Narendra Modi: 3வது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்த .. நரேந்திர தாமோதர தாஸ் மோடி!

Jun 09, 2024,10:30 PM IST

டெல்லி: நரேந்திர தாமோதர தாஸ் மோடி.. இந்தியாவின் 16வது பிரதமராக, 3வது முறையாக பதவியேற்றுள்ளார்.


73 வயதான நரேந்திர மோடி குறித்து அறிமுகம் தேவையில்லை.. இந்தியாவின் பரபரப்பான முதல்வராக அறியப்பட்டவர் நரேந்திர மோடி. குஜராத் முதல்வராக அவரது சிறப்பான செயல்பாடுகளால் தேசிய அரசியலில் உயர்ந்தவர் மோடி.


குஜராத் கலவரம் உள்ளிட்ட சர்ச்சைகள் அவரது தலைக்கு மேலே நிரந்தரமாக படிந்திருந்தாலும் கூட குஜராத் மாடல் என்ற மாஸ்க் அவரை மக்கள் மத்தியில் வேகமாக கொண்டு சென்று நிலை நிறுத்தியது. 2014 லோக்சபா தேர்தலுக்கு முன்பு வரை குஜராத் முதல்வராக மட்டுமே அறியப்பட்ட மோடி, அந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் இந்த நிமிடம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறார்.


ஆர்எஸ்எஸ் பட்டறையிலிருந்து அரசியலுக்கு 




ஆர்எஸ்எஸ் பட்டறையிலிருந்து வந்தவரான நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் டெல்லி, குஜராத் கிளைகளில் தீவிரமாகப் பணியாற்றினார். துண்டுப் பிரசுரங்கள் கொடுப்பது, உரைகளை தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை அவர் செய்து வந்தார். 1987ம் ஆண்டு அவரை பாஜகவில் இணைந்து பணியாற்ற உத்தரவிட்டது  ஆர்எஸ்எஸ். இப்படியாக ஆர்எஸ்எஸிலிருந்து அரசியலுக்கு வந்து சேர்ந்தார் நரேந்திர மோடி.


1990ம் ஆண்டு அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரையை வடிவமைத்த முக்கியக் குழுவில் மோடியும் இடம் பெற்றிருந்தார். இந்த சமயத்தில்தான் அத்வானியிடம் நல்ல நெருக்கம் ஏற்பட்டது, அவரது நன்மதிப்பையும் பெற்றார்.  இடையில் சில காலம் சொந்தப் பணிகளுக்காக அரசியலிருந்து விலகியிருந்தார் மோடி. இதன் பின்னர் அத்வானியின் நெருக்குதல் காரணமாக 1995ம் ஆண்டு மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட்டார். அந்த ஆண்டு நடந்த குஜராத் சட்டசபைத் தேர்தலில் மோடி ஆற்றிய பணிகள் காரணமாக பாஜக பெரும் வெற்றியைப் பெற்றது. 


அதன் பின்னர் டெல்லி அரசியலுக்கு மாறிய  மோடி அங்கு தனது இருப்பை மேலும் வலுவாக்கினார். அவரது செயல்பாடுகள் மேலிடத்தைக் கவர்ந்தன. குஜராத் அரசியல் தொடர்பாக மட்டுமல்லாமல் வேறு சில மாநில விவகாரங்கள் குறித்தும் அவர் கூறிய யோசனைகள் திட்டங்கள் மேலிடத்திற்குப் பிடித்துப் போனதால் மோடிக்கு அடுத்தடுத்து பதவிகள் வந்தன. இதன் முக்கிய அம்சமாக 2001ம் ஆண்டு குஜராத்  முதல்வர் பதவி மோடி வசம் வந்தது. 


2001 முதல் 2014 வரை முதல்வர்




அன்று முதல்வர் பதவியில் அமர்ந்தவர்தான்.. அதன் பின்னர் 2014 வரை முதல்வராகவே நீடித்தார். தொடர்ந்து தேர்தல்களில் பாஜக வென்றது.  மோடிக்கு இந்த கால கட்டத்தில் மிகப் பெரிய உதவியாக இருந்தவர் அவரது நண்பரும், அமைச்சருமான அமித்ஷா. இருவரும் சேர்ந்து குஜராத் பாஜகவை வலுவாக்கிய விதம் தேசிய அளவில் பாஜக தலைவர்களை ஈர்த்தது. இதனால் பிற பாஜக தலைவர்கள் மத்தியிலும் மோடிக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. இதன் விளைவாகவும், ஆர்எஸ்எஸ்ஸின் பரிந்துரையாலும் 2014ல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மோடி.


2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் பாஜக அபார வெற்றி பெற்றது. முதல் முறையாக பிரதமர் பதவிக்கு உயர்ந்தார் நரேந்திர மோடி. அந்த சமயத்தில் வீசிய மோடி அலை, பாஜகவையும் சேர்த்து உயர்த்திக் கொண்டு வந்தது.  அதன் பிறகு மோடிக்கு பின்னடைவே இல்லை. தொடர்ந்து 2019 தேர்தலிலும் பாஜக அபார வெற்றி பெற்றது. மோடி 2வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.


பத்தாண்டு கால மோடி ஆட்சி




மோடியின் இந்த பத்தாண்டு கால ஆட்சி நிர்வாகத்தில் பாஜகவுக்கும், அவருக்கும் பெருமை சேர்த்த பல விஷயங்கள் ஒரு புறம் இருக்க, சர்ச்சைகளும் மறுபக்கம் குவிந்தபடியே வந்தன. இந்த சர்ச்சைகள், சலசலப்புகள், குற்றச்சாட்டுக்கள் ஆகியவற்றுடன் 2024 லோக்சபா தேர்தலை சந்தித்தனர் பாஜகவும், மோடியும். கடந்த இருமுறை கிடைத்த தனிப் பெரும்பான்மை பலம் இந்த முறை கிடைக்காமல் போய் விட்டது. ஆனாலும் மக்களவையில் தனிப் பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது, தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு பெரும்பான்மையும் கிடைத்தது. 


பிரதமர் பதவிக்கு வேறு யாரையும் பாஜக தலைமை யோசிக்காத நிலையில் மீண்டும் மோடியே இன்று பிரதமராக பதவியேற்றுள்ளார். முதல்வராக இருந்தபோதும் சரி, 2 முறை பிரதமராக இருந்தபோதும் சரி, மோடி ஒரு முறை கூட சிறுபான்மை பலத்துடன் ஆட்சியை நடத்தியதில்லை. இப்போதுதான் முதல் முறையாக பெரும்பான்மை பலத்தைப் பெறத் தவறி  கூட்டணி ஆட்சிக்குத் தலைமை தாங்கப் போகிறார்.


தவறுகளை திருத்திக் கொண்டு நல்லாட்சி தரட்டும்




மோடி மீது எத்தனையோ புகார்கள், குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள், எதிர்ப்புகள் இருந்தாலும் கூட அவரது கடுமையான உழைப்பை யாரும் குறை சொல்ல முடியாது. அந்த கடின உழைப்புதான் எதிர்ப்புகளின்றி மீண்டும் அவரை பிரதமர் பதவியில் அமர்த்தியுள்ளது.


கடந்த காலங்களில் செய்த நல்ல விஷயங்களை இன்னும் பொலிவாக்கி மேலும் பல நல்லது செய்ய வேண்டும்.. அதேசமயம், கடந்த காலத்தில் நடந்த தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் அவை அந்த தவறுகள் நடக்காமல், குற்றம் குறை சொல்ல முடியாத நல்லாட்சியை பிரதமர் மோடி கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்