சையத் ஆதில் ஹுசைன் ஷா.. மக்களைக் காக்க தீவிரவாதியுடன் மோதி.. உயிர் நீத்த குதிரைப்பாகன்!

Apr 23, 2025,06:36 PM IST
பஹல்காம்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதலின்போது தீவிரவாதியுடன் துணிச்சலாக மோதி, சுற்றுலாப் பயணிகளைக் காக்க முயன்று, தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சையத் ஆதில் ஹுசைன் ஷாவின் தீரச் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் அனைவரின் உள்ளத்தையும் கொதிக்க வைத்துள்ளது. மிகக் கொடூரமாக நடந்துள்ள இந்தத் தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த சம்பவத்தின்போது சுற்றுலாப் பயணிகளைக் காக்கும் முயற்சியில் உள்ளூர் மக்கள் பலரும் முயன்றது தெரிய வந்துள்ளது. அவர்கள்தான் முதலில் ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு கொண்டு செல்ல உதவியுள்ளனர். சிலர் நடக்க முடியாத நிலையில் இருந்தபோது முதுகில் தூக்கிக் கொண்டும் சுமந்து சென்றுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகளிடமிருந்து  காப்பதற்காக போராடி ஒரு உள்ளூர்க்காரர் தனது உயிரையும் தியாகம் செய்துள்ள செயல்தான் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அவரது பெயர் சையத் ஆதில் ஹுசைன் ஷே. பஹல்காமின் பேரெழில் கொஞ்சும் பைசாரன் புல்வெளிப் பகுதியில் குதிரைப்பாகனாக இருந்து வந்தார். லிட்டில் சுவிட்சர்லாந்து எனப் பரவலாகப் போற்றப்படும் அந்த ரம்மியமான சுற்றுலாத்தலத்தில், பரந்து கிடக்கும் அந்தப் புல்வெளியில் தனது குதிரை மூலம் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று மகிழ்விப்பதுதான் இவரது தொழிலாகும்.



நேற்றைய பொழுதும் மற்றைய நாட்களைப் போன்றே சாந்தமாக விடிந்தது. காஷ்மீரின் சுற்றுலாக்காலம் உச்சத்தில் வீற்றிருக்க, அன்றைய உழைப்பில் கணிசமான வருவாய் கிட்டக்கூடும் என ஷா வழக்கம்போல தனது தொழிலுக்கு வந்திருந்தார். சாதாரண குடும்பப் பின்னணி கொண்டவர்தான் ஷா. மதிய மயக்கத்திலே, சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் வனப்பில் மனம் பறிகொடுத்து மகிழ்ந்திருக்கையில், எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டுகள் அந்த களிப்பான ஓசையைத் துளைத்தன. அடுத்த கணம் அரங்கேறியது ஒரு பெரும் நாசக்காட்சி.

கொலைவெறி கொண்ட பயங்கரவாதிகள் வெறித்தனமாக அங்கு புகுந்து ஒவ்வொரு சுற்றுலாப் பயணியையும் குறிபார்த்து சுடத் தொடங்கினர். பாவமற்ற உயிர்களை ஈவிரக்கமின்றிப் பறித்தனர். அந்தப் பள்ளத்தாக்கில் அண்மையில் நிகழ்ந்த மிகக் கொடூரமான தீவிரவாதத் தாக்குதல் இது. காஷ்மீரி முஸ்லீமான ஷா இந்த பயங்கர தாக்குதலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அடுத்த நிமிடமே அவர் சுதாரித்து, தன்னுடன் பயணித்திருந்த  அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் காக்க தீவிரவாதிகளுடன் துணிச்சலாக மோதினார். ஒரு தீவிரவாதியின் கைத்துப்பாக்கியைப் பிடுங்க முயன்றுள்ளார். அவனைத் தடுக்க முயன்றுள்ளார். ஆனால் அந்தக் கொலைகாரன், ஈவு இரக்கமே இல்லாமல் ஷாவையும் சரமாரியாக சுட்டுக் கொன்று விட்டான்.

ஷாவின் தந்தை இந்த கொடூரமான சம்பவம் குறித்து கதறி அழுதபடி கூறுகையில், இந்த செயலுக்குக் காரணமான கொடியவர்கள் தப்பமுடியாத தண்டனையை அனுபவிக்க வேண்டும். நேற்று என் மகன் பிழைப்புக்காக பஹல்காம் சென்றான். மதியம் மூன்று மணியளவில் அந்தத் தாக்குதல் பற்றி கேள்விப்பட்டோம். உடனே அவனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவன் போன் ஆப் ஆகியிருந்தது. மாலை 4:40 மணியளவில் அவன் தொலைபேசி ஒலித்தது, ஆனால் மறுமுனையில் யாருமில்லை. பதறிப்போய் நாங்கள் காவல் நிலையத்திற்கு விரைந்தோம். அங்குதான் அவன் அந்த கோழைத்தனமான தாக்குதலில் சுடப்பட்டு மரணமடைந்தான் என்ற துயரமான செய்தியை அறிந்தோம். 

இந்த அக்கிரமத்திற்கு காரணமான ஒவ்வொருவரும் அதன் விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும் என்று ஷாவின் தந்தை, சையத் ஹைதர் ஷா  கதறி அழுதபடி கோபாவேசத்துடன் கூறினார். ஷாவின் தாயும் தனது மகனை இழந்த வேதனையில் கதறித் துடித்தபடி உள்ளார். அவன் தானே எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கு. எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு ஏன் இந்த கொடுமையைச் செய்தாய் என்று அவர் அழுத காட்சி காண்போரையும் உருக்கியது.

சையத் ஆதில் ஹூசைன் ஷாவின் இறுதிச் சடங்கில் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் தாக்குதலுக்கு விரைவில் சரியான பதிலடி தரப்படும்.. அமைச்சர் ராஜ்நாத் சிங்

news

சையத் ஆதில் ஹுசைன் ஷா.. மக்களைக் காக்க தீவிரவாதியுடன் மோதி.. உயிர் நீத்த குதிரைப்பாகன்!

news

பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன்!

news

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில்.. உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி..!

news

இந்திய உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது..?காஷ்மீர் தாக்குதலுக்கு சீமான் கண்டனம்..!

news

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின்‌ உடலுக்கு.. மத்திய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி!

news

அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ரெய்டுக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி!

news

Pahalgam Terror Attack: தேனிலவு சென்ற இடத்தில்.. உயிரிழந்த கடற்படை அதிகாரி..!

news

பஹல்காம் தாக்குதல்.. 3 தமிழ்நாட்டவர் காயம்.. உயிரிழப்பு இல்லை.. தலைமைச் செயலாளர் முருகானந்தம்

அதிகம் பார்க்கும் செய்திகள்