சென்னை: ஓட்டு போடுவது.. நமது உரிமை, கடமை.. என்பதை வலியுறுத்தி 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்திட சபதம் ஏற்போம். குடும்பத்தில் ஓட்டுரிமை பெற்றவர்கள் அனைவரும் ஓட்டளித்து வளமான இந்தியாவை உருவாக்க உங்கள் பங்களிப்பை தந்திட வேண்டும் என ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழ் தயார் செய்து தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.
லோக்சபா தேர்தல் திருவிழா தமிழ்நாட்டில் நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக பொதுமக்கள், நடிகர் நடிகைகள், தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற தயாராக உள்ளனர். மேலும் ஒவ்வொருவரின் வாக்கும்.. அவர்கள் வாக்களிப்பதும்.. எவ்வளவு முக்கியம் என்பதை வரும் தலைமுறையினருக்கு பலரும் பல்வேறு வழியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நம் நாட்டில் குழந்தை பிறப்பு முதல் அந்த குழந்தைக்கு கல்யாணம் வரையிலும் எவ்வளவோ நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு அழைப்பிதழ் தயார் செய்து நண்பர்கள் உறவினர்களுக்கு கொடுத்து அதனை கொண்டாடி மகிழ்வர்.அந்த வரிசையில் நாளை என்ன நாள் தெரியுமா..? நாளை தான் நம் வாக்களிக்கும் தினம்.நம் இந்திய நாட்டிற்கே முக்கியமான ஒரு தருணம். அந்த அழகான தருணத்தை கொண்டாடும் வகையில் ஜனநாயக திருவிழாவிற்கான அழைப்பிதழ் ஒன்றை தயார் செய்து தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட கல்யாணப் பத்திரிகை போல இதை அச்சடித்து அசத்தியுள்ளனர்.
அந்த அழைப்பிதழில், உங்கள் வாக்கை பதிவு செய்ய அன்புடன் அழைக்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவை ஜனநாயக முறைப்படி நடக்கும், உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்திய தமிழ்நாட்டில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்திட சபதம் ஏற்போம். தாங்கள் தங்கள் குடும்பத்தில் ஓட்டுரிமை பெற்றவர்களுடன் வருகை தந்து ஓட்டளித்து வளமான இந்தியாவை உருவாக்க உங்கள் பங்களிப்பை தந்திட வேண்டுகிறோம். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வரும் இந்த அற்புத வாய்ப்பை தவறவிடாமல் ஜனநாயக கடமையாற்றிட அன்புடன் அழைக்கிறோம். இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம் என குறிப்பிட்டுள்ளனர்.
இது தவிர ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும், எனக்கு ஒரு கவலை இல்லை எனக் கூறி ஓட்டு போடாமல் இருக்காதீர்கள். பொறுப்புள்ளவர்களின் அடையாளம் வாக்களிப்பது.. வாக்களிப்போம்.. ஜனநாயகத்தை தழைக்க செய்வோம் ..உங்கள் வாக்கு.. உங்கள் எதிர்காலம்..!
{{comments.comment}}