டில்லி : டீசல் வாகன விற்பனைக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளதாக பரவும் தகவல் குறித்து மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார்.
டீசல் வாகன விற்பனைக்கு அக்டோபர் 01 ம் தேதி முதல் கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இது பற்றி மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அப்படி எந்த ஒரு பரிசீலனையும் தற்போது வரை மத்திய அரசிடம் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். அதே சமயம் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக, அதிக புகையை வெளிப்படும் டீசல் வாகனங்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஜிஎஸ்டி மாசுபாடு வரி என்ற பெயரில் விதிக்கலாம் என நான் கூறி இருந்தேன் என்றார்.
இது போன்ற தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க அவசரமாக விளக்கம் அளிக்க வேண்டி உள்ளது என எக்ஸ் தளத்திலும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 2070 ம் ஆண்டிற்குள் காற்றில் கார்பன் அளவை ஜீரோ என்ற அளவில் கொண்டு வர வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
டீசல் போல் எரிபொருட்களால் ஏற்படும் அதிக புகையை கட்டுப்படுத்த வேண்டும் என ஆலோசித்து வருவது உண்மை தான். வாகன விற்பனையும் அதிகரித்து வருவதால் மாற்று எரிபொருட்கள் பயன்பாட்டை கொண்டு வரவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவைகள் அதிக செலவில்லாமல், மாசுபாடு ஏற்படுத்தாததாகவும் இருக்கும் என்றார்.
சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய கட்காரி, டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பத தொடர்பாக மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன் என குறிப்பிட்டிருந்தார். இதனால் மத்திய அரசு முடிவு செய்து விட்டதாகவும், உடனடியாக அமல்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் பரவ துவங்கி விட்டன. இதனால் நிதின் கட்காரி தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
{{comments.comment}}