- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி
ராதா எந்த சேலையை தேர்ந்தெடுப்பது என புரியாமல் , மாறி மாறி , தன் கணவரையும் சேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள். கடைக்காரர் எடுத்துப் போட்ட எதுவும் மனதிற்கு பிடிக்கவில்லை. ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தால், தன் கணவருக்கு பிடிக்காதே என்ற பயம் வேறு தலை தூக்கியது.
மேலே அடுக்கி வைத்திருந்ததில், ஒரு புடவை சட்டென்று பிடிப்பது போல் தோன்ற , "அதோ தம்பி , அந்த லைட் கிரீன் புடவை " என்ற அந்த நேரத்தில், கடை வாசலில் எங்கோ பார்த்த முகம் நிழல் நாடுவது தெரிந்தது. யோசிக்க தொடங்கினாள். அவன் யார் என யூகிக்க இரண்டு நிமிடமானது அவளுக்கு .
"ஏம்மா... எந்த சேலைம்மா..? இதுவா..? சொல்லாம என்ன யோசிச்சுகிட்டு இருக்கீங்க ."
அவன் அதட்டலில் சட்டென்று நினைவு திரும்பி, அந்த சேலையையே சரிபார்த்து வாங்கிக் கொண்டாள் .
பக்கத்தில் நின்ற கணவரிடம் , "ஏங்க , அங்கே பாருங்களேன் . அந்த ப்ளூ ஷர்ட் போட்டு இருக்காருல்ல, அவர்தான் உங்களுக்கு முன்னாடி என்னைய வேலூரில் இருந்து பெண் பார்க்க வந்தவர் .வேலூரில் தான் ஒர்க் பண்றதாக சொன்னாங்க. இப்ப இங்க எப்படி வந்தார்ன்று தெரியல. மேரேஜ் ஆயிட்டதானு தெரியல. இவருக்கு என்னைய ரொம்ப பிடிச்சிருந்தாம். நான் சம்மதம் சொல்லாததாலே அவருக்கு ரொம்ப ஏமாற்றமாம். புரோக்கர் வந்து சொன்னார். "
சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு தன் கணவரின் முகத்தை பார்த்தாள். அவர் கண்களில் கோபம் இருப்பது தெரிந்தது .
இருந்தாலும் அதை பெரிது படுத்திக் கொள்ளாமல் , "ஏங்க அவர்கிட்ட ஏதாவது பேசிட்டு போலாமா.? அவரும் நம்மள பாத்துட்டார். சும்மா எங்கே , எப்படி இருக்கீங்க என்று லைட்டா பேசிட்டு போயிடுவோம்" என்றாள்.
அவள் கணவருக்கு ,கன்னங்களும் கண்களும் ரத்த சிவப்பேறின. இப்ப வெளிய வர போறியா இல்லையா..?..ஒரே கேள்வி. அதற்கு மேல் அங்கு நின்றால் என்ன நடக்குமோ என பயத்தில் வெளியேறினாள்.
கடைக்கு வெளியே காலடி எடுத்து வைத்த உடனேயே , "ஏன்டி...உனக்கு எவ்வளவு தைரியம் ...? என்கிட்டயே அவன் கிட்ட போய் பேசலாமா என்றா கேட்கிறாய் ..? .என்னத்த பேச போற.? ஏதாவது பேசணும்னா அவன் உங்க வீட்டுக்கு வந்த போதே , பேசி இருக்க வேண்டியது தானடி . ஏன் இப்போ உனக்கு ரொம்ப வருத்தமா இருக்கா.? இவனை கல்யாணம் பண்ணிக்காம விட்டுட்டோமுனு . அப்படி நினைச்சேன்னா அவனோட ."
"ஏங்க இப்படி கண்ணா பின்னான்னு வாய்க்கு வந்தபடி பேசுறீங்க. நான் இப்ப என்ன சொல்லிட்டேன்...? ஏதோ எதேச்சையா பார்த்ததால சும்மா இரண்டு வார்த்தை , எங்கே இருக்கீங்க மேரேஜ் ஆயிட்டதா என்று பார்மாலிட்டிக்கு பேசிட்டு போகலாம்னு சொன்னேன். உங்களுக்கு இஷ்டம் இல்லைனா விட்ருங்க. அதற்காக ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க ...?"
"அவன் எங்கே இருந்தா உனக்கு என்ன.? மேரேஜ் ஆனா என்ன?.ஆகாட்டா என்ன.? அத பத்தி அவசியம் தெரிஞ்சுக்கணுமா.? உனக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுத்தது தப்பா போச்சு. வீட்டுக்கு வா. இன்னைக்கே தீபாவளி கொண்டாடி விடுகிறேன் .உன்னைய போய் கடைக்கு கூட்டி வரேன் பாரு. நான் எடுத்துக் கொடுக்கிற சேலையை கட்டுடி என்று சொல்லாமல் ."
இவளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை . கத்தி அழனும் போல இருந்தது. இனி எதிர்த்து ஒரு வார்த்தை பேசினால், ஏதாவது கேட்டா ,இந்த ரோட்டிலேயே தீபாவளி கொண்டாடி விடுவார் என்பது இவளுக்கு தெரியும். மனம் மிகவும் கனத்தது. தலை சுற்றியது .மனதை ஒருவாறு சமாளித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்..
(சில ஆண்கள் இப்படி தான். இது நிஜம். இந்த நிஜத்தை வேறு மாதிரி கற்பனை செய்து பார்ப்போமா.? )
"ஏங்க ... அந்த அந்த ப்ளூ ஷர்ட் போட்டு இருக்கார் இல்ல .அவர்தான் என்னைய வேலூரில் இருந்து பெண் பார்க்க வந்தவர் ."
"ஆமா, ஒரு தடவை சொல்லி இருக்கியே. வரும்போது ரெண்டு கிலோ லட்டு வாங்கிட்டு வந்தாங்கன்னு. நல்லா தின்னுட்டு அந்த ஆள பிடிக்கலைன்னு சொல்லிட்டேன்னு சொன்னியே அந்த ஆளா."
"அவரே தான் .'
"ஏன் ராதா ... ஆள் நல்லா தானே இருக்கான் .ஏன் பிடிக்கலைன்னு சொன்ன .?"
"ஏனோ பிடிக்கல. இந்த கேள்வி இப்ப தேவையா? வாங்க .. அவர்கிட்ட போய் உங்களை இன்ஸ்டடியூஸ் பண்ணிட்டு, இரண்டு வார்த்தை பேசிட்டு வருவோம். வேலூரில் இருந்து இங்க எப்படி வந்தார்ன்னு தெரியல . மேரேஜ் ஆயிடுச்சான்னு தெரியல..'
ஓகே . வா. ராதா.
"ஹலோ மிஸ்டர் செல்வராஜ் .என்னைய நினைவிருக்கா..?"
"நல்லாவே இருக்கு. "
"இவங்க என்னோட ஹஸ்பண்ட். இங்கதான் பேங்கில் ஒர்க் பண்றாங்க. நீங்க எப்படி இங்க..?"
"எனக்கு இங்கே ட்ரான்ஸ்பர் ஆயிடுச்சு. ஒரு வருஷமா இங்கதான் ஒர்க் பண்றேன். "
"அப்படியா ரொம்ப சந்தோஷம் . என்ன தீபாவளிக்கு டிரஸ் எடுக்க வந்தீங்களா..?"
"மனைவிக்கு , குழந்தைக்கு எல்லாம் போன வாரமே எடுத்தாச்சு. எனக்குத்தான் இன்னைக்கு எடுக்கலாம் என்று."
ஓ... குழந்தை இருக்கா.?. என்ன குழந்தை...?
"பெண் குழந்தை. "
"உங்க வீடு எங்கே இருக்கு ..?"
"பக்கத்துல தான். ரெண்டு நிமிஷம் நடந்தா போதும். வாங்களேன். "
"என் ஒய்ஃப் கிட்ட கூட ஒரு தடவை உங்களப் பத்தி சொல்லி இருக்கேன். எதிர்பாராத விதமா மீட் பண்ணியாச்சு. ஒரே ஊரில் இருக்கோம். வாங்க ப்ளீஸ் .'
அவள் தன் கணவரைப் பார்க்கிறாள். அவர் தன் கண்களால் சம்மதம் தெரிவிக்கிறார். இருவரும் அவன் வீட்டுக்கு செல்கிறார்கள் .வீட்டிற்குச் சென்றவுடன் , அவன் மனைவி யார் என தெரியாமலேயே முகம் மலர்ச்சியுடன் வரவேற்கிறாள்.
"இவுங்க வந்து ஜானகி. "
பரவாயில்ல . நீங்க சிரமப்பட வேண்டாம். நாங்களே அறிமுகம் பண்ணிக்கிறோம் .பிரண்ட்ஸ்னு வச்சுக்கோங்க என்றாள் ராதா.
" நல்லா பிராங்க்கா பேசுறீங்க " என்ற ஜானகியை ..."ஜானகி. காபி போடேன்." என்றான் செல்வராஜ்.
"ராதா தன் கணவரைப் பார்த்து, இரண்டு பேரும் பேசிகிட்டு இருங்க. நான் அவுங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்." இவள் சமையல் அறைக்குள் செல்கிறாள்..
"சமையலறையை ரொம்பவும் சுத்தமா வச்சிருக்கீங்க. சரி உங்க குழந்தைக்கு என்ன பெயர் வச்சிருக்கீங்க ."
"லீலா பிரியதர்ஷினி ."
யாரோட செலக்சன் ..?
அவரோடு செலக்சன் தான் .
"நல்ல பேரு. சரி நாங்க யாருன்னு தெரியுமா ..?
இப்பதானே பிரெண்ட்ஸ்னு சொன்னீங்க.
"பிரெண்ட்ஸ்ன்னு சொல்ல முடியாது. இனிமேதான் நாம பிரெண்ட்ஸ். ஒரு தடவை இரண்டு வருடத்திற்கு முன்பு உங்க ஹஸ்பண்ட் எங்க வீட்டிற்கு அவரோட அம்மா, அப்பா , அண்ணன், அண்ணி எல்லாருடனும் , பூ பழம் ஸ்வீட் எல்லாம் வாங்கிட்டு வந்தாங்க. அப்ப பார்த்தது உங்க கணவரை. அதுக்கப்புறம் இன்னைக்கு தான் திடீர்னு ஜவுளிக்கடையில் பார்த்தேன். இப்ப புரியுதா நான் யாருன்னு ...? என் பெயர் ராதா. "
"ஓ... புரியுது... புரியுது .ஒரு தடவை உங்கள பத்தி என்னிடம் சொல்லி இருக்காங்க. மேரேஜ் ஆன புதுசில்."
"ஓ அப்படியா .?.சரி நீங்களும் ஒரு நாள் அவசியம் என் வீட்டுக்கு வரணும்."
" கண்டிப்பா வர்றோம்."
ஜானகி காபி கலந்து ஆண்கள் இருவருக்கும் கொடுத்துவிட்டு, இவர்கள் சமையல் அறையில் இருந்தபடியே பேசிக்கொண்டு காபி குடிக்கிறார்கள். குடித்த பிறகு , தான் கையோடு வாங்கி வந்த பூவை , ராதா ஜானகிக்கு கொடுக்கிறாள்.
"ஏங்க இவங்கள நம்ம வீட்டுக்கு கூப்பிடுங்க. அது வேற நீங்க கூப்பிடலைன்னு நெனச்சுக்க போறாங்க. "
"ஏன் இந்த வருட தீபாவளிக்கே இவங்க நம்ம வீட்டுக்கு வரட்டுமே. வாங்க மிஸ்டர் செல்வராஜ் .அவசியம் தீபாவளிக்கு எங்க வீட்டுக்கு வாங்க. உங்களை கட்டாயம் எதிர்பார்ப்போம்."
"ஓ ..எனக்கு தோணவே இல்லையே. .தீபாவளி அன்னைக்கே வாங்க . எங்களுக்கும் மகிழ்ச்சியா இருக்கும் .நாங்க மட்டும் தனியா கொண்டாடினா எங்களுக்கும் போர் அடிக்கும். ஈவினிங் போல வாங்க. வெடியும் போடலாம் " என்றாள் ராதா.
ஓகே கண்டிப்பா வர்றோம்.
ராதாவும் அவள் கணவரும் விடைபெற்றுச் செல்கிறார்கள்.
(இந்த கற்பனை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? அல்லது அந்த நிஜம் பிடித்து இருக்கிறதா? .நிஜம் நிஜமாய் இருப்பது நல்லதா? அல்லது இந்த கற்பனை நிஜமாய் இருப்பது நல்லதா? )
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).
காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!
ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் வேரறுப்போம்.. பிரதமர் மோடி ஆவேசம்
கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!
தினமும் உடற்பயிற்சி.. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்!
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!
பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கம் அதிரடி முடக்கம்.. மத்திய அரசு நடவடிக்கை..!
கொல்வோம்னு மிரட்டுகிறார்கள்.. டெல்லி காவல் நிலையத்தில்.. கௌதம் கம்பீர் புகார்!
திருமண நாளான இன்று மனைவி ஷோபாவுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த.. எஸ்.ஏ சந்திரசேகர்..!
ஒரு நிஜம் .. ஒரு கற்பனை..!! (சிறுகதை)
{{comments.comment}}