இசைக்கு அறிமுகம் தேவையில்லை.. "கானகந்தர்வன் கே.ஜே.யேசுதாஸ்".. சங்கீதத்தின் மொத்த அடையாளம்!

Jan 10, 2024,06:42 PM IST

சென்னை : கே.ஜே.யேசுதாஸ்...இந்த பெயருக்கு அறிமுகம் தேவையில்லை. இசையை தெரிந்த அனைவருக்கும் இவரை தெரியும். திறமை, சாதனை, விருது என அனைத்திற்கும் சொந்தக்காரர் இவர். பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என பல பரிமாணங்களில் வைரமாக இசை வானில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் கே.ஜே.யேசுதாஸ். இந்திய இசை வரலாற்றில் மிகப் பெரிய பாடகர்களில் இவரும் ஒருவர். 


கட்டச்சேரி ஜோசப் யேசுதாஸ்...இது தான் கே.ஜே.யேசுதாசின் பெயரின் விரிவாக்கம். லத்தின் கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தில், ஏழு சகோதர, சகோதரிகளுடன் பிறந்தவர். இளம் வயதில் இருந்தே இசை பயில துவங்கிய கே.ஜே.யேசுதாஸ் ஞானபூஷணம் உள்ளிட்ட சில இசை பயிற்சி வகுப்புக்களை முடித்துள்ளார். கர்நாடக இசை பயின்று, இசைக்கல்லூரியிலும் சேர்ந்த அவரால் குடும்ப சூழல் காரணமாக படிப்பை முடிக்க முடியவில்லை. சினிமாவில் பின்னணி, மேடை கச்சேரிகள், பக்தி பாடல்கள் என இசை உலகில் தனி சாம்ராஜ்யமே அமைத்துள்ளார் கே.ஜே.யேசுதாஸ். 





கே.ஜே.யேசுதாஸ், இதுவரை மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், துலு, ஒடியா, ஆங்கிலம், அரபு, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளிலும், அந்நிய நாட்டு மொழிகளிலும் 50,000 க்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக இசைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கே.ஜே.யேசுதாஸ் பல சாதனைகளையும் படைத்துள்ளார். சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதினை 8 முறை பெற்று சாதனை படைத்தவர். 5 முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது, 43 முறை சிறந்த பின்னணி பாடகருக்குான கேரள, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மேற்குவங்க மாநில அரசு விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். 




1961 ம் ஆண்டு "ஜாதி பேதம் மத துவேஷம்"என்ற பாடல் மூலம் மலையாள திரையுலகில் முதல் முறையாக பின்னணி பாடகராக அடியெடுத்து வைத்தார் கே.ஜே.யேசுதாஸ். தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய பொம்மை படத்தில் தான் இவர் முதன் முதலில் பாடினார். ஆனால் கொஞ்சும் குமரி என்ற படம் தான் முதலில் ரிலீசானது. ஒரே நாளில் வெவ்வேறு மொழிகளில் 11 பாடல்களை பாடி இவர் சாதனை படைத்துள்ளார். அதே போல் 2006ம் ஆண்டு சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் 4 தென்னிந்திய மொழிகளில் ஒரே நாளில் 16 சினிமா பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். 


காந்த குரலுக்கும் பல சாதனைகளுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரரான கே.ஜே.யேசுதாஸ் 2021ம் ஆண்டு இசைத்துறையில் தனது 60வது ஆண்டை நிறைவு செய்தார். சினிமாவில் மட்டுமின்றி, மனதை கரைய வைக்கும் ஏராளமான பக்திப்பாடல்களையும், குறிப்பாக ஐயப்பன் பாடல்களையும் இவர் பாடி  உள்ளார். ஜி.தேவராஜன் இசையில் கே.ஜே.யேசுதாஸ் தான் ஹரிவராசனம் பாடல் தான் தற்போது வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்படும் போது ஒவ்வொரு நாள் இரவும் இசைக்கப்படுகிறது. ஹரிவராசனம் பாடலை அதற்கு பிறகு எத்தனையோ பேர் பாடி விட்டார்கள். ஆனாலும் யேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடல் மட்டும் சபரிமலையில் தற்போது வரை ஒலிக்கிறது.   




1980ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் தரங்கிணி என்ற இசை ஸ்டூடியோவையும் கே.ஜே.யேசுதாஸ் துவக்கினார். பிறகு இது சென்னைக்கு மாற்றப்பட்டது. தற்போது சென்னையில் ஸ்டூடியோ 27 என்ற பெயரில் வாய்ஸ் மிக்சிங் ஸ்டூடியோவையும் நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் தரங்கிணி ஸ்டூடியோ சார்பில் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.




1940ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி கொச்சியில் பிறந்த கே.ஜே.யேசுதாஸ், இந்த ஆண்டு தனது 83வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்று, கலைகளின் தெய்வமான சரஸ்வதி தேவி முன் பஞ்சரத்ன கீர்த்தனைகள் உள்ளிட்ட கீர்த்தனைகள் பாடுவது வழக்கம். 2010ம் ஆண்டு கே.ஜே.யேசுதாசின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி மாதத்தில் 9 நாட்கள் இசைத்திருவிழா துவங்கப்பட்டது. கே.ஜே.யேசுதாசின் 70வது பிறந்தநாளன்று, 70 இசைக் கலைஞர்களுடன் இணைந்து அவர் மூகாம்பிகைக்கு சங்கீத அர்ச்சனை நடத்தினார்.  


இந்த இசை சகாப்தத்திற்கு நாமும் பிறந்தநாள் வாழ்த்து கூறி, ஆசி பெறுவோம்.

சமீபத்திய செய்திகள்

news

Red Alert: 3 மாவட்டங்களுக்கு நாளை, நாளை மறு நாள் 2.. ரெட் அலர்ட்.. மிக மிக கன மழை பெய்யும்!

news

Rain Alert: டெல்டா மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு மிக கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்

news

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வேற வேலை இல்லை.. முதல்வர் மு.க. ஸ்டாலின்

news

அல்லு அர்ஜூனின் புஷ்பா 2.. டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை.. அமெரிக்காவில் அதிரடி சேல்ஸ்

news

பிறந்த நாளின்போது.. பிளக்ஸ் பேனர்கள், பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும்.. துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்

news

ராமதாஸ் குறித்த பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்

news

Perth Test: 295 ரன்கள் வித்தியாசத்தில்.. ஆஸ்திரேலியாவை வச்சு செய்து.. இந்தியா அபார வெற்றி!

news

பெண்கள், பெண் குழந்தைகள் நலனுக்காக.. தனி இணையதளம் தேவை.. தவெக தலைவர் விஜய்

news

Immunity Drinks: லேசான தலைவலி காய்ச்சலுக்கெல்லாம் டாக்டரிடம் ஓடாதீங்க.. இதை குடிச்சுப் பாருங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்