சென்னை: அதிமுகவின் ஒரு பிரிவு தலைவரான ஓ.பன்னீர் செல்வம் திடீர் குஜராத் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பாஜக முக்கியத் தலைவர்களை சந்திக்க சென்றிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
அதேசமயம், அகமதாபாத் தமிழ்ச் சங்க விழாவில்தான் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கச் சென்றிருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.
ஈரோடு இடைத் தேர்தல் தொடர்பாக அதிமுக கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட தமாகா இந்த முறை போட்டியிடாமல் சீட்டை அதிமுக வசம் ஒப்படைத்து விட்டு விலகிக் கொண்டு விட்டது.
அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார். அப்படி நிறுத்தினால், போட்டி வேட்பாளரை ஓ.பி.எஸ் தரப்பு நிறுத்தும் என்று தெரிகிறது. அதேசமயம், இத்தொகுதியில் தான் போட்டியிட பாஜக விரும்புகிறது.
ஆனால் பாஜகவுக்கு சீட்டை விட்டுக் கொடுத்தால் அதிமுகவின் இமேஜ் மேலும் சரியும் என்பது எடப்பாடி தரப்பின் கருத்தாகும். பாஜக போட்டியிட்டால், திமுக கூட்டணியின் அனலை சமாளிக்க முடியாமல் பெரும் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்பது அதிமுகவின் கருத்தாக உள்ளது. திமுகவின் பலத்தை, குறிப்பாக செந்தில் பாலாஜியின் உத்திகளை, சமாளிக்க அதிமுகவால் மட்டுமே முடியும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் வாதமாக உள்ளது.
நிலைமை இப்படி இருப்பதால் குழப்பம் தீரவில்லை. மேலும் எடப்பாடி பழனிச்சாமி அணி போட்டியிட்டால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு சிக்கல் வரலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில்தான் ஓ.பன்னீர் செல்வம் குஜராத் பயணமாகியுள்ளார். அங்குள்ள அகமதாபாத் தமிழ்ச்சங்க விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் முக்கிய பாஜக தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் தனது பயணத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்று ஓ.பி.எஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஓ.பி.எஸ்ஸுக்கு தற்போது சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதை பாஜக முக்கியமாக பார்க்கிறது. ஓ.பி.எஸ்ஸும் அதிமுகவுடன் இணையும்போது மொத்தமாக அத்தனைத் தலைவர்களும் இணைந்து செயல்பட வாய்ப்பு ஏற்படும். அப்போதுதான் அதிமுகவின் முழு பலமும் திரும்பும். அதுதான் வரும் 2024 லோக்சபா தேர்தலில் திமுகவை கடுமையாக எதிர்க்க கை கொடுக்கும் என்பது பாஜகவின் கருத்தாக உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இந்த முழு இணைப்பை விரும்பவில்லை என்பதால் பிரச்சினை தொடர்கிறது.
{{comments.comment}}