புத்தி கூர்மையும், அதை காரியத்தில் சரியாக பயன்படுத்தும் திறனும் கொண்ட மிதுன ராசிக்காரர்களே....உங்களுக்கு பிறக்க போகும் 2024 ம் ஆண்டு எப்படி இருக்கும்? என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
புதனின் ஆதிக்கம் கொண்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள். மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் மிதுன ராசியில் வரும். இவற்றில் மிருகசீரிஷம் செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரம். திருவாதிரை சிவ பெருமானுக்குரிய நட்சத்திரம், ராகு பகவானின் ஆதிக்கம் கொண்டது. புனர்பூசம் நட்சத்திரம் குரு பகவானின் ஆதிக்கம் கொண்டதாகும்.
நல்ல யோக பலன்கள் காத்திருக்கு
2024 ம் ஆண்டு மிதுன ராசிக்கு நல்ல யோக பலன்களை தரக் கூடியதாக அமைய போகிறது. கடந்த 2 வருடங்களாக படாத பாடு படுத்திய சனி பகவான் இந்த வருடம் முழுவதும் நல்ல பலனை தரக் கூடிய 9 ம் இடத்தில் வந்து அமர்ந்துள்ளார். ராகு பகவான் 10ம் பாவத்திலும், கேது பகவான் 4ம் பாவத்திலும் இருக்கிறார். இதனால் வேலை செய்யக் கூடிய இடத்தில் இருக்கும் பிரச்சனைகள் நிவர்த்தியாகும். வெளிநாடு சென்று வேலை செய்யும் ஆசை இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும்.
குரு பகவான் 11ம் இடத்தில் இருப்பதால் மதிப்பு, மரியாதை, குபேர சம்பத்துக்களும் ஏற்படும். உங்களின் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்கிர பகவான் இந்த ஆண்டு முழுவதும் நேர்கதியில் பயணிப்பதால் 2024ம் ஆண்டில் பணவரவு சற்று அதிகமாகவே இருக்கும். செலவுகளும் கொஞ்சம் ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதால் அதிகப்படியான செலவுகளை கட்டுப்படுத்த முடியும்.
சகோதர சகோதரிகள் மூலமாக பலன் கிடைக்கும்
உங்கள் ராசிக்கு 3 இடத்தின் அதிபதியான சூரிய பகவான் இந்த வருடத்தில் 6ம் பாவத்தில் இருக்கிறார். பிப்ரவரி 13ல் இருந்து மார்ச் 14 வரை சூரிய பகவான், சனியுடன் சேர்ந்து 9ம் இடத்தில் பயணிக்க உள்ளார். இந்த சமயத்தில் சகோதர, சகோதரிகள் மூலமாக நல்ல பலன்கள் கிடைக்கும். புரொமோஷன், தொழில் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை செய்வதாக இருந்தால் இந்த ஒரு மாத காலத்தில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
குரு பகவான் மே மாதம் 1ம் தேதிக்கு பிறகு 12 ம் பாவத்திற்கு வந்து விடுகிறார். அவருடைய பார்வையாக 6,8,4 ஆகிய பாவங்களை பார்க்கிறார். இதனால் புதிய வீடு,மனை யோகம் அமைப்புகள் ஏற்படும். நீங்கள் கேட்ட இடத்தில் உடனடியாக பணமோ, உதவியோ கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த மனக்கஷ்டங்கள் தீரும்.
பண வரவு அதிகரிக்கும்.. தொழிலில் லாபம் கிடைக்கும்
சுக்கிர பகவானால் பண வரவு அதிகமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அரசு வேலை,சொந்த தொழில், ஐடி துறை இருப்பவர்கள், ஆடை, ஆபரண துறை, மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய உள்ளது. இந்த ஆண்டில் மிதுன ராசிக்காரர்களுக்கு 9 என்ற எண் அதிர்ஷ்டத்தை தரக் கூடியதாக இருக்கும். அதே போல் நீல நிறம், கருநீலம், சாம்பல் நிறம் ஆகியன நல்ல யோக பலன்களை தரும் நிறமாக இருக்கும்.
இந்த ஆண்டில் 7 என்ற எண்ணை தவிர்க்க வேண்டும். புதன்கிழமையில் பெருமாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வருவது நல்லது. முடிந்தவர்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். இப்படி செய்வதால் நல்ல யோக பலன்கள் இந்த ஆண்டில் மிதுன ராசிக்காரர்களுக்கு காத்திருக்கிறது.
{{comments.comment}}