"நான் என்றுமே விஜயின் விசுவாசி தான்.. அவர் பெரிய தலைவராக வரவேண்டும்".. இயக்குநர் பேரரசு

Feb 07, 2024,04:05 PM IST

சென்னை: நான் என்றுமே  விஜயின் விசுவாசி தான்.. அவர் பெரிய தலைவராக வரவேண்டும் என இயக்குனர் பேரரசு நினைவெல்லாம் நீயடா பட இசை வெளியீட்டு விழாவில் மனம் திறந்து பேசியுள்ளார்.


லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இசை ஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம் நினைவெல்லாம் நீயடா. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன், பி.எல் தேனப்பன், இயக்குனர்கள், ஆர்.பி உதயகுமார், பேரரசு,கவிஞர் சினேகன், நடிகைகள், கோமல் சர்மா மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 


நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு பேசியதாவது:




இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை. விஜய் ஒரு நல்ல தலைவராக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். நான் என்றுமே விஜய்யின் விசுவாசி தான். அவர் பெரிய தலைவராக வரவேண்டும். இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது எனக்கு 'பன்னீர் புஷ்பங்கள்' படம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது. நம்மை பள்ளி காலகட்டத்திற்கு அழைத்துச் சென்று விட்டது. இளையராஜாவின் 1417வது படம் இது. இந்த சாதனையை இசைஞானி ஒருவரால் தான் செய்ய முடியும். 


நாம் சோகமாக இருக்கும் போதெல்லாம் அவருடைய பாடல்களைக் கேட்டு ஆறுதல் அடைந்தோம். இன்று அவர் வீட்டில் துக்கம்.. ஆண்டவன் தான் அவருக்கு ஆறுதல் தரவேண்டும். படத்தில் நடித்துள்ள யுவலட்சுமிக்கு நடிகை சுவலட்சுமியின் குடும்பப் பாங்கான தோற்றம் அப்படியே இருக்கிறது. 


காதலித்து தோல்வி அடைந்தவர்கள் அப்படியே அந்த பசுமையான நினைவுகளுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். 20 வருடங்களுக்குப் பிறகு காதலியைப் போய் பார்க்கலாம் என்று நினைத்தால் உங்களுக்கு அவரது தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சி தான் கிடைக்கும். அதன் பிறகு மனதில் பசுமையான நினைவுகள் எதுவுமே வராது  என்றார்.


இயக்குநர் ஆர்.வி உதயகுமார் 




எல்லா உணர்வுகளுக்கும் இசை கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. இந்த காதல் உணர்வு எல்லாம் அவருக்கு சாதாரண விஷயம். படத்தின் நாயகி யுவலட்சுமிக்கு இந்த பாடல் மூலமாகவே மிகப்பெரிய ரீச் கிடைக்கும். 


முன்பெல்லாம் நாங்கள் தயாரிப்பாளர்களின் இயக்குநர்களாக இருந்தோம். இப்போதைய காலம் நடிகர்களின் தயாரிப்பாளர்களாக அவர்கள் மாறிவிட்டார்கள். முதன்முறையாக இளையராஜா தனது ஆடியோ உரிமையை எடுத்துக் கொள்ளாமல் இவர்களிடமே கொடுத்துவிட்டார். அதுதான் இளையராஜா. 


விஜய் சாரைத் தொடர்ந்து எல்லா நடிகர்களும் ஒரு கட்சி ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் நமக்கெல்லாம் நிறைய வேலை கிடைக்கும் என்றார் அவர்.


பாடலாசிரியர் சினேகன்




ஆதிராஜன் நான் பாடல் எழுத துவங்கிய காலகட்டத்தில் இருந்து எனக்கு நெருங்கிய நண்பர். அவரது தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகத் தான் இந்த “நினைவெல்லாம் நீயடா” படம் வந்திருக்கிறது. இதில் மூன்று பாடல்கள் எழுதி இருக்கிறேன். இதுவரை நான் 3000 பாடல்கள் எழுதி இருந்தாலும் அதில் 30 பாடல்கள் தான் கமர்சியல் பாடல்கள். 500 பாடல்களாவது மிகச்சிறந்த பாடல்கள் ஆக இருக்கும் என நான் நம்புகிறேன். 


இந்தப் பாடல்களைத் தூக்கி விமர்சனம் செய்ய விரும்பாத இந்த சமூகம் என்னுடைய கமர்சியல் பாடல்களை  எடுத்து விமர்சனம் செய்து கொண்டு, ‘இதுதான் சினேகன்’ என்று சொல்லும்போது எனக்கு வலிக்கிறது.  நானும் கதைக்கு பாடல் எழுத வேண்டும் என்று தான் ஓடி வந்தேன். இந்த சினிமா என்னை சதைக்கு பாடல் எழுத வைத்து விட்டது. 


என்னுடைய முகவரி அது அல்ல. என்னுடைய முதல் படத்திலேயே விருது வாங்கியவன் நான். இந்த சமூகம் ஏன் நல்ல விஷயத்தை எடுத்துக் கொண்டாட மாட்டேன் என்கிறது? காதல் மரியாதையை எதிர்பார்ப்பதில்லை. அப்படி எதிர்பார்த்தால் அது காதலும் இல்லை. இங்கே தோற்பது காதலர்கள் தானே தவிர காதல் ஒருபோதும் தோற்காது என்று கூறினார்.


இயக்குநர் கேயார்




இந்த விழாவில் கலந்து கொண்ட எல்லோரும் ஏதோ பேச வேண்டும் என்று நினைத்து தங்களை அறியாமல் உண்மையை பேசி உள்ளார்கள். ஒரு பட்டிமன்றம் ஆகவே இந்த விழா மாறிவிட்டது. ஆதிராஜனை எனக்கு ஆதி காலத்திலிருந்தே தெரியும். பத்திரிகை துறையில் இருந்து அவர் இயக்குநராக வந்திருந்தாலும் பல போராட்டங்களைத்  தாண்டித்தான் இந்த இடத்தில் நிற்கிறார். இளையராஜாவால் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல.. தமிழ் நாட்டுக்கே பெருமை. அப்படி ஒரு இசை மேதை இல்லை என்றால் இன்று நம் சினிமா எப்போதோ செத்துப் போய் இருக்கும்  என்று கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்