சென்னை: எலான் மஸ்க் ஒரு தமிழ் மீம்ஸை போட்டு விட்டாலும் விட்டார், டிவிட்டரே கலகலத்துப் போயுள்ளது. ஆனால் இவர்களை விட ரொம்ப ரொம்ப ஹேப்பியாக இருப்பவர் நம்ம தயாரிப்பாளர் ஆதம் பாவாதான்.. காரணம், அந்த மீம்ஸில் இடம் பெற்றுள்ள படம் இவர் தயாரித்த தப்பாட்டம் படத்தின் ஸ்டில் ஆச்சே!
எக்ஸ் தளத்தின் ஓனரான எலான் மஸ்க் ஒரு மீம்ஸை ஷேர் செய்திருந்தார். அதாவது ஆப்பிள் ஐபோன்களில் எந்த அளவுக்கு பாதுகாப்பின்மை இருக்கிறது என்பதை கிண்டலடிக்கும் மீம்ஸ் அது. அதற்காக அவர் ஷேர் செய்திருந்த மீம்ஸ், ஒரு தமிழ் மீம் ஆகும். தமிழ்நாட்டில் ரொம்பப் பிரபலமான மீம்ஸ் அது. இதுதான் நம்மவர்களை உற்சாகப்பட வைத்துள்ளது.
தமிழ் மீம்ஸை ஷேர் செய்த அண்ணன் எலான் மஸ்க்குக்கு நன்றி.. இப்படிக்கு வட்டச் செயலாளர் வண்டு முருகன் என்று போஸ்டர் ஒட்டாத குறையாக பலரும் கொண்டாடிக் கொண்டுள்ளனர். தயாரிப்பாளர் ஆதம் பாவா செம ஹேப்பி மோடில் இருக்கிறார். காரணம், அவரது படத்தில் இடம் பெற்ற ஸ்டில்தான் இந்த மீம்ஸ்.
இதுகுறித்து ஆதம் பாவா கூறும்போது, காலையில் இருந்தே போன்கால்ஸ் வந்துகொண்டே இருக்கிறது. தப்பாட்டம் படம் என்னுடைய முதல் படம். சின்ன வயதில் இருந்தே நான் பார்த்து வளர்ந்த பல விஷயங்களை அதில் சொல்லி இருந்தோம். குறிப்பாக தப்பாட்டம் என்று சொல்லப்படும் பறை இசைக் கலை பற்றியும் எவரோ சொல்வதை எண்ணி ஒரு பெண் மீது அவதூறு சொல்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் சொன்ன படம்.
தப்பாட்டம் படம் எனக்கு நல்ல நண்பர்களை சினிமாவிற்குள்ளும் சினிமாவிற்கு வெளியேயும் கொடுத்தது. அதன் விளைவால் தான் களவாணி 2, பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இன்று எலான் மாஸ்க் அந்த படத்தின் ஸ்டில்லை பகிர்ந்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளார். இந்த படத்தை எலான் மாஸ்க் பகிர்ந்திருந்தாலும் அந்த பெருமை எல்லாம் அவர் வரைக்கும் இதைக் கொண்டு சேர்த்த ரசிகர்களையே சேரும்.
எலான் மாஸ்க், அவரிடம் கொண்டு சேர்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், சமூக வலைதளவாசிகள், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் என அனைவருக்கும் என் நன்றிகள். நல்ல படைப்புகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். இன்னும் சில கதைகள் கேட்டு இருக்கிறேன். உங்கள் ஆதரவு எப்போதும் எனக்கு இருக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ஆதம் பாவா.
அத்தோடு ஒரிஜினல் தப்பாட்டம் படத்தின் இன்னொரு ஸ்டில்லையும் போட்டு அதில், எலான் மஸ்க்கையும் டேக் செய்துள்ளார்.
{{comments.comment}}