டெல்லி: பங்களாவை விற்க எதிர்ப்பு தெரிவித்த மனைவியை கொலை செய்து பாத்ரூமில் போட்டு விட்டு, தான் போய் ஸ்டோர் ரூமில் மறைந்து கொண்டார் கணவர். 36 மணி நேரமாக ஸ்டோர் ரூமில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் கண்டுபிடித்து "வாங்க சார் வெளியே" என்று அழைத்து வந்து கைது செய்தனர்.
டெல்லி அருகே உள்ள நொய்டாவில் வசித்து வந்தவர் ரேனு சின்ஹா. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞராக இருந்து வந்தார். இவர் தனது கணவர் நிதின் நாத் சின்ஹாவுடன் நொய்டாவின் 30வது செக்டார் பகுதியில் உள்ள பங்களாவில் வசித்து வந்தார். நிதின் நாத்தும் வழக்கறிஞர்தான். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
நிதின் நாத் சின்ஹா, தனது பங்களாவை விற்று விட முடிவு செய்தார். ஆனால் அதற்கு ரேனு சின்ஹா எதிர்ப்பு தெரிவித்தார். பங்களாவை விற்க வேண்டாம் என்று கூறி வந்தார். ஆனால் கணவர் கேட்கவில்லை. வீட்டை விற்பதற்கு ஏற்பாடு செய்து விட்டதாக கூறப்படுகிறது. ஒருவரிடம் பங்களாவை விற்க ரேட் பேசி அட்வான்ஸும் வாங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.
இந்த நிலையில்தான் ரேனு சின்ஹாவிடமிருந்து வழக்கமாக வரும் போன் அழைப்புகள் எதுவும் வராததால் அவரது சகோதரருக்கு குழப்பமாகி விட்டது. நிதின் நாத்துக்கு போன் செய்தால் அதுவும் போகவில்லை. இதனால் அவருக்கு தனது அக்கா கணவர் மீது சந்தேகம் வந்துள்ளது. உனடியாக அவர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். தனது அக்காவை நிதின் நாத் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார் அவர்.
உடனடியாக போலீஸார் விசாரணையில் இறங்கினர். நிதின் நாத் வீட்டில் புகுந்து சோதனையிட்டபோது பாத்ரூமில் பிணமான நிலையில் ரேனு சின்ஹாவின் உடல் கிடந்தது. அதை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. நிதின் நாத் குறித்து தேடுதல் வேட்டை நடத்தியபோது அவரது செல்போன் ஆப் ஆகியிருந்தது தெரிந்தது. ஆனால் கடைசியாக வந்த போன் அழைப்பு மற்றும் சிக்னல் ஆகியவை வீட்டுக்குள்தான் நிதின் நாத் இருந்ததை உறுதிப்படுத்தியது.
இதையடுத்து பங்களா முழுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போதுதான் ஸ்டோர் ரூமில் நிதின் நாத் பதுங்கியிருந்தது தெரிய வந்தது. கிட்டத்தட்ட 36 மணி நேரமாக நிதின் நாத் ஸ்டோர் ரூமுக்குள் பதுங்கியிருந்துள்ளார். இதையடுத்து அவரை வெளியே கூட்டி வந்து போலீஸார் விசாரணை நடத்தியபோது தான்தான் ரேனு சின்ஹாவைக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார் நிதின் நாத். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
வக்கீலுக்குப் படிச்சு என்ன புண்ணியம்.. ஆத்திரத்தில் புத்தி வேலை செய்யாமல் போய் விட்டதே!
{{comments.comment}}