டெல்லி: பாஜகவின் வரலாறு 2 எம்.பிக்களுடன் 1984ம் ஆண்டு தொடங்கியது. இன்று நம்மிடம் 303 எம்.பிக்கள் உள்ளனர். சிறப்பு வாய்ந்த, உத்வேகம் அளிக்கக் கூடிய கொள்கைப் பயணம் இது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டெல்லியில் பாஜகவின் மத்திய அலுவலகம் விஸ்தரித்து கட்டப்பட்டுள்ளது. அந்தக் கட்டடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பாஜகவின் வளர்ச்சி குறித்து பெருமிதம் வெளியிட்டார். பிரதமர் மோடி பேச்சிலிருந்து சில துளிகள்:
2018ம் ஆண்டு நான் கட்சி அலுவலகத்தைத் தொடங்கி வைத்தபோது, நமது கட்சித் தொண்டர்கள்தான் கட்சியின் ஆன்மா என்று கூறினேன். இன்று கட்சியின் விஸ்தரித்துக் கட்டப்பட்டுள்ள அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளேன். கட்டடம் மட்டும் விஸ்தரிக்கப்படவில்லை.. மாறாக நமது தொண்டர்களின் அபிலாஷைகளும் விஸ்தீரணமாகியுள்ளன. அவர்களது உறுதிப்பாடும் விஸ்தரித்துள்ளது. கோடிக்கணக்கான தொண்டர்களின் உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன்.
நமது கட்சியின் 44வது ஆண்டு விழா நெருங்கி வருகிறது. நாம் ஓய்வில்லாத, நெடிய பயணத்தில் ஈடுபட்டுள்ளோம். வரும் நாட்களில் நாம் 44வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடவுள்ளோம். நமது கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி இது. ஒவ்வொருவரும் கொண்ட கொள்கையில் உறுதியாகவும், வலிமையாகவும், தொடர்ந்து தீவிரமாகவம் ஈடுபட்டதன் விளைவே இந்த வெற்றி. இது மிகவும் உத்வேகம் அளிக்கக் கூடியது.
டெல்லி அஜ்மேரி கேட் பகுதியில் ஒரு சிறிய அலுவலகத்தில் பாரதிய ஜன சங்கம் தொடங்கப்பட்டது. அப்போது நாம் மிக மிக சிறிய கட்சியாக இருந்தோம். ஆனால் நமது கனவுகள் மிகப் பெரியவை. 1980ம் ஆண்டு பாஜக உருவாக்கப்பட்ட பின்னர், ராஜேந்திர பிரசாத் மார்க்கில் நமது அலுவலகம் இடம் மாறியது. அசோகா ரோட்டிலும் நமது அலுவலகம் சில காலம் இருந்தது. தீன்தயாள் மார்க்கிலும் நாம் செயல்பட்டுள்ளோம்.
நிறைய ஏற்றத்தாழ்வுகளை நமது கட்சி கண்டுள்ளது. அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டபோது ஜனநாயகத்தைக் காக்க நாம் எந்த தியாகத்துக்கும் தயாராக இருந்தோம். 1984ம் ஆண்டு என்ன நடந்தது.. யாராலும் அதை மறக்க முடியாது. 1984ம் ஆண்டு நடந்த மிகப் பெரிய கலவரத்திற்குப் பின்னர் காங்கிரஸுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. அத்தனை கட்சிகளும் அதன் வேகத்தில் தூக்கி வீசப்பட்டன, நாமும்தான். ஆனால் நாம் தோல்வி அடையவில்லை. அந்தத் தோல்வி நம்மை துவண்டு போக வைக்கவில்லை. கட்சியை நாம் செதில் செதிலாக வலுவாக்கினோம்.
1984 தேர்தலில் 2 எம்.பிக்களுடன் நாம் நாடாளுமன்றத்தில் நுழைந்தோம். 2019ல் நமக்கு 303 பேர் கிடைத்தனர். பாஜக மட்டுமே இந்தியா முழுவதும் விஸ்தரித்துக் கிடக்கும் மிகப் பெரிய அரசியல் கட்சி. நாட்டின் அனைத்து மூலைகளிலும் இருக்கும் பான் இந்தியா கட்சி பாஜக மட்டுமே.
குடும்பங்கள் நடத்தி வரும் அரசியலுக்கு மத்தியில், பாஜக மட்டுமே இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. வடக்கிலும் நாம் இருக்கிறோம்.. தெற்கிலும் இருக்கிறோம்.. மேற்கிலும் இருக்கிறோம்.. கிழக்கிலும் உள்ளோம்.. வட கிழக்கிலும் நம் கொடி பறக்கிறது. தமிழ்நாட்டில் நமது கட்சி வலுவாகி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், பூத் அளவில் கட்சி வலுவடைந்து வருகிறது என்றார் பிரதமர் மோடி.
{{comments.comment}}