புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம் இன்று கண்ணீர் அஞ்சலியுடன் நடைபெற்றது.
புதுச்சேரி சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமியை, கருணாஸ் என்ற 19 வயது இளைஞனும் விவேகானந்தன் என்ற 59 வயது முதியவரும் மற்றும் சில சிறார்கள் அடங்கிய கும்பலும் சேர்ந்து கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து சித்திரவதை செய்துள்ளனர். இந்த குரூரச் செயலின் போது அவர்கள் குழந்தையை மிகக் கொடூரமாக சித்தரவதை செய்து கடைசியில் கொலை செய்து வேட்டியில் மூடையாகக் கட்டி சாக்கடையில் போட்டு விட்டு சென்று விட்டனர்.
இந்த சம்பவம் புதுச்சேரி மட்டுமல்லாது அருகாமையில் உள்ள தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நிர்பயாவை எந்த அளவுக்கு கொடூரமாக கொலை செய்தார்களோ அதைவிட மோசமான முறையில் புதுச்சேரி சிறுமியை இந்த கும்பல் கொலை செய்து அக்கிரமமாக நடந்துள்ளது மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. நேற்று முழுவதும் புதுச்சேரி ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு போராட்டங்கள் வெடித்தன.
இதன் காரணமாக குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும், அவர்கள் சிறையில் இருந்து வெளியே வர முடியாத அளவுக்கு கடுமையான தண்டனை வாங்கி தரப்படும், கடைசிவரை அவர்கள் சிறையிலேயே கழிப்பார்கள் என்ற உத்தரவாதத்தை முதல்வர் ரங்கசாமி சிறுமியின் பெற்றோரிடமும் குடும்பத்தாரிடமும் தெரிவித்ததைத் தொடர்ந்து உடலை வாங்கிக் கொள்ள குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதன் பிறகு ஆயிரக்கணக்கானோர் சூழ சிறுமியின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு சிறுமியின் உடலுக்கு துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இன்னும் ஒரே வாரத்தில் சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்று அப்போது டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று காலை சிறுமியின் உடல் நல்லடக்கம் நடைபெற்றது. முன்னதாக சோலை நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து உடல் எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வீரமுழக்கம் என்ற கோஷத்தை எழுப்பிய படி வந்தனர்.
போதைப் பொருட்களுக்கு எதிரான கோஷமும் எழுப்பப்பட்டது. கஞ்சா கும்பலை தடுக்கத் தவறிய காவல்துறை ,அரசியல்வாதிகளையும் கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. இறுதியில் சிறுமியின் உடல் பாப்பம்மாள் கோவில் பகுதியில் உள்ள மயானத்திற்குக் கொண்டுவரப்பட்டு அங்கு சடங்குகள் செய்யப்பட்டு அதன் பிறகு இறுதியாக உடல் நல்லடக்கம் நடைபெற்றது. உடலை அடக்கம் செய்தபோது சிறுமி பயன்படுத்திய புத்தகங்களையும், கடைசியாக அவர் விளையாடிய பொம்மைகள் அவருடைய உடைகள் உள்ளிட்டவையும் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி சிறுமிக்கு பிரியாவிடை கொடுத்தனர். சிறுமி மறைவால் ஏற்பட்டுள்ள கொதிப்பான நிலையைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையிலான அதிகாரிகள் குழுவும் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரித்து எவ்வளவு சீக்கிரம் தண்டனை வாங்கித் தர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தண்டனை பெற்றுத் தர காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}