ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்.. நாட்டுக்கு பல நன்மைகளை வழங்கும்.. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

Jan 25, 2025,08:42 PM IST

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நிர்வாகத்தில் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும், கொள்கை முடக்கத்தைத் தடுக்கும், வளங்கள் திசைதிருப்பப்படுவதையும் நிதிச் சுமையையும் குறைக்கும். மேலும் பல நன்மைகளை வழங்கும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.


இந்தியா நாளை தனது 76வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உரையாற்றியுள்ளார். குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்:


எனதருமை குடிமக்களே, வணக்கம்!


வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தருணத்தில் உங்களிடையே உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். குடியரசு தின விழாவையொட்டி உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 75 ஆண்டுகளுக்கு முன், ஜனவரி 26 அன்று, நமது அடிப்படை ஆவணமான இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.


ஏறத்தாழ மூன்று ஆண்டு விவாதங்களுக்குப் பின், 1949 நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது. அந்த நாள், நவம்பர் 26, 2015 முதல், சம்விதான் திவஸ், அதாவது அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

குடியரசு தினம் என்பது அனைத்து குடிமக்களுக்கும் கூட்டான மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிக்கும் நிகழ்வாகும். எழுபத்தைந்து ஆண்டுகள், ஒரு தேசத்தின் வாழ்க்கையில் கண் சிமிட்டல் நேரம் மட்டுமே என்று சிலர் கூறலாம். இல்லை, இது கடந்துபோன 75 ஆண்டுகள் அல்ல என்று நான் கூறுவேன். 


நீண்டகாலமாக உறங்கிக் கிடந்த இந்தியாவின் ஆன்மா மீண்டும் விழித்தெழுந்து, உலக நாடுகளின் நட்பில் தனக்குரிய இடத்தை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட தருணம் இது. பழமையான நாகரிகங்களில், இந்தியா ஒரு காலத்தில் அறிவு மற்றும் ஞானத்தின் ஆதாரமாக அறியப்பட்டது. ஆயினும் அங்கு ஓர் இருண்ட காலம் வந்தது. காலனிய ஆட்சியின் கீழ், மனிதத் தன்மையற்ற சுரண்டல் கடுமையான வறுமைக்கு இட்டுச் சென்றது.




அந்நிய ஆட்சியின் தளைகளிலிருந்து தாய்நாட்டை விடுவிக்க பெரும் தியாகங்களைச் செய்த துணிச்சல் மிக்க மனிதர்களை இன்று நாம் நினைவுகூர வேண்டும். சிலர் நன்கு அறியப்பட்டவர்கள், சிலர் அண்மைக்காலம் வரை அதிகம் அறியப்படாதவர்கள். தேச வரலாற்றில் தற்போது உண்மையான அளவில்  அங்கீகரிக்கப்பட்டு வரும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிரதிநிதியாக விளங்கும் பகவான் பிர்ஸா முண்டாவின்150-வது பிறந்த ஆண்டை நாம் இந்த ஆண்டு கொண்டாடுகிறோம்.


இருபதாம் நூற்றாண்டின் தொடக்க தசாப்தங்களில், அவர்களின் போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட, நாடு தழுவிய சுதந்திரப் போராட்ட இயக்கமாக வலுப்பெற்றன. மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், பாபாசாகேப் அம்பேத்கர் போன்றவர்கள் அதன் ஜனநாயக நெறிமுறைகளை கண்டறிய  உதவியது தேசத்தின் நல்வாய்ப்பாகும். நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை நவீன காலத்தில் நாம் கற்றுக்கொண்ட கோட்பாடுகள் அல்ல; அவை எப்போதும் நமது நாகரிக பாரம்பரியத்தின் பகுதியாக இருந்து வருகின்றன. இந்தியா புதிதாகச் சுதந்திரம் அடைந்த போது, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் குடியரசின் எதிர்காலம் குறித்து அவநம்பிக்கை கொண்டிருந்த விமர்சகர்கள் முற்றிலும் தவறானவர்கள் என்று எவ்வாறு நிரூபிக்கப்பட்டது  என்பதையும் இது விளக்குகிறது.


நமது அரசியல் நிர்ணய சபையின் கலவையும் நமது குடியரசு விழுமியங்களுக்கு ஒரு சான்றாகும். இது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், அனைத்து சமூகங்களிலிருந்தும் பிரதிநிதிகளைக் கொண்டிருந்தது. சரோஜினி நாயுடு, ராஜ்குமாரி அம்ரித் கவுர், சுசேதா கிருபளானி, ஹன்சாபென் மேத்தா, மாலதி சவுத்ரி போன்ற தலைவர்கள் உட்பட அதன் உறுப்பினர்களில் 15 பெண்கள் இருந்தனர். உலகின் பல பகுதிகளில் பெண்களின் சமத்துவம் ஒரு தொலைதூர லட்சியமாக மட்டுமே இருந்தபோது, இந்தியாவில் தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்கள் தீவிரப் பங்களித்தனர்.


அரசியலமைப்புச் சட்டம் உயிரோட்டமான ஓர் ஆவணமாக மாறியுள்ளது. ஏனெனில் சமூக நல்லொழுக்கங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது தார்மீக வழிகாட்டியின் ஒரு பகுதியாக உள்ளன. இந்தியர்கள் என்ற நமது கூட்டு அடையாளத்தின் உறுதியான அடித்தளத்தை அரசியலமைப்புச் சட்டம்  வழங்குகிறது; அது நம்மை ஒரு குடும்பமாக ஒன்றிணைக்கிறது. 75 ஆண்டுகளாக, முன்னேற்றப் பாதையில் நம்மை இது வழிநடத்துகிறது. மிக அற்புதமான இந்த ஆவணத்தை நமக்கு விட்டுச் சென்ற வரைவுக் குழுவின் தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்கருக்கும், அரசியல் நிர்ணய சபையின் மற்ற மதிப்புமிக்க உறுப்பினர்களுக்கும், அவர்களுடன் தொடர்புடைய பல்வேறு அதிகாரிகளுக்கும், மற்றவர்களுக்கும்  இன்று நமது பணிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.

அன்பார்ந்த குடிமக்களே,


அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டு நிறைவு இளம் குடியரசின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தைக் குறிக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த போதும் அதற்குப் பிறகும் கூட, நாட்டின் பெரும் பகுதிகள் கடுமையான வறுமையையும், பட்டினியையும் எதிர்கொண்டன. ஆனால் நாம் இழக்காத ஒரு விஷயம் நம் மீதே நாம் கொண்டிருந்த நம்பிக்கை. ஒவ்வொருவரும் செழித்தோங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு சரியான சூழ்நிலைகளை உருவாக்க நாம் களமிறங்கினோம். நமது விவசாயிகள் கடுமையாக உழைத்து, உணவு உற்பத்தியில் நம் நாட்டை தன்னிறைவடையச் செய்தனர். நமது உள்கட்டமைப்பையும் உற்பத்தித் துறையையும்  மாற்றியமைக்க நமது தொழிலாளர்கள் அயராது உழைத்தனர். அவர்களின் சீரிய முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்தியப் பொருளாதாரம் இன்று உலகப் பொருளாதார நிகழ்வுப்போக்குகளில் செல்வாக்கு செலுத்துகிறது. இன்று சர்வதேச அரங்குகளில் இந்தியா தலைமைப் பதவிகளை வகிக்கிறது. 


நமது அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள செயல்திட்டம் இல்லாமல் இந்த மாற்றம் சாத்தியமாகி இருக்காது. அண்மை ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.  இது நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது; விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கைகளில் அதிகப் பணம் கிடைக்கிறது; அதிகமான மக்களை வறுமை நிலையிலிருந்து உயர்த்துகிறது. துணிச்சலான, தொலைநோக்குப் பார்வை கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் வரும் ஆண்டுகளிலும் இந்த நிகழ்வுப் போக்கினை நிலைநிறுத்தும். அனைவரையும் உள்ளடக்கியது என்பது நமது வளர்ச்சி சகாப்தத்தில் முக்கியமானதாகும். முன்னேற்றங்களின் பலன்கள் இயன்றவரை பரவலாக விநியோகிக்கப்படுகின்றன.


அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்கு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வரும் நிலையில், பிரதமரின் மக்கள் நிதித் திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் காப்பீட்டுத் திட்டம், முத்ரா திட்டம், புத்தொழில் இந்தியா, அடல் ஓய்வூதியத் திட்டம் போன்ற முன்முயற்சிகள் விரிவுபடுத்தப்பட்டு, பலதரப்பட்ட நிதி உதவித் திட்டங்களை அதிகமான மக்கள் அணுக வழிவகை செய்யப்பட்டுள்ளது.


அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக, வீட்டுவசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைத் தேவைகளை உரிமைகளாக மாற்றி, மக்கள்நலன் என்ற கருத்தை அரசு மறுவரையறை செய்துள்ளது. விளிம்பு நிலையில் உள்ள சமூகங்களுக்கு, குறிப்பாக ஷெட்யூல்ட் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உதவிக்கரம் நீட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக, மெட்ரிக் படிப்பு மற்றும் மெட்ரிக் படிப்புக்குப் பிந்தைய கல்வி உதவித்தொகைகள், தேசிய கல்வி உதவித்தொகைகள், வெளிநாட்டுக் கல்வி உதவித்தொகைகள், விடுதிகள் மற்றும் எஸ்சி சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி வசதிகள் உள்ளன.




வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் வாய்ப்புகளை அதிகரிக்கும் பிரதமரின்  ஷெட்யூல்ட் வகுப்பினர் முன்னேற்றத் திட்டம், ஷெட்யூல்ட் வகுப்பினரிடையே வறுமையை குறைப்பதில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தார்த்தி ஆபா பழங்குடியினர் கிராம உயர்வுத்  திட்டம், பிரதமரின் பழங்குடியினர் நியாய மகா அபியான் உள்ளிட்ட பழங்குடி சமூகங்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட தனித்துவத் திட்டங்கள் உள்ளன. சீர்மரபினர்,  நாடோடிகள், பகுதி நாடோடிகள் மேம்பாடு மற்றும் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே, கடந்த தசாப்தத்தில் சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், பொருள்போக்குவரத்து மையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துவது, வரவிருக்கும் தசாப்தங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் ஒரு தளத்தை உருவாக்கியுள்ளது. நிதித் துறையில் தொழில்நுட்பத்தை அரசு பயன்படுத்திய விதம் முன்மாதிரியாக உள்ளது. பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனை தெரிவுகள் மற்றும் நேரடி பயன் பரிமாற்ற முறை ஆகியவை அனைவரையும் உள்ளடக்குவதை ஊக்குவித்துள்ளன. இது கணிசமான அளவு மக்களை முறையான அமைப்பிற்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் அமைப்பில் முன்னெப்போதும் இல்லாத வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வந்துள்ளது. இந்த செயல்பாட்டில், சில ஆண்டுகளுக்குள் உலகின் மிகச் சிறந்த டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.


நொடித்துப் போதல் மற்றும் திவால் சட்டம் போன்ற பல்வேறு துணிச்சலான நடவடிக்கைகளால் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் வாராக்கடன்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டதால் வங்கி அமைப்பு ஆரோக்கியமான நிலையில் உள்ளது.


அன்பார்ந்த  குடிமக்களே,


நாம் 1947-ல் சுதந்திரம் பெற்றோம். ஆனால் காலனித்துவ மனநிலையின் பல எச்சங்கள் நம்மிடையே நீண்ட காலம் நீடித்தன. அண்மைக் காலமாக, அந்த மனநிலையை மாற்றுவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகளை நாம் காண்கிறோம். இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றி, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகியவற்றைக் கொண்டு வருவதற்கான முடிவு அத்தகைய முயற்சிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இந்திய நீதித்துறை மரபுகளின் அடிப்படையில், புதிய குற்றவியல் சட்டங்கள் குற்றவியல் நீதி அமைப்பின் மையத்தில் தண்டனைக்கு பதிலாக நீதி வழங்குவதை வைக்கின்றன. மேலும், புதிய சட்டங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எதிர்கொள்வதற்கு உயர் முன்னுரிமை அளிக்கின்றன.


இந்த அளவுக்கான சீர்திருத்தங்களுக்கு தொலைநோக்குப் பார்வையின் துணிச்சல் தேவை. நல்லாட்சியின் விதிமுறைகளை மறுவரையறை செய்வதாக உறுதியளிக்கும் மற்றொரு நடவடிக்கை, நாட்டில் தேர்தல் காலத்தை ஒத்திசைவாக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மசோதாவாகும். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் நிர்வாகத்தில் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும், கொள்கை முடக்கத்தைத் தடுக்கும், வளங்கள் திசைதிருப்பப்படுவதையும் நிதிச் சுமையையும் குறைக்கும். மேலும் பல நன்மைகளை வழங்கும்.

நமது நாகரீக பாரம்பரியத்துடன் புதிய ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. அந்த பாரம்பரியத்தின் செழுமையின் வெளிப்பாடாக தற்போது நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைப் பார்க்க முடியும். நமது பாரம்பரியங்கள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பாதுகாக்கவும், புத்துயிர் பெறவும் கலாச்சாரத் துறையில் உற்சாகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்தியா சிறந்த மொழிப் பன்முகத்தன்மை கொண்ட மையமாகும். இந்த வளத்தைப் பாதுகாக்கவும், கொண்டாடவும் அசாமி, வங்காளம், மராத்தி, பாலி மற்றும் பிராகிருத மொழிகளை செம்மொழிகளாக அரசு அங்கீகரித்துள்ளது. இந்தப் பிரிவில் ஏற்கனவே தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகியவை இடம்பெற்றுள்ளன.  தற்போது 11 செம்மொழிகளில் ஆராய்ச்சியை அரசு தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.


குஜராத்தின் வாட்நகரில் இந்தியாவின் முதல் தொல்பொருள் அனுபவ அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன், இது கிமு 800 முதல் மனித குடியேற்றத்திற்கான சான்றுகளைக் காட்டும் அகழ்வாராய்ச்சி தளத்திற்கு அருகில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகம் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பரந்த அளவிலான கலை, கைவினை மற்றும் கலாச்சாரக் கூறுகளை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கும்.


அன்பார்ந்த சக குடிமக்களே,


நாளைய இந்தியாவை வடிவமைக்கப் போவது நமது இளைய தலைமுறையினர்தான். கல்வி, இந்த இளம் மனங்களை வடிவமைக்கிறது. எனவே, கல்வித் துறையில் அரசு தனது முதலீட்டை அதிகரித்துள்ளதுடன், இந்தத் துறை தொடர்பான ஒவ்வொரு அளவுகோலையும் மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. இதுவரை கிடைத்த முடிவுகள் அதிகமாக  ஊக்கமளிக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் தரமான கற்றல், உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் கல்வியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பயிற்று மொழிக்காக, பிராந்திய மொழிகள் அதிக அளவில் ஊக்குவிக்கப்படுகின்றன. மாணவர்களின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது என்பதில் ஆச்சரியமில்லை. கடந்த பத்தாண்டுகளில் ஆசிரியர்களாக ஆனவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்பதால், இந்த மாற்றத்தில் பெண் ஆசிரியர்கள் மகத்தான பங்காற்றியிருக்கிறார்கள் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.


தொழிற்கல்வி மற்றும் திறன் கல்வியை விரிவுபடுத்துவதும், பிரதான நீரோட்டத்தில் இணைப்பதும் வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும். பெருவணிக நிறுவனங்கள்  துறையில் நமது இளைஞர்களுக்கு உள்ளகப் பயிற்சி  வாய்ப்புகளை வழங்குவதற்கான திட்டமும் இப்போது இதற்கு துணைபுரிகிறது.


பள்ளி அளவிலான கல்வியின் வலுவான அடித்தளத்துடன், இந்தியா அறிவின் பல்வேறு கிளைகளில், குறிப்பாக அறிவியலில், தொழில்நுட்பத்துடன் புதிய உயரங்களை எட்டி வருகிறது. உதாரணமாக, உலக அளவில் அறிவுசார் சொத்துரிமை தாக்கல் செய்வதில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் நமது  தரவரிசையை நாம் தொடர்ந்து மேம்படுத்தியுள்ளோம், 2020-  இல் 48-வது இடத்திலிருந்து 2024-ல்  39-வது  இடத்திற்கு நகர்ந்துள்ளோம்.


தன்னம்பிக்கை அதிகரித்து வருவதால், பல்வேறு முன்முயற்சிகள் மூலம் அதிநவீன ஆராய்ச்சியில் நமது பங்களிப்பை அதிகரித்து வருகிறோம். தொழில்நுட்பத்தின் இந்தப் புதிய எல்லையில் ஒரு துடிப்பான மற்றும் புதுமையான சூழல் அமைப்பை உருவாக்குவதை தேசிய குவாண்டம் இயக்கம்  நோக்கமாகக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், ரோபாட்டிக்ஸ் மற்றும் சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட பல மேம்பட்ட தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ள உள் ஒழுங்கு சைபர் இயற்பியல் அமைப்புக்கான தேசிய இயக்கத்துடன்  மற்றொரு குறிப்பிடத்தக்க தொடக்கம் உள்ளது. இந்தத் தொழில்நுட்பங்கள் சமீப காலம் வரை எதிர்காலம் என்று அழைக்கப்பட்டன, ஆனால் அவை வேகமாக நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன.


மரபணு இந்தியா திட்டம் இயற்கையை ஆராய்வதற்கான ஒரு உற்சாகமான முயற்சி மட்டுமல்ல; இந்திய அறிவியல் வரலாற்றில் இது ஒரு மெய்நிகரான தருணமாகும். அதன் முதன்மைத் திட்டத்தின் கீழ், 10,000 இந்தியர்களின் மரபணு வரிசைமுறை இந்த மாதத்தில் மட்டுமே மேலதிக ஆராய்ச்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த முன்னோடி திட்டம், உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, பொது சுகாதார அமைப்புக்கு ஊக்கமளிக்கும்.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சமீப ஆண்டுகளில் விண்வெளியில் மாபெரும் சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்த மாதம், இஸ்ரோ தனது வெற்றிகரமான விண்வெளி டாக்கிங் பரிசோதனையின் மூலம் தேசத்தை மீண்டும் பெருமைப்படுத்தியது. இந்தத் திறனைக் கொண்ட உலகின் நான்காவது நாடாக இந்தியா இப்போது மாறியுள்ளது.


ஒரு நாடு என்ற வகையில் நமது தன்னம்பிக்கை அதிகரித்து வருவது, விளையாட்டு மற்றும் விளையாட்டுத் துறைகளில் நமது வீரர்கள் சிலிர்ப்பூட்டும் வெற்றிக் கதைகளை எழுதியிருப்பதிலும் பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டு, ஒலிம்பிக் போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்கள் தங்கள் முத்திரையைப் பதித்தனர். பாராலிம்பிக் போட்டிகளில், நமது மிகப்பெரிய குழுவை அனுப்பினோம், அவர்கள் நமது சிறந்த செயல்திறனுடன் திரும்பி வந்தனர். ஃபிடே செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நமது ஆண்களும் பெண்களும் தங்கம் வென்றதால், நமது செஸ் சாம்பியன்கள் உலகைக் கவர்ந்தனர். 2024 -ம் ஆண்டில் விளையாட்டில் சாதனைகளை டி.குகேஷ் முறியடித்தார், அவர் இளம் உலக சதுரங்க சாம்பியன் ஆனார்.


அடித்தள அளவில் பயிற்சி வசதிகளில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தின் துணையுடன், இந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் வெற்றி உந்துதலால் நம்மை பெருமைப்படுத்தியதோடு, அடுத்த தலைமுறையினரை மேலும் மேலும் உயர்ந்த இலக்குகளை அடைய ஊக்குவித்துள்ளனர்.


வெளிநாடுகளில் வசிக்கும் நமது சகோதர சகோதரிகள் நமது கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் சிறந்த பகுதிகளை உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் சென்று, பல்வேறு துறைகளில் அவர்கள் சாதனை படைத்து நம்மைப் பெருமைப்படுத்தியுள்ளனர். அவர்கள் எப்போதும் தங்களை இந்தியாவின் கதையின் ஒரு பகுதியாகக் கருதுகிறார்கள். இந்த மாதத் தொடக்கத்தில் வெளிநாடுவாழ் இந்தியர் தின நிகழ்ச்சியில் நான் கூறியது போல, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அவர்கள் ஆக்கப்பூர்வமாகவும், உற்சாகத்துடனும் பங்கேற்பார்கள் என்று நான் நம்புகிறேன்.




அன்பார்ந்த சக குடிமக்களே,


பல்வேறு துறைகளில் கணிசமான மற்றும் உறுதியான முன்னேற்றம் காரணமாக, நாம் தலை நிமிர்ந்து எதிர்காலத்தை நோக்கி நடைபோடுகிறோம். நமது எதிர்காலத்தின் திறவுகோல் நமது இளைஞர்கள், குறிப்பாக இளம் பெண்கள். அவர்களின் கனவுகள் நாளைய இந்தியாவை வடிவமைக்கின்றன, அப்போது நாம் நமது சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடவிருக்கிறோம். இன்றைய குழந்தைகள் 2050-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று மூவர்ணக் கொடியை வணங்கும் வேளையில், ஒப்பற்ற நமது அரசியலமைப்புச் சட்டம் வழிகாட்டாமல் இந்த மகத்தான தேடல் சாத்தியமாகி இருக்காது என்று அவர்கள் அடுத்த தலைமுறையினருக்குச் சொல்வார்கள்.


நமது எதிர்காலச் சந்ததியினர் உலகில் சுதந்திர இந்தியா என்ற லட்சியத்தை மனதில் கொள்வார்கள். தேசப்பிதா மகாத்மா காந்தியின் வார்த்தைகளில் [நான் மேற்கோள் காட்டுகிறேன்] "சுயராஜ்யம் என்பது நம்மை நாகரிகப்படுத்துவதற்கும், நமது நாகரிகத்தைத் தூய்மைப்படுத்தி நிலைப்படுத்துவதற்கும் இல்லையென்றால், அதனால் எந்தப் பயனும் இல்லை. நமது நாகரிகத்தின் சாராம்சம் என்னவென்றால், நமது பொது அல்லது தனிப்பட்ட விவகாரங்கள் அனைத்திலும் ஒழுக்கத்திற்கு ஒரு தலையாய இடத்தை வழங்குகிறோம்." 


காந்தியடிகளின் கனவுகளை நனவாக்க பாடுபடுவதற்கான நமது உறுதிப்பாட்டை இன்று நாம் மீண்டும் உறுதி செய்வோம். உண்மை மற்றும் அகிம்சை என்ற அவரது தாரக மந்திரங்கள் உலகம் முழுவதற்கும் தொடர்ந்து பொருத்தமானதாக இருக்கும். உரிமைகளும் கடமைகளும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் மட்டுமே - உண்மையில், உரிமைகளின் உண்மையான ஆதாரம் கடமை என்று அவர் நமக்குக் கற்பித்தார். நமது மனித அண்டை வீட்டாரிடம் மட்டுமல்ல, நமது பிற அண்டை நாடுகளான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், ஆறுகள் மற்றும் மலைகள் மீதும் இரக்கம் காட்டுவது குறித்த அவரது பாடங்களையும் இன்று நாம் நினைவு கூர்கிறோம்.


பருவநிலை மாற்றத்தின் உலகளாவிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் முயற்சிகளுக்கு நாம் ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும். இந்த விஷயத்தில் இரண்டு முன்மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலக அளவில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் அதிக முனைப்புடன் செயல்பட ஊக்குவிப்பதற்காக சுற்றுச்சூழலுக்கான வாழுக்கைமுறை இயக்கம்  என்ற மக்கள் இயக்கத்தை இந்தியா வழிநடத்தி வருகிறது. கடந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று நாம் ஒரு தனித்துவமான இயக்கத்தைத் தொடங்கினோம், "  தாயின் பெயரில் ஒருமரம் " என்ற தனித்துவமான இயக்கத்தை இது தொடங்கியது, இது நமது தாய்மார்கள் மற்றும் இயற்கை அன்னையின் சக்தியைப் போற்றுகிறது. 80 கோடி மரக்கன்றுகளை நடவு செய்யும் அதன் இலக்கு காலக்கெடுவுக்கு முன்பே எட்டப்பட்டது. மக்கள் தங்கள் சொந்த இயக்கங்களாக ஏற்றுக்கொள்ளக்கூடிய இதுபோன்ற புதுமையான நகர்வுகளிலிருந்து உலகம் கற்றுக்கொள்ள முடியும்.


அன்பார்ந்த சக குடிமக்களே,


குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது எல்லையைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கும், எல்லைக்குள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கும், துணை ராணுவப் படையினருக்கும் எனது வாழ்த்துக்கள். நீதித்துறை, அதிகார வர்க்கம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நமது தூதரகங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

நன்றி.

ஜெய் ஹிந்த்!

ஜெய் பாரத்!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டங்ஸ்டன் போராட்டத்திற்குக் கிடைத்தது மாபெரும் வெற்றி.. அனைவருக்கும் நன்றி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆளுநர் ஆர்.என். ரவி. குடியரசு தின விருந்து.. அதிமுக, பாஜக பங்கேற்பு.. திமுக கூட்டணி புறக்கணிப்பு!

news

அரிட்டாபட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. 11,608 பேர் மீதான டங்ஸ்டன் வழக்கு மொத்தமாக ரத்து!

news

ஜன நாயகன்.. காலையில் செல்பி புள்ளை.. மாலையில் நான் ஆணையிட்டால்.. அடுத்தடுத்து விருந்து வைத்த விஜய்

news

வேங்கைவயல் விவகாரம்.. சிபிஐ விசாரணை தேவையில்லை.. எஸ்ஐடி விசாரணை வேண்டும்.. விஜய்

news

பூஜை போட்டாச்சு.. மேலூர் அருகே பிரமாண்ட கட்டடத்திற்கு இடம் மாறுகிறது மதுரை மத்திய சிறை

news

பத்மபூஷண் விருது... குவியும் வாழ்த்துகள்.. ஆனால் அஜீத் குமார் என்ன சொல்லிருக்கார் தெரியுமா?

news

Republic Day: தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.. டெல்லியில் கோலாகல விழா!

news

மெரீனாவில் கோலாகலம்.. தேசியக் கொடி ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.. கண்கவர் நிகழ்ச்சிகளுடன் விழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்