நெற்குப்பை கூட்டுப் பொங்கல்.. ஆட்டம் பாட்டம்.. ஜாலி விளையாட்டுக்கள்.. கொண்டாடி மகிழ்ந்த குடும்பங்கள்

Jan 18, 2025,08:05 PM IST

சிவகங்கை: அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான் என பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகம் வந்து 27 குடும்பத்தினர் ஒன்று கூடி  75 க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பொங்கல் ஒற்றுமை விழாவை கொண்டாடியது பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.


சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி தலைமை ஆசிரியரான லெ. சொக்கலிங்கம் கடந்த ஆண்டு நமக்கு ஒரு அருமையான கட்டுரையைக் கொடுத்திருந்தார். அதில் நெற்குப்பையில் நடைபெறும் கூட்டுப் பொங்கல் குறித்து விவரித்திருந்தார். பலரையும் ஆச்சரியப்படுத்தியது அந்த செய்தி. அதேபோல இந்த ஆண்டும் நெற்குப்பையில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 75 க்கும் மேற்பட்டோர் கூடி பொங்கல் வைத்து கொண்டாடிய சிறப்பு தொகுப்பை நமக்கு அனுப்பி வைத்துள்ளார். வாங்க அந்த சந்தோஷ விழாவை நாமும் படித்து மகிழ்வோம்.


அருகிப் போன கூட்டுக் குடும்பங்கள்




நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த பின்னர் குடும்ப உறவுகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஆண்களுக்கு நிகராக பெண்களும் படித்து, மனைவி ஒரு இடத்திலும் கணவன் ஒரு இடத்திலும் பணிபுரியும் அளவிற்கு காலம் மாறிவிட்டது. இதனால் கணவன் மனைவி இருவரும் ஒன்று கூடி இருப்பதே இன்று மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது. இதில் கூட்டுக் குடும்பம் மிகவும் அரிதாகிவிட்டது. ஏனெனில் தாய் தந்தை மகன் மகள் என்ற குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களே பிரிந்து இருக்கும்போது நான்கு ஐந்து குடும்பங்கள் ஒன்றிணைந்து இருப்பது என்பது கேள்விக்குறியாகிவிட்டது. 


அந்த வரிசையில் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பகுதியில் ஒரே வீட்டில் 27 குடும்பங்களை சேர்ந்த ஐந்து வயது முதல் 90 வயது பெரியவர் வரை தொடர்ந்து ஏழாவது ஆண்டாக வாழ்ந்து வருகின்றனர். அதிலும் தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு 75க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமை பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளனர் இது அனைத்து தரப்பிலும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. 


எல்லோருக்கும் ஒரே டிரஸ்




இந்த பொங்கல் விழாவில் அனைத்து பெண்களும் ஆண்களும் ஒரே மாதிரியான கலரில் சேலை சட்டை அணிந்து பொங்கல் வைத்தனர். அப்போது பெண்கள் ஆண்களுக்கு சேலை கட்டும் போட்டி, பந்து சேகரித்தல், தவளை ஓட்டம்,தட்டுகளின் மீது பந்து அடுக்குதல், பேனாவை வைத்து கப்புகளை அடுக்குதல், தலையில் இருந்து பிஸ்கட்டை கை வைக்காமல் சாப்பிடுதல், மியூசிக்கல் சேர், பொருட்களை வைத்து விளையாடுதல், ஊசியில் நூல் கோர்த்தல், கையெழுத்துப் போட்டி, தம்போல போட்டி, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூடி விளையாடும் போட்டி, பட்டிமன்றம், லோகோ அமைக்கும் போட்டி, என மூன்று நாட்களுமே பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் புதுவிதமான விளையாட்டுகளில் குடும்ப உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வீடே களைகட்டியது .


பொதுவாக கணவன் மனைவியிடையே ஒற்றுமை இல்லாமல் தனித்தனியாக வாழ்ந்து வரும் இந்தக் காலத்தில் வீடுகளும் தற்போது உள்ள காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் 75 உறுப்பினர்களுக்கும்  மேற்பட்டோர் ஒன்றாக வாழும் இந்த குடும்பத்தின் பொங்கல் விழாவில் 20 நாட்களுக்கு முன்பே லோகோ அமைக்கப் போட்டியும் அறிவித்து இதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று உள்ளனர். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டுள்ளது.


வீடியோ: நெற்குப்பை கூட்டுப் பொங்கல் விழா


3 மாதங்களுக்கு முன்பே திட்டமிடல்




இப்படி குடும்ப ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக மூன்று மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிட்டு பல்வேறு முயற்சிகளை செய்து சரியான திட்டங்களை தீட்டி விழாக்களை கொண்டாடியது பலரையும் ஆச்சரியப் படுத்தி வருகிறது.  இதற்குக் காரணம் பாம்பே சேதுராமன் சாத்தப்பன் தான். அவர்தான்  பிள்ளையார் சுழி போட்டு இதற்கான நிகழ்ச்சி  ஏற்பாட்டாளர்களை நியமித்துள்ளார். இந்த ஆண்டின் நிகழ்வு குறித்து அமைப்பாளர்  முத்து கூறுகையில்,  மூன்று மாதங்களுக்கு முன்பாகவே சேலை எடுத்து, அந்த சேலையை தறியில்  நெய்ய கொடுத்து செய்த பிறகு அதற்காக ஜாக்கெட்டும் எடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்தோம். சேலைகள்  தயாரானதுடன் அமெரிக்கா , சிங்கப்பூர், கோவை,மதுரை, திருச்சி என பல இடங்களிலும் உள்ள உறவினர்களுக்கு கூரியர் மூலம் சேலைகளை அனுப்பி விடுவோம்.


ஆண்களுக்கும் ஒரே மாதிரியாக சட்டைகள் மீட்டர் அளவு கேட்டு  அதற்கான முயற்சிகளையும் எடுத்து பல்வேறு விதமான முயற்சிகளுக்குப் பிறகு இந்த நிகழ்வை நடத்துகிறோம். பொங்கல் விழாவுக்கு முன்பு முதல் நாள்  சேலைகளையும் , சட்டைகளையும் குடும்பத்தில் உள்ள  பெரியவர்களிடம்  கொடுத்து  ஆசீர்வாதம் வாங்கி பெற்றுக்கொள்வோம்.


வாட்ஸ் ஆப் குழுவில் டிஸ்கஷன்




போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வாங்கப்பட்டது. இந்த பரிசுக்காக வாட்ஸ்அப் குழுவில் பல்வேறு விதமான உரையாடல்களை நடத்தி அர்த்தமுள்ள பரிசுகளாக அனைவருக்கும் வழங்குகிறோம். விழா நடப்பதற்கு மூன்று நாட்கள் முன்கூட்டியே எங்கள் அண்ணன்கள், அண்ணிகள் , தம்பி ஆகிய அனைவரும் இணைந்து  நல்ல திட்டமிடல் செய்தோம். அனைவருக்கும் வேண்டிய உணவு வகைகளும் மூன்று நாட்களுக்கும் நாட்டரசன்கோட்டையில் இருந்து வந்த சமையல் குழுவினர் சிறப்பான முறையில் சமைத்து கொடுத்ததனர். சமையலுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஏற்பாடுகள் 

திட்டமிட்டபட்டது .


என்னென்ன மாதிரியான விளையாட்டுக்களை விளையாடலாம் என்பது தொடர்பாகவும், பழமையான, புதுமையான அனைத்து விதமான விளையாட்டுக்களை விளையாடுவது தொடர்பாகவும், ஒரு மாதம் முன்பாகவே வாட்ஸப் குழுவின் மூலமாக உரையாடல்களை நடத்தி அதிலும் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை செய்தோம் என கூறினார் .


இளைஞர்கள் முன்னின்று நடத்தும் விழா




இந்த விழாவில் கலந்து கொண்ட தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகப்பள்ளி தலைமை ஆசிரியர் லெ சொக்கலிங்கம் கூறுகையில்,  இந்த நிகழ்விற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். நானும் சென்றிருந்தேன். குடும்பத்தின் மூத்தவர் சுந்தரம் செட்டியார் முன்னிலையில் விழா நடந்தது. இவ்விழாவை நடத்த ஆண்டுதோறும் 2 இளைஞர்களை தேர்வு செய்கிரார்கள். அந்த இருவர்தான் பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள். இந்த ஆண்டில் ராஜா, முத்து ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு விழா ஏற்பாட்டை செய்திருந்தனர். 


இந்த ஆண்டு வந்திருந்த அனைவருக்கும் பொங்கல் பணம் வழங்கப்பட்டது. மியூசிக்கல் சேர் போட்டியில் புதிய விதமாக சொல்லும் பொருளை எடுத்து கொண்டு சேரில் அமர சொன்னார்கள். அதுவும் புதுமை.பொதுவாக விட்டு கொடுத்தால், ஒற்றுமையாக இருத்தல் என பல நன்மைகள் இதன் மூலம் ஏற்படுகிறது. எனக்கும் இது புதிய அனுபவமாக இருந்தது. என்னுடன் எனது குடும்பத்தினரையும் அழைத்து சென்றேன்.புதிய அனுபவமாக இருந்ததாக கூறினார்கள்.


குடும்பத்தில் ஒற்றுமை திளைக்க இது உதவும்




இந்நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் இது குறித்து கூறும்போது, இந்த மூன்று நாள் பொங்கல் நிகழ்வில் இவர்கள் அனைவரும் ஒன்றாக கூடி  மகிழ்வது  அவர்களுக்கு பல மாதங்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.ஒருவர் இருவரே இன்று சொந்தத்தில் அளவளாவ இயலாத நிலையில், இத்தனை பேர் ஒரே இடத்தில் அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் என்று பல்வேறு இடங்களில் இருந்தும் வந்திருந்தது மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.


இந்த நிகழ்வை ஆரம்பித்த சேதுராமன் சாத்தப்பன் அவர்களுக்கும், தொடர்ந்து இதனை நடத்திவரும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன் என என்னிடம் கூறியுள்ளனர்.

குடும்பத்தில் ஒற்றுமை திளைக்க , இளைய சமுதாயம் நல்வழி பெற என அனைத்து நல் செயல்பாடுகளுக்கும்  பாம்பே சேதுராமன் சாத்தப்பன் அவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகள் பல என்று கூறினார்.


கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது.. இதை எல்லாம் நேரில் கலந்து கொண்டு அனுபவித்தவர்களுக்கு அந்த உணர்வு எப்படி இருந்திருக்கும்.. உறவுகள்தாங்க அழகு, சந்தோஷம், நிம்மதி மற்றும் நமது வாழ்வின் நோக்கமே.. இப்படிப்பட்ட உணர்வுள்ள இந்த கொண்டாட்டம்தான் இன்று பலரும் மிஸ் செய்கிறார்கள். இப்படி ஒரு அழகான குடும்பக் கொண்டாட்டத்தை ஆண்டுதோறும் நடத்தி வரும் நெற்குப்பை குடும்பத்தாருக்கு அனைவரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் குவிப்போம்.


கட்டுரை + படங்கள்: லெ. சொக்கலிங்கம்


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.. எல்லோருக்கும் லீவு .. மறக்காம ஓட்டுப் போடுங்க.. கலெக்டர் அழைப்பு!

news

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சூழல் மன்றங்கள்.. விரைவில் கொள்கை முடிவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

No Uppuma.. பிரியாணியும் சிக்கன் பிரையும் வேணும்.. கலகலக்க வைத்த கேரள சிறுவன்.. அமைச்சர் சொன்ன பதில்

news

மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு நேற்று குறைந்த தங்கம் விலை.. மீண்டும் அதிரடியாக இன்று உயர்வு

news

Valentine's day: உங்களோட X-ஐ கடுப்பாக்கணுமா.. காத்திருக்கும் கரப்பான் பூச்சிகள்.. அமெரிக்காவில் கலகல

news

மதுரை.. இந்து முன்னணி போராட்ட அறிவிப்பு எதிரொலி.. போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் திருப்பரங்குன்றம்!

news

சந்திரபாபு நாயுடு, ஏக்நாத் ஷிண்டேவுக்கு கை கொடுத்த ராபின் சர்மா..தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் திமுக

news

Kaantha: எம்.ஆர். ராதா மாதிரி.. புதிய அவதாரத்தில் துல்கர் சல்மான்.. ராணாவுடன் இணைந்து தயாரிப்பு!

news

Ratha Saptami: ரதசப்தமி அன்று எருக்க இலை குளியல் ஏன்? எதற்காக ?

அதிகம் பார்க்கும் செய்திகள்