Su Venkatesan Vs Vanathi Srinivasan.. உங்களுக்கு ஒவ்வாமையா.. முதல்ல பன் பட்டருக்கு வழி சொல்லுங்க!

Sep 20, 2024,01:16 PM IST

சென்னை:   ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஜனநாயக ஒற்றுமை என்றால் உங்களுக்கு என்ன ஒவ்வாமையா  சு. வெங்கடேசன் அவர்களே என கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேட்டதற்கு, கறுப்பு பணத்தை ஒழிக்கவே "ஒரே நாடு ஒரு தேர்தல்" என்று நீங்கள் சொல்லும் போது உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பதில் கொடுத்துள்ளார்.


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது . இதற்கான கருத்து கேட்பு கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், 18 ஆயிரத்து 626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தயார் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் அந்த குழு சமர்ப்பித்தது. இதை தொடர்ந்து இந்தத் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 


இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமற்றது எனக்கூறி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதேபோல மதுரை எம்பி சு. வெங்கடேசனும் இந்தத் திட்டத்தை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கோவை தெற்கு பாஜக எம் எல் ஏ வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனநாயக ஒற்றுமை என்றால் உங்களுக்கு என்ன ஒவ்வாமையா  சு. வெங்கடேசன் அவர்களே?




நாட்டின் ஜனநாயக ஒற்றுமையைப் பாதுகாக்கவும், நேரவிரயம் மற்றும் நிதி விரயத்தைக் குறைக்கவும், தேர்தலின் போது கட்டுக் கட்டாக கருப்புப்பணம் செலவிடப்படுவதை முறியடிக்கவும், தேர்தல் பிரச்சாரத்தினால் வளர்ச்சித் திட்டங்கள் தடைபடுவதை தவிர்க்கவும், அதிகளவிலான வாக்குப் பதிவை ஊக்குவிக்கவும் நமது மத்திய அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டத்தைக் கண்டு நீங்கள் எதற்காக இத்தனைப் பதட்டப்படுகிறீர்கள் எனப் புரியவில்லை.


பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே தேர்தலாக பல மாநிலங்களில் நடந்த போதிலும் மற்றும் நடந்து கொண்டிருக்கும் வேளையிலும், அத்தேர்தல்களில் தேசிய மற்றும் மாநில கட்சிகள் மாறி மாறி தான் வெற்றி பெற்றுள்ளனவே தவிர, இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை. எந்த ஜனநாயக உரிமையும் பறிக்கப்படவில்லை.


மேலும், இது நமது நாட்டில் 1967 வரை நடைமுறையில் இருந்த ஒரு திட்டம் என்பதும், நீங்கள் பெருமதிப்பு கொண்டுள்ள மறைந்த முன்னாள் திமுக தலைவர் திரு. கருணாநிதி அவர்களே, “ஆண்டுதோறும் மக்கள் மாறி மாறி தேர்தல்களை சந்தித்து வருவதால், ஆட்சி இயந்திரம் பாதிக்கப்படும், எனவே, ஒருங்கிணைந்த தேர்தலை நடத்துவது தான் பொருத்தமானது” என்று இத்திட்டத்தை ஆதரித்து தனது “நெஞ்சுக்கு நீதி” புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பதும் ஊரறிந்த உண்மை. 


பன் பட்டருக்கு முதல்ல வழி சொல்லுங்க - சு. வெங்கடேசன்




அவ்வாறான இத்திட்டத்தை “நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும்” என்று நீங்கள் கூறியிருப்பது முற்றிலும் ஆதாரமற்றது என பதிவிட்டிருந்தார். இதற்கு தற்போது சு. வெங்கடேசன் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


திருமதி. வானதி சீனிவாசன் அவர்களே. கறுப்பு பணத்தை ஒழிக்கவே "ஒரே நாடு ஒரு தேர்தல்" என்று நீங்கள் சொல்லும் போது உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா? கறுப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம், கறுப்பு பணத்தை ஒழிக்கவே பணமதிப்பிழப்பு என்று கருப்பு பண ஒழிப்பை காரணமாக சொல்லி கடந்த காலத்தில் நீங்கள் நிறைவேற்றிய நாடகங்களைக் கண்டு மக்கள் சிரித்துக்கொண்டிருப்பது உங்கள் நினைவுக்கு வரவில்லையா!  


நேர விரயம் பற்றி வேறு பேசியுள்ளீர்கள். தமிழ்நாடு, கேரளாவில் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்த முடிவதற்கு உங்கள் கட்சி இந்த  மாநிலங்களில் வளராததுதான் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் பேசுவது உங்களுக்கு தெரியுமா? 


உத்தரப் பிரதேசம், பீகாரில் எல்லாம் 7 கட்டங்கள் நடக்கிறதே! உங்களால் ஒரு கட்டம், இரண்டு கட்டமாக அங்கே நடத்த முடியாமல் போவதற்கு காரணம் யார் என்பதை உபி மக்கள் புரிந்து கொண்டதால்தானே உங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் பார்த்துக் கொண்டார்கள்.


நிதி விரயம் என்று சில ஆயிரம் கோடிகளுக்கு கவலைப்படும் நீங்கள் கார்ப்பரேட் வரிகளை 10 ஆண்டுகளில் மொத்தம் 11 சதவீதம் குறைத்தீர்களே, அதனால் அரசுக்கு வருவாய் இழப்பு எத்தனை லட்சம் கோடிகள் என்று கணக்கு போட்டு சொல்லுங்களேன். வாரிசுரிமை வரி போட மாட்டேன், அம்பானி அதானி எல்லாம் "பாவம்" என்று அடம் பிடிக்கிற நீங்கள் இந்தியாவின் டாப் 100 சூப்பர் ரிச் மீது வாரிசுரிமை வரி போட்டால் எவ்வளவு லட்சம் கோடி வரும் என்பதை கணக்கு போட்டு சொல்லுங்களேன்.


தேர்தல் வெற்றி, தோல்விக்காக நாங்கள் பேசவில்லை. ஒன்றியத்தில் ஒரு ஆட்சி வரலாம், போகலாம். மாநிலங்களிலும் ஆட்சிகள் வரலாம், போகலாம். மக்களின் நம்பிக்கையை இழக்கலாம். இரண்டு மட்ட தேர்தல்களுக்கான பிரச்சினைகள் வேறு. மக்களின் எதிர்பார்ப்புகள் வேறு. எதற்கு இயந்திர கதியாக கால்களை கட்டிப் போட முனைகிறீர்கள்? கூட்டாட்சி கோட்பாடு நீர்த்துப் போக குறுக்கு வழி தேடுகிறீர்கள். 


ஆறு ஆண்டுகளாக மக்களவையின் துணை சபாநாயகர் தேர்தலை நடத்தாத பாஜக மக்களாட்சியின் மகத்துவத்தையும், தேர்தலின் மகத்துவத்தையும் பற்றி ஆயிரம் பக்கத்துக்கு அறிக்கை கொடுக்கிறது.


திருமதி வானதி சீனிவாசன் அவர்களே, GST யை முறைப்படுத்தி ஒரே மாதிரி பில் போட வசதி செய்யுங்கள் எனக் கேட்டவரை அந்தப்பாடு படுத்திவிட்டு இப்பொழுது ஒரே கட்ட தேர்தலுக்கு வந்து வழக்காடுகிறீர்கள். பன்னுக்கும் பட்டருக்கும் வழிசொல்ல முடியவில்லை. இதில் பஞ்சாப்புக்கும் பாண்டிச்சேரிக்கும் வந்து வழிகாட்டுகிறீர்கள்.


ஜனாதிபதி ஆட்சி முறையை நோக்கி நாட்டை நகர்த்த நினைக்கும் பாஜக வின் தீய எண்ணத்தை இந்தியா முறியடிக்கும். அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரான எதையும் வீழ்த்தும் வலிமையும், முதிர்ச்சியும் இந்திய ஜனநாயகத்துக்கு உண்டு என கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நெற்றிப் பொட்டு போயே போச்சு.. கவனிச்சீங்களா?.. முழுமையான பெரியார் தொண்டனாக மாறிய விஜய்!

news

வடக்கு அந்தமான் அருகே.. புதிய காற்றழுத்தம்.. நாளை உருவாகும் என்று வானிலை மையம் தகவல்

news

சக்ஸஸ்.. மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது வழித்தடத்தில்.. சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது!

news

வளைகாப்பு நடத்துவது எப்படி? வேலூர் காங்கேயநல்லூர் அரசுப் பள்ளி மாணவிகளின் ரீல்ஸ்..டீச்சர் சஸ்பெண்ட்!

news

Su Venkatesan Vs Vanathi Srinivasan.. உங்களுக்கு ஒவ்வாமையா.. முதல்ல பன் பட்டருக்கு வழி சொல்லுங்க!

news

ஐபோன் 16 விற்பனை தொடக்கம்.. நீண்ட க்யூவில் நின்று போட்டி போட்டு வாங்கிச் சென்ற ஐ போன் பிரியர்கள்!

news

திருப்பதி லட்டில் கொழுப்பா... குடும்பத்தோடு சத்தியம் செய்ய நாயுடு ரெடியா? .. ஜெகன் கட்சி சவால்!

news

உளவியல் சிகிச்சைக்கு மருந்து மாத்திரைகளுடன்.. உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்.. வைரமுத்து

news

என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீங்கன்னு சொன்னேன்ல.. செய்தியார்களிடம் சீறிய ரஜினிகாந்த்!

அதிகம் பார்க்கும் செய்திகள்