- சகாயதேவி
டெல்லி: இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அவரவர் கரன்சியிலேயே வர்த்தகம் செய்யும் அருமையான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இது இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை விரிவுபடுத்த பேருதவி செய்யும் என்று நம்பப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை விஜயம் செய்தார். அபுதாபியில் அந்த நாட்டு அதிபர் ஷேக் முகம்மது பின் சயத் அல் நஹயானுடன் அவர் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, அந்தந்த நாட்டு நாணயங்களான ரூபாய் மற்றும் திர்ஹாம் ஆகியவற்றில் வர்த்தகம் செய்வது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த ஏற்பாடு இரு நாடுகளுக்கும் இடையே முதலீடுகள் மற்றும் பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும். உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவது பரிவர்த்தனை செலவுகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கான தீர்வு நேரத்தை மேம்படுத்தும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்து பணம் அனுப்புதல் உட்பட எல்லோருக்கும் பயன் அளிக்கும் ஒரு விஷயம் தான் என நிச்சயமாக சொல்லலாம்.
இந்த புதிய பரிவர்த்தனை முறை அமலுக்கு வந்த பின்னர், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தங்க ஏற்றுமதியாளர் ஒருவர் 25 கிலோ தங்கத்தை விற்பனை செய்துள்ளார். இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி பிரான்சில் சுற்றுப் பயணம் செய்திருந்தார். அங்கு இந்தியாவின் யுபிஐ நடைமுறையை அறிமுகப்படுத்தியது நினைவிருக்கலாம். அதேபோல அபுதாபியில் டெல்லி ஐஐடியின் வளாகம் அமைப்பதையும் அவர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமானதாக அமைந்ததாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
{{comments.comment}}