லக்னோ: மேற்கு உத்தரப் பிரதேசத்தை நீண்ட காலமாக உலுக்கி வந்த பிரபல கேங்ஸ்டர் அனில் துஜானா நேற்று போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் அவரைப் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் சராசரியாக தினசரி ஒரு கேங்ஸ்டர் சுட்டுக் கொல்லப்பட்டு வருகிறார். ஒன்று போலீஸார் சுட்டு வீழ்த்துகின்றனர்.. இல்லை யாராவது ஒரு கோஷ்டி இதைச் செய்கிறது. ரவுடிகளும், கேங்ஸ்டர்களும் வளைத்து வளைத்து வேட்டையாடப்படுகிறார்கள். இதனால் உத்தரப் பிரதேசமே ரத்த பூமியாக மாறி நிற்கிறது.
சமீபத்தில் கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஆதிக் அகமது, அவரது தம்பி மற்றும் ஆதிக்கின் மகன் ஆகியோர் அடுத்தடுத்து கொடூரமாக கொல்லப்பட்டனர். ஆதிக் மகனை போலீஸார் சுட்டுக் கொன்றனர். ஆதிக் மற்றும் அவரது தம்பியை பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் ஊடுறுவிய ஒரு கும்பல் சுட்டுக் கொன்றது.
இந்த நிலையில் உ.பிக்கு அருகில் உள்ள டெல்லியில் திஹார் சிறையில் வைத்து ஒரு கேங்ஸ்டர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். நேற்று உத்தரப் பிரதேச போலீஸார் ஒரு கேங்ஸ்டரை என்கவுண்டர் செய்துள்ளனர்.
நேற்று கொல்லப்பட்ட ரவுடியின் பெயர் அனில் துஜானா. இவருக்கு மேற்கு உ.பியின் சோட்டா ஷகீல் என்ற பெயர் உண்டாம். மிகப் பெரிய கேங்ஸ்டராக இவர் வலம் வந்துள்ளார். இவர் மீது 18 கொலை வழக்கு உள்பட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. காஸியாபாத், டெல்லி, ஹரியானா ஆகிய பகுதிகளில் இவர் சேட்டை செய்து வந்தார். கடந்த ஏப்ரல் 10ம் தேதிதான் திஹார் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தார். தனக்கு எதிராக சாட்சி சொன்னவர்களை இவர் மிரட்டுவதாக தகவல் வந்தது. இந்த நிலையில்தான் அவரை போலீஸார் வேட்டையாடியுள்ளனர்.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள துஜானா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். இவரது ஒரிஜினல் பெயர் அனில்நகர். நீண்ட காலமாக ரவுடித்தனம் செய்து வந்த நபர்.
திஹார் சிறையிலிருந்து வெளியே வந்ததுமே இவர் மீது புதிதாக 2 வழக்குகளைப் போலீஸார் போட்டனர். அதன் பின்னர் நேற்று என்கவுண்டரில் கொன்று விட்டதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
{{comments.comment}}