சென்னை: பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை துவங்கி வைக்க நாளை மாலை 5 மணிக்கு சென்னை வருகிறார்.
கேலோ இந்தியா போட்டியைத் தொடங்கி வைத்த பிறகு, நாளை மறுநாள் திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய இருக்கிறார். இதையடுத்து மூன்று ஊர்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் தாம்பரம் முதல் கடற்கரை வரை அனைத்து பகுதிகளிலும் உள்ள ரயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22 ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. மத்திய அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பிரதமர் கடந்த 12ஆம் தேதி முதல் விரதம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் நாட்டில் உள்ள முக்கியக் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு வருகிறார். அந்த வகையில் நாளை தமிழ்நாட்டுக்கு வரவுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோவிலில் சென்று சுவாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.
முன்னதாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நாளை சென்னையில் தொடங்கவுள்ளன. இதை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தப் போட்டிகள் 31ம் தேதி வரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது . இந்த விளையாட்டுப் போட்டியை பிரதமர் மோடி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை மாலை 6மணி அளவில் துவங்கி வைக்க உள்ளார்.
இதில் ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். .இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு அன்று இரவு ராஜ் பவனில் தங்குகிறார். மறுநாள் காலை 8.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சிக்கு தனி விமானம் மூலம் செல்கிறார்.
திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு,மதியம் 12:55 மணி அளவில் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டு செல்கிறார். மதியம் 2 மணிக்கு ராமேஸ்வரத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி விட்டு சாமி தரிசனம் செய்கிறார்.
இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் புனித நீர் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்தை வந்தடைகிறார். பின் மதுரையில் இருந்து
விமானத்தில் டெல்லிக்கு செல்லவிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சி மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலையங்களை போலீஸார் தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர் குழுவினர் மோப்ப நாய்கள் உதவியுடன் ஆங்காங்கே சோதனையும் செய்தும் வருகின்றனர்.
{{comments.comment}}