டாஸ்மாக் குறித்த பேச்சு... துரைமுருகனுக்கு எதிராக வார்த்தையை விட்ட பிரேமலதா விஜயகாந்த்!

Jun 29, 2024,10:13 PM IST

சென்னை : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழகத்தில் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில் கள்ளச்சாராயம் குறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை குறித்து கடுமையான வார்த்தையைப் பயன்படுத்தி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் தள பக்க பதிவின் மூலம் விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு சட்டசபையில் இன்று அமைச்சர் துரைமுருகன் பேசும்போது கள்ளச்சாராய விவகாரம் குறித்துக் குறிப்பிட்டார். அவர் பேசுகையில், பலரும் பூரண மதுவிலக்கு பற்றி பேசுகின்றனர், ஆனால் அப்போதே கருணாநிதி கூறியிருந்தார்; கர்நாடகா,கேரளா, ஆந்திரா,புதுச்சேரி என சுற்றி இருக்கும் மாநிலங்களில் மதுவிற்கும் போது தமிழ்நாடு மட்டும் எப்படி பற்றிக் கொள்ளாத கற்பூரமாக பாதுகாக்கப்பட முடியும்? உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. ஆனால் அரசாங்கம் விற்கும் மதுவில் அவர்களுக்கு தேவையான கிக் இல்லாததால், கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர்.


அரசாங்கம் விற்கும் சரக்கு அவர்களுக்கு SOFT DRINK போல மாறிவிடுகிறது. எனவே விட்டில் பூச்சி விளக்கில் போய் விழுவதை போன்று விழுந்து செத்து விடுகின்றனர். அதற்காக தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேஷன் திறக்க முடியாது. மனிதனாய் பார்த்துத் தான் திருந்த வேண்டும். கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என்று கூட சட்டம் இயற்றலாம். ஆனால் எல்லாத்துக்கும் ஒரு நியாயம் இருக்க வேண்டும்; நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என அமைச்சர் துரைமுருகன் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.




இது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: 


துரைமுருகன் அவர்கள் டாஸ்மாக்கில் கிக் இல்லை,என்று அறிக்கை வெளியிட்டிருப்பது  மிகவும் கண்டனத்திற்குரியது. "டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை…" என ஒரு மூத்த அமைச்சர், அதுவும் சட்டசபையில் முதலமைச்சரை வைத்துக் கொண்டே கூறுவது , கிறுக்குத்தனமான ஒரு செயலாகத் தான் மக்கள் அனைவருமே  பார்க்கிறார்கள். மூத்த அமைச்சர்  இப்படியொரு பதில் அளிப்பது மிக மிகக் கண்டனத்திற்குரியது. 


டாஸ்மாக்  கடைகளில் கிக் இல்லை, என்றால் அந்த அளவு தரம் இல்லாத ஒரு  டாஸ்மாக்கை  தமிழக அரசு நடத்துகிறது. இந்த தரம் இல்லாத அரசு தன் நிலையை தாங்களே ஒப்புக்கொண்டுள்ளது என்பதுதான் இதற்கு அர்த்தம்.  டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக ஒழித்து, போதை இல்லா தமிழகத்தை உருவாக்கத் தற்போதைய தமிழக  அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும். 


குடியை மக்களுக்குக் கொடுத்துக் கோடிகளை நீங்கள் சம்பாதிக்க கோடிக்காணக்கான மக்களை  ஏமாற்றுவது  ஏற்புடயதல்ல. எனவே தமிழகத்தில் ஏற்பட்ட இத்தனை இறப்புகளுக்கும் தற்போதைய தமிழக அரசு தான் காரணம் என்பதை துரைமுருகன்  அவர்கள்  தன் வாயினாலே ஒப்புக்கொண்டார். ஒரு மூத்த அமைச்சரின் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.


பிரேமலதாவின் பழைய கோபம்


2016ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது தேமுதிகவை தன் பக்கம் இழுக்க திமுக கடுமையாக முயன்று வந்தது. மறைந்த கருணாநிதி, தேமுதிக நிச்சயம் கூட்டணிக்கு வரும் என்று நம்பிக்கையுடன் இருந்தார். தேமுதிகவுக்காக நிறைய விஷயங்களை விட்டுக் கொடுக்கவும் திமுக தயாராக இருந்தது. தேமுதிக தரப்புடன் தீவிரப் பேச்சுவார்த்தையும் நடந்தது. பழம் நழுவி பாலில் விழும் என்றும் கருணாநிதி கூறி வந்தார்.


இந்த நிலையில்தான் தேமுதிகவுடன் நடக்கும் பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அதற்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அவர்கள் எங்களுடனும் பேசுகிறார்கள், அதிமுகவுடனும் பேசுகிறார்கள் என்று உடைத்துப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். 


இதனால் தேமுதிக தரப்பு அதிர்ச்சி அடைந்தது. துரைமுருகன் இப்படிப் பேசலாமா என்று காட்டமாக அப்போது கருத்து தெரிவித்திருந்தது தேமுதிக. அந்த சம்பவத்திலிருந்தே துரைமுருகன் மீது தேமுதிக தரப்பு குறிப்பாக பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோர் சற்று கோபமாகத்தான் இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் துரைமுருகனை கடுமையாக சாடி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். ஆனால் தமிழ்நாட்டின் மூத்த தலைவரை இவ்வளவு கடுமையான வார்த்தையால் பிரேமலதா விமர்சித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்