டெல்லி : மணிப்பூர் கலவரம் தொடர்பாக பார்லிமென்டில் அமளி செய்து, கூச்சல், குழப்பம் ஏற்படுத்தி வரும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்த்து ஏஐெம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி எழுப்பி உள்ள கேள்விகள் அனைவரிடமும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளன.
கடந்த வாரம் துவங்கி பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளில் இருந்து மணிப்பூரில் 3 மாதங்களாக நடந்து வரும் வன்முறை, கலவரம் தொடர்பான விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இவர்களின் அமளியில் இரு அவைகளும் தொடர்ந்து அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு, கூட்டத் தொடர் முழுவதுமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. இதை ஏற்று இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தவும் சபாநாயகர் ஒப்புக் கொண்டுள்ளார். இருந்தும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் கடும் அமளி, கூச்சல், குழப்பத்திற்கு இடையே இன்று ஓவைசி அவையில் பேசினார். அப்போது எதிர்க்கட்சிகளை பார்த்து, எதிர்க்கட்சிகள் அவையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதன் மீதான நடவடிக்கைகள் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு பிறகும் என்ன வேண்டும்?
நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு அவைகள் செயல்பட அனுமதிக்க வேண்டியது தானே? எதிர்க்கட்சிகள் எனது இந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் இந்த போராட்டத்தால் நடப்பு கூட்டத் தொடரில் ஏற்கனவே நாம் பல நாட்களை இழந்து விட்டோம். நாம் அரசிடம் கேள்வி கேட்க வேண்டும். அவர்களின் தோல்வியை சுட்டிக் காட்ட வேண்டும். துரதிஷ்ட வசமாக கேள்வி நேரங்களை எல்லாம் இழந்து கொண்டிருக்கிறோம்.
முக்கிய மசோதாக்கள் பலரும் நிறைவேற்றப்படாமல் காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. நம்மால் அந்த மசோதாக்களில் இருக்கும் குறைகளை கூட வெளிப்படுத்த முடியவில்லை. ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் நடந்த கலவரங்கள் பற்றியும் விவாதிக்க அரசு அனுமதிக்க வேண்டும். அதை விடுத்து அவற்றை மணிப்பூர் கலவரத்துடன் ஒப்பிட்டு நியாயப்படுத்தக் கூடாது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு ஒரு மத்திய அமைச்சர் பேசுவது தவறு என தெரிவித்துள்ளார்.
{{comments.comment}}