மதுரை: அதிமுக பொதுக்குழுக் கூட்டம், தீர்மானங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்தத் தீர்ப்போடு, ஓபிஎஸ்ஸின் அரசியல் முடிந்து போய் விட்டது என்று கூறியுள்ளார் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக இன்று சுப்ரீம் கோர்ட் அதிரடித் தீர்ப்பை அளித்துள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பெரும் மகிழ்ச்சியையும், ஓ.பி.எஸ் தரப்புக்கு பேரதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்து தற்போது எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் மகள் மற்றும் 51 ஜோடிகளுக்கு நடத்தப்பட்ட திருமண விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், இன்றைக்கு உச்சநீதிமன்றத்திலிருந்து அற்புதமான தீர்ப்பு வந்துள்ளது. பொதுக்குழு செல்லும். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என்று வந்துள்ளது. இது நல்ல தீர்ப்பு. தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளது.
ஓன்றரை கோடி அதிமுகவினருக்கும் இது மிகப் பெரிய மகிழ்ச்சி அளித்துள்ளது. தீர்ப்பு முடிந்தது.. அவரது அரசியலும் முடிந்து போய் விட்டது. இனி அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுக இனி எழுச்சியோடு கட்சிப் பணி ஆற்றும். அவர்கள் சிவில் கோர்ட் மட்டுமல்ல, எங்கு சென்றாலும் எங்களுக்குக் கவலை இல்லை. உச்சநீதிமன்றம்தான் இறுதியானது. அங்கேயே சொல்லப்பட்டு விட்டது என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
இரவெல்லாம் தூங்கவில்லை.. எடப்பாடி பழனிச்சாமி உருக்கம்
முன்னதாக திருமண நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, திருமணத்திற்கு வருவதற்கு முன்பு நான் அம்மா கோவில் சென்றேன். அங்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளை வணங்கியபோது, இன்று நல்ல தீர்ப்பு வர வேண்டும் என்று மனம் உருக பிரார்த்தித்தேன். இதோ நல்ல செய்தி வந்து விட்டது. நான் தீர்ப்பை எண்ணி கலங்கிப் போயிருந்தன். இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவித்தேன். தீர்ப்பு சாதகமாக வெளியானதால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
கடந்த 7 மாதமாக அதிமுகவினர் பட்ட வேதனைகள் எண்ணில் அடங்காதது. அதிமுகவை அழிக்க நினைத்த எட்டப்பர்கள் இன்று அழிக்கப்பட்டு விட்டனர். திமுகவின் பி டீம் தோற்றுப் போய் விட்டது. அவர்களது முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது.
நான் வணங்கியது எம்ஜிஆர், ஜெயலலிதா எனும் தெய்வங்களை.. அந்த தெய்வ சக்தி படைத்த தலைவர்கள் கொடுத்த தீர்ப்பு இது. எம்ஜிஆர் இயக்கத்தை தோர்றுவித்தபோது திமுக தீய சக்தி என்றார். அதனால்தான் அதிமுக தோற்றுவித்தேன் என்றார். இறுதி மூச்சு வரை திமுகவை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர் எம்ஜிஆர். அதே வழியில் வந்த ஜெயலலிதா பல துயரங்கள், வேதனைகள், இன்னல்கள் இடர்பாடுகளை சகித்துக் கொண்டு எம்ஜிஆர் வழியில் நின்று வகுத்துத் தந்த பாதையில் சென்று தீய சக்தியை தமிழகத்தை ஒடுக்குவதற்கு அவருடைய ஆட்சிக்காலத்தில் சாதித்துக் காட்டினார். அதே போல நாங்களும் தொடர்ந்து தீவிரமாக செயல்படுவோம் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
{{comments.comment}}