மொத்தம் ஆறு படங்கள்.. ஆஸ்கரில் அதிரடி காட்டுமா கோலிவுட்.. எக்கச்சக்க எதிர்பார்ப்புகள்!

Sep 24, 2024,06:02 PM IST

சென்னை:   2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காக தமிழில் 6 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தமிழ் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


உலக  அளவில் வழங்கப்படும் சினிமா விருதுகளில் மிகவும் சிறந்த ஒன்றாக கருதப்படுவது ஆஸ்கர் விருதுகள் ஆகும். அமெரிக்காவில் இந்த விருந்து வழங்கப்பட்டாலும் கூட உலகில் உள்ள அத்தனை சினிமாக்காரர்களின் கனவும் இதுவாகத்தான் இருக்கிறது. ஏதாவது ஒரு விருது நமக்குக் கிடைத்து விடாதா என்ற ஆசையில்தான் பலரும் ஓடிக் கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த விருதுதான் ஆஸ்கர்.




இந்த விருதுகளை அடைவதை ஒவ்வொரு திரைப்பட கலைஞரும் தங்களின் குறிக்கோள்களாகவும் லட்சியமாகவும் எண்ணி வருகின்றனர். இதற்காக கடினமாக உழைத்து தங்களின் நடிப்பின் திறமைகளையும் வெளிப்படுத்தி வரும் நடிகர் நடிகைகள் ஏராளம். இந்த ஆஸ்கர் விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது.  சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் சிறந்த நடிகர்கள் சிறந்த நடிகைகள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள், சிறந்த இசையமைப்பாளர்கள் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.


இந்தியாவிலிருந்து பலர் ஆஸ்கர் விருதுகள் பெற்றுள்ளனர். அதில் நம்ம ஊரைச் சேர்ந்த இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்தான் தமிழ் சினிமாவிலிருந்து முதல் முறையாக ஆஸ்கர் விருது  வென்று, அதிலும் 2 விருதுகளை வென்று அசத்தினார். அதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்குப் பட இசையமைப்பாளர் கீரவாணி ஆர்ஆர்ஆர் படத்துக்காக விருது வென்று அசத்தியிருந்தார்.


அந்த வரிசையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது அடுத்த ஆண்டு மார்ச் இரண்டாம் தேதி (இந்திய தேதி படி மார்ச் 3) நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ் திரைப்படங்கள் ஆறு படங்கள் உட்பட மொத்தம் 29 இந்திய திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. உலகளாவிய படங்களுடன் இந்த 29 இந்தியப் படங்களும் மோதும். இறுதிப் பட்டியலுக்கு இந்தியப் படம் போகுமா , அது தமிழ்ப் படமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். சரி முதலில் ஆஸ்கருக்கு போயுள்ள தமிழ்ப் படங்கள் குறித்துப் பார்க்கலாமா.. !


வாழை:




இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி வாழை திரைப்படம் வெளியானது. இதில் கலையரசன், பொன் வேல், நிகிலா, விமல் பிரியங்கா, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். உண்மை கதையின் பின்னணியில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவன், வங்கிக் கடனை அடைப்பதற்காக வாழைத்தார் சுமக்கும் வேலைக்கு செல்கிறார். அப்போது அங்கு நடைபெறும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்வு இருந்தது.  படத்தின் கதைக்களம் மக்களிடையே மிகப்பெரிய வரவைப்பை பெற்று விமர்சன ரீதியாக பாராட்டையும், வசூல் ரீதியாக நல்ல வேட்டையும் ஆடியது இந்த வாழை.


மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றவை. அந்த வரிசையில் வாழையும் இணைந்து கொண்டது. இப்போது ஆஸ்கர் விருதுக்கும் அது போயுள்ளது. இறுதிப் போட்டியில் அது நுழையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

தங்கலான்:




பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. இதில் நடிகர் விக்ரம், நடிகைகள் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு விக்ரம் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் தங்கலான் திரைப்படம். குறிப்பாக விக்ரமின் கெட்டப்பும், ஜிவி பிரகாசின் பாடல்களும் படத்திற்கு பிளஸ் என்றே சொல்லலாம். 


இப்படம் 19ஆம் நூற்றாண்டில் கோலார் தங்கச் சுரங்கப் பகுதியில் நம்முடைய முன்னோர்கள் தங்கம் வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டபோது சந்தித்த கொடுமைகள், அவமானங்கள், வாழ்க்கைப் போராட்டம் உள்ளிட்டவற்றை விளக்கும் படமாக அமைந்திருந்தது. விக்ரமின் நடிப்பு மற்றும் கெட்டப்புகளுக்காக கட்டாயம் தேசிய விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போது ஆஸ்கர் போட்டிக்கும் இது போயிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.


ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்:




கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 10ஆம் தேதி வெளியானது‌. இதில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிஷா சஜயன், இளவரசு, நடராஜன், சஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே சூர்யாவின் கூட்டணியில் உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு  மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. 


வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இப்படத்தின் மூலம் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா சிறந்த நடிகர் எனவும் பலரால் பாராட்டப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


மஹாராஜா:




விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள் என்றாலே வித்தியாசமான திரைக்கதைக்கு குறைவிருக்காது. இவரின் எதார்த்தமான நடிப்பை காணவே விஜய் சேதுபதியின் படங்களுக்கு இன்று வரை தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வரிசையில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் தான் மகாராஜா. இப்படம் விஜய் சேதுபதிக்கு 50-வது திரைப்படமாகும். மேலும் இப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையாகவே  அமைந்தது.


பெண்  குழந்தைகள் சந்திக்கும்பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மகாராஜா படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே பாராட்டைப் பெற்றது. அதிலும் இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்றே சொல்லலாம். இப்படத்தின் கதைக் கரு பெண் பிள்ளைகளைப் பெற்ற அத்தனை பேரின் மனதையும் உலுக்கியதே இப்படத்தின் பெரும் வெற்றிக்கு முக்கியக் காரணமாகும்.


கொட்டுக்காளி:




எஸ்.கே ப்ரொடக்க்ஷன் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில்  உருவான திரைப்படம் தான் கொட்டுக்காளி‌. இப்படத்தை இயக்கிய பி எஸ் வினோத் ராஜ் ஏற்கனவே கூழாங்கல் திரைப்படத்தை திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் விருதுகளை வென்றவர். இதனால் கொட்டுக்காளி திரைப்படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு வலுத்து வந்தது. இப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் எளிமையான கதைக்களம் மூலம் தமிழ் சினிமாவில் சூரி சிறந்த நடிகராக கால் பதித்து விட்டதாகவே கூறி வருகின்றனர்.


பல்வேறு சர்வதேச பட விழாக்களில் கொட்டுக்காளி விருதுகளைக் குவித்துள்ளது. ஆஸ்கரையும் இது தொட்டுப் பார்க்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.


ஜமா:




அறிமுக இயக்குனர் பாரி இளவழகன் நடித்த இயக்கியுள்ள திரைப்படம் தான் ஜமா. இப்படம் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது‌. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதில் சேத்தன், ஸ்ரீ கிருஷ்ணா, தயாள் அம்மா, அபிராமி வசந்த், மாரிமுத்து, மணிமேகலை உட்பட பலர் நடித்துள்ளனர். தெருக்கூத்து கலைஞரான தன் தந்தையின் பாரம்பரியத்தை மீட்டு எடுக்க தானே ஒரு ஜமா அமைப்பாக போராடுகிறார் இப்படத்தின் கதாநாயகன். அதை வைத்து பின்னப்பட்டுள்ளது இப்படத்தின் கதை. படம் மக்களிடையே வெகுவாக கவனம் ஈர்த்தது.


இவைதான் தமிழில் இருந்து ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டவை. இவை தவிர ஆல் வி இமேஜிங் அஸ் லைட், ஆடு ஜீவிதம்,  உள்ளொழுக்கு, ஆட்டம் என 4 மலையாள திரைப்படங்களும், மங்கள வாரம், கல்கி 28 98 ஏடி, அனுமன் ஆகிய 3 தெலுங்கு படங்களும் லாப்பட்டா லேடிஸ், சோட்டா பீம் அண்ட் தி கர்ஸ் ஆப் தம்யான், குட் லக் , கில், அனிமல் ஸ்ரீகாந்த், சந்து சாம்பியன், ஜோரம், சாம் பகதூர், ஸ்வந்தத்திய வீர் சாவர்க்கர், ஆர்டிக்கிள் 370 என 13 இந்தி திரைப்படங்களும்,  மைதான், காரக் கணபதி, ஸ்வார கந்தர்வா பீர் பாட்கே, காத், ஆகிய 4 மராத்தி திரைப்படங்களும், ஆபா  என்ற 1 ஒடியா திரைப்படங்கள் என மொத்தம் 29 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்