சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியி தண்டபாணியின் மனதை தைத்த நிகழ்வுகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் இதயங்களையும் தொட வேண்டும். பயிர்களை அழிப்பதும் நிலத்தை பறிப்பதும் பாவம் என்பதை அவர்கள் உணர வேண்டும். அதற்கானத் திறனை பகுத்தறிவு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
என்எல்சி நிறுவனத்தின் செயல்பாடுகள் பெரும் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளன. நன்கு விளைந்த வயல் வெளிகளை புல்டோசர் வைத்தும், பொக்லைன் இயந்திரங்களை வைத்தும் அழித்த செயல் அனைவரையும் ரத்தக் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. நேற்று என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தின்போது பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மிகுந்த ஆவேசத்துடன் காணப்பட்டார்.
போராட்டத்தில் கலந்து கொண்டோரும் கூட ஆவேச மனப்பான்மையுடன்தான் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்களும் வயல் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவர்களாகவே இருந்தனர். இதனால் இயல்பாகவே அவர்கள் போராட்ட குமுறல் மன நிலையுடன்தான் காணப்பட்டனர். இதனால்தான் நேற்றைய போராட்டம் வன்முறையாகவும் மாறிப் போனது.
நேற்று என்எல்சியில் இப்படி குமுறலும், போராட்டமும் வெடித்தது என்றால், சென்னையில், உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியும் தனது குமுறலை வெளியிட்டார். விளைந்த பயிரை அழித்துள்ளீர்களே இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. வளர்ந்து நெல்லாகி அறுவடை முடியும் வரை என்எல்சியால் காத்திருக்க முடியாதா.. பயிரை அழித்துத்தான் நாம் வாழ வேண்டுமா.. நிலக்கரி இல்லாமல் வாழ முடியும்.. ஆனால் அரிசி இல்லாமல் வாழவே முடியாது என்பதை நீங்கள் உணரவில்லையா.. உங்களது செயலை மன்னிக்கவே முடியாது. அந்தக் காட்சியைப் பார்த்து நான் அழுது விட்டேன் என்று கூறினார் நீதிபதி தண்டபாணி.
இ���ுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
என்.எல்.சி தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, நிலத்தை கைப்பற்றுவதற்காக வயலில் விளைந்து நின்ற பயிர்களை எந்திரங்களைக் கொண்டு அழித்த என்.எல்.சி நிறுவனத்திற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்.
"நெல் பயிரிடப்பட்டிருந்த வயல்களில் எந்திரங்களை இறக்கி பயிர்களை அழித்ததை ஏற்க முடியாது. வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் வாழ்ந்த பூமியில் இப்படி நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பயிர்கள் அழிக்கப்படும் காட்சியைக் கண்ட போது எனக்கு அழுகை வந்தது. பயிர்கள் அறுவடை செய்யப்படும் வரை இரு மாதங்கள் என்.எல்.சியால் பொறுத்துக் கொள்ள முடியாதா?
வயல்களை எல்லாம் அழித்து மீத்தேன், நிலக்கரி எடுத்தால் அதனால் ஏற்படும் வெற்றிடத்தை எதைக் கொண்டு நிரப்பப் போகிறோம். நமது தலைமுறையிலேயே நாம் பஞ்சத்தை பார்க்கப் போகிறோம். அரிசிக்கும், காய்கறிகளுக்கும் மக்கள் அடித்துக் கொள்ளப் போவதை நாம் பார்க்கத்தான் போகிறோம். என்.எல்.சி நிறுவனம் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை. நிலக்கரி அவர்களுக்கு பயன்படாது. இது தான் எனது கருத்து என்று கூறியுள்ளார்.
நீதியரசர் தண்டபாணியின் கருத்துகள் உண்மையானவை. என்.எல்.சியால் பயிர்கள் அழிக்கப்பட்ட சிக்கலில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டை நீதியரசர் அப்படியே வழிமொழிந்திருகிறார். பயிர்கள், சுற்றுச்சூழல், உணவுப் பாதுகாப்பு குறித்த அக்கறையுடன் இந்தக் கருத்துகளைத் தெரிவித்த நீதிபதி அவர்களுக்கு நான் எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதிபதியின் மனதை தைத்த நிகழ்வுகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் இதயங்களையும் தொட வேண்டும். பயிர்களை அழிப்பதும் நிலத்தை பறிப்பதும் பாவம் என்பதை அவர்கள் உணர வேண்டும். அதற்கானத் திறனை பகுத்தறிவு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
{{comments.comment}}