டொமினிகா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 தரமான சம்பவங்களைச் செய்துள்ளார் ஆர். அஸ்வின்.
டெஸ்ட் கிரிக்கெட்டில், நடப்பு பந்து வீச்சாளர்களில் அதிக அளவிலான 5 விக்கெட்களை வீழ்த்திய பவுலர் என்பது ஒரு சாதனை. இன்னொன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை அஸ்வின் இன்று பூர்த்தி செய்துள்ளார்.
அஸ்வின் இன்று தனது 33வது 5 விக்கெட்டை வீழ்த்தி அதிர வைத்து விட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அளவிலான 5 விக்கெட்களை வீழ்த்திய சாதனையாளர்கள் வரிசையில், முத்தையா முரளிதரன் (67 முறை), ஷான் வார்னே (37), ரிச்சர்ட் ஹாட்லி (36), கும்ப்ளே (35), ரங்கன ஹெராத் (34) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் அஸ்வின் தற்போது உள்ளார்.
அஸ்வின் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இதுவரை 5 முறை 5 விக்கெட்களைச் சாய்த்து அசத்தியுள்ளார். அவர் அதிகப்படியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் அதாவது 7 முறை 5 விக்கெட்களைச் சாய்த்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் லண்டனில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு அஸ்வினுக்கு மறுக்கப்பட்டிருந்தது. அதற்கு வட்டியும் முதலுமாக இன்றைய போட்டியில் அசத்தி விட்டார் அஸ்வின்.
கேப்டன் கிரெக் பிராத்வெய்ட், டாஜெனரின் சந்தர்பால், அலிக் அதானசே, ஜேசன் ஹோல்டர் மற்றும் ஜோமல் வாரிகன் ஆகிய 5 விக்கெட்களை இன்று வீழ்த்தினார் அஸ்வின். 24.3 ஓவர்களை வீசிய அவர் 2.44 என்ற எக்கானமி ரேட்டுடன் 60 ரன்களை மட்டுமே கொடுத்து இந்த சாதனையைச் செய்தார்.
இன்றைய 5 விக்கெட் சாதனையின் மூலமாக இந்த பட்டியலில் 32 முறை 5 விக்கெட் வீழ்த்தி இடம் பெற்றிருந்த ஜேம்ஸ் ஆண்டர்சனை முந்தியுள்ளார் அஸ்வின்.
சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்கள்
சர்வதேச போட்டிகளில் அஸ்வின் 700 விக்கெட்களைத் தாண்டியுள்ளார். இன்றைய 5 விக்கெட் மூலமாக அவர் 702 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். மொத்தம் 271 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை அவர் செய்துள்ளார். அவரது பெஸ்ட் என்று பார்த்தால் 59 ரன்களுக்கு 7 விக்கெட்கள் என்பதுதான். 33 முறை 5 விக்கெட்களையும், 7 முறை பத்து விக்கெட்களையும் அவர் வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அஸ்வின் (93 டெஸ்ட் போட்டிகளில்) 479 விக்கெட்களையும், 113 ஒரு நாள் போட்டிகளில் 151 விக்கெட்களையும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்களையும் அஸ்வின் சாய்த்துள்ளார்.
அதிக அளவிலான சர்வதேச விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் 1347 விக்கெட்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அஸ்வின் 16வது இடத்தில் இருக்கிறார்.
முன்னதாக மேற்கு இந்தியத் தீவுகளை முதல் இன்னிங்கில், 150 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்தியா பின்னர் தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்களை எடுத்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ரோஹித் சர்மா 30 ரன்களுடனும், அறிமுக வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
{{comments.comment}}