டெல்லி: ஜனநாயகத்தைக் காப்பதற்கும், தேசத்தைக் காப்பதற்கும் ரத்தம் சிந்திய குடும்பம் நாங்கள். இந்த மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் அஞ்சப் போவதில்லை என்று பிரியங்கா காந்தி வத்ரா ஆவேசமாக கூறியுள்ளார்.
ராகுல் காந்தியின் தகுதி நீக்க நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சி ஆவேசமடைந்துள்ளது. பல்வேறு வகையான போராட்டங்களை அது கையில் எடுக்கவுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் சகோதரியும், உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவருமான பிரியங்கா காந்தி வத்ரா இதுகுறித்து கூறுகையில்,
பாஜக செய்தித் தொடர்பாளர்களாக இருக்கட்டும், அமைச்சர்களாக இருக்கட்டும்,எம்.பிக்களாக இருக்கட்டும்.. ஏன் பிரதமரே கூட தொடர்ந்து எனது குடும்பத்தை அவதூறாகத்தான் பேசி வந்துள்ளனர். ராகுல் காந்தி, இந்திரா காந்தி, எனது தாயார், ஜவஹர்லால் நேரு என அனைவரையுமே அவதூறாகத்தான் பேசி வருகின்றனர். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் மோசமாக விமர்சிப்பதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். இது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது நாட்டுக்கே தெரியும்.
எந்த நீதிபதியும் 2 ஆண்டு சிறைத் தண்டனையை அவர்களுக்கு விதிக்கவில்லை.. அவர்களை தகுதி நீக்கம் செய்யவில்லை.. இதையும் நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அதானி விவகாரத்தை எனது சகோதரர் நாடாளுமன்றத்தில் பெரிதாக எழுப்பியதால்தான் இதெல்லாம் நடக்கிறது. அதானியைப் பற்றிப் பேசினால் அவர்களுக்கு கோபம் வருகிறது.
எங்களது குடும்பம் இந்தியாவுக்காக குரல் கொடுத்த குடும்பம். சத்தியத்திற்காக போராடிய குடும்பம். பல தலைமுறைகளாக நாட்டுக்காக உழைத்த குடும்பம். இது தேசத்திற்காகவும், ஜனநாயகத்தைக் காப்பதற்காகவும் ரத்தம் சிந்திய குடும்பம். ராகுல் காந்தி ஒரு போதும் பணிந்து போக மாட்டார் என்று ஆவேசமாக கூறினார் பிரியங்கா காந்தி.
{{comments.comment}}