்று என்னுடைய தாயையும் தந்தையும் காப்பாற்றுவேன் என்று நினைக்க வேண்டும்.


இன்றும் எத்தனையோ வீடுகளில் குடித்துவிட்டு ஊதாரியாக சுற்றும் தந்தை உள்ள வீட்டில்  அந்தக் குடும்ப பாரத்தை தன் தலையில் போட்டுக்கொண்டு முடிந்த அளவுக்கு எல்லா வேலையும் செய்து தன்னுடைய ஆசைகளையும்  ஏக்கங்களையும் மனதிற்குள் போட்டு புதைத்து விட்டு குடும்பத்திற்காக உழைக்கும் மகன்களும் இருக்க தான் செய்கிறார்கள்.. அதேபோல  குறிப்பிட்ட வயது வந்தும் கூட  வயதான பெற்றோர் வேலைக்கு சென்று உழைத்து வரும் சம்பாத்தியத்தில் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இன்றி தன்னுடைய சுயநலத்தை  மட்டுமே எண்ணி  பெற்றவர்களின் உழைப்பில் வாழும் சில மகன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...


பொறுப்புடன் வளர்வோம்




எல்லா பெற்றோர்களும் பொறுப்பற்றவர்களாக இருப்பவர்கள் இல்லை. இன்றும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து அவசியமான தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்... அதேபோல எல்லா குழந்தைகளும் இதே போல ஆடம்பரத்திற்கு ஆசைப்படுவதில்லை.. குடும்ப சூழ்நிலை அறிந்து தன்னுடைய ஆசைகளை தனக்குள்ளே புதைத்துக் கொண்டு தன்னால் முடிந்த அளவுக்கு  குடும்பத்திற்காக உழைக்கும் இளைஞர்களும்  இருக்க தான் செய்கிறார்கள்... அவர்களைப் பொறுப்பாக வளர்த்த பெற்றோர்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்களே...


ஒரு குழந்தை இந்த பூமியில் நல்லவனாகவும் பொறுப்பானவனாகவும், புத்திசாலியாகவும் தைரியமானவனாகவும் மாறுவதற்கு முக்கிய காரணமே பெற்றவர்கள் தான் அதை மனதில் குறித்துக் கொள்ளுங்கள்... அதேபோல பெற்றவர்கள் இந்த பூமியில் தலை நிமிர்ந்து வாழ்வதும் தலை குனிந்து வாழ்வதும்  பிள்ளைகளின் கையில்தான் உள்ளது.!

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்