முல்தான், பாகிஸ்தான்: இங்கிலாந்துக்கு எதிரான முல்தான் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி மிக மோசமான தோல்வியைத் தோல்வியைத் தழுவி பெருத்த அவமானத்தைச் சந்தித்துள்ளது.
கடந்த 147 வருட காலத்தில் இல்லாத மிகப் பெரிய தோல்வி இது என்ற வேதனை சாதனையையும் பாகிஸ்தான் படைத்துள்ளது என்பதுதான் அந்த நாட்டு ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ந்து மோசமான கிரிக்கெட்டை ஆடி வருவது அந்த நாட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வரலாறு காணாத தோல்விகளை சமீப காலமாக படைத்து வருகிறது பாகிஸ்தான் அணி. சமீபத்தில் வங்கதேச அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இத்தனைக்கும் இது பாகிஸ்தானில்தான் நடந்தது. இதில் 2 போட்டிகளிலும் மோசமான தோல்வியைத் தழுவி பேரதிர்ச்சியைக் கொடுத்தது பாகிஸ்தான்.
ஆகஸ்ட்டில் வறுத்தெடுத்த வங்கதேசம்: ஆகஸ்ட் மாதத்தில் நடந்த இந்தத் தொடரின்போது முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியைத் தழுவியது பாகிஸ்தான். பாகிஸ்தானில் வைத்து அந்த அணியை வங்கதேச அணி இப்படி வாஷ்அவுட் செய்தது இதுவே முதல் முறை என்பதால் பாகிஸ்தான் ரசிகர்களுக்குப் பெருத்த அவமானமாகி விட்டது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியிடமும் உதை வாங்கி இன்னொரு அவமானத்தைச் சந்தித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. என்ன கொடுமைன்னா பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 556 ரன்களைக் குவித்தது. ஆனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் பிரித்து மேய்ந்து விட்டது. இதனால் 7 விக்கெட் இழப்புக்கு 823 ரன்களைக் குவித்து அது டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி 220 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால், இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று விட்டது.
147 வருட வரலாற்றில் பெரும் சோகம்: இந்த தோல்வியின் மூலமாக ஒரு சோகமான சாதனையையும் பாகிஸ்தான் படைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே, முதல் இன்னிங்ஸில் 500 ரன்களுக்கு மேல் குவித்தும் கூட இன்னிங்ஸ் தோல்வி அடைந்த முதல் அணி என்ற "பெருமை" பாகிஸ்தான் அணிக்கு கிடைத்துள்ளது.
கடந்த 147 வருட கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு அணியும் இப்படி ஒரு சாதனையைப் படைத்தது இல்லை. பாகிஸ்தான் அணியின் இந்த சோதனையான சாதனைக்கு வித்திட்டவர்கள் - இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக்தான். இதில் ஜோ ரூட் இரட்டை சதமும், ஹாரி ப்ரூக் முச்சதமும் அடித்து பாகிஸ்தான் அணியின் கெளரவத்தை முச்சந்தியில் நிறுத்தி விட்டனர்.
முதல் இன்னிங்ஸை உண்மையிலேயே நன்றாகத்தான் ஆடியது பாகிஸ்தான். அப்துல்லா ஷபீக், கேப்டன் ஷான் மசூத், ஆகா சல்மான் ஆகியோர் சதங்கள் போட்டு அசத்தினர். சாத் ஷகீலும் கூட 84 ரன்கள் குவித்தார். ஆனால் பந்து வீச்சாளர்கள்தான் மிகப் பெரிய அளவில் சொதப்பி விட்டனர். இதெல்லாம் ஒரு பந்துவீச்சா என்று இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பிரித்து மேய்ந்துவிட்டனர். குறிப்பாக ஜோ ரூட்டையும், ப்ரூக்கையும் கொஞ்சம் கூட அசைத்துப் பார்க்க முடியாமல் போய் திணறி விட்டனர் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள்.
இங்கிலாந்தின் இந்த அசகாய ரன் குவிப்பால் மனதளவில் பாகிஸ்தான் தளர்ந்து போய் விட்டது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் மளமளவென முக்கிய விக்கெட்களைச் சாய்த்து பாகிஸ்தானை நிலை குலைய வைத்து விட்டனர். ஆகா சல்மான் மட்டும்தான் அதிகபட்சமாக 63 ரன்களை எடுத்தார். ஆமிர் ஜமால் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்தார்.
பார்மில் இல்லாத சூப்பர் ஸ்டார்கள்: பாகிஸ்தான் கேப்டனிடம் சரியான கேம் பிளான் இல்லை. முன்னணி வீரர்களான பாபர் ஆசம், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் சரியான பார்மில் இல்லை.. இதெல்லாம்தான் பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. அணி வீரர்களிடையே நல்ல நட்புறவும், ஒருங்கிணைப்பும் இல்லாததும் கூட முக்கியமான காரணமாகவும் பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முல்தானில் 2 டெஸ்ட் போட்டிகளும், ராவல் பிண்டியில் 3வது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது. தற்போது டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து. அடுத்த டெஸ்ட்டிலாவது பாகிஸ்தான் சுதாரிக்குமா என்று ரசிகர்கள் காத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}