- ஸ்வர்ணலட்சுமி
ஒவ்வொருவருக்குள்ளும் நிறைய கதைகள் இருக்கும் இல்லையா.. அப்படித்தான் ஸ்வரூபாவுக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது.. ஆனால் இது கதையல்ல, நிஜம்.
இது கெளரியின் கதை.. அவள் ஸ்வரூபாவின் தோழி.. ம்ஹூம்.. ஆருயிர்த் தோழி. இது அவர்களது கதை.. ஆம், இரு அழகான தோழிகளின் கதை. உணர்வுகளின் கதை.. உயிர்களின் கதை.
ஸ்வரூபா- கெளரி இருவரும் இணை பிரியா தோழிகள். ஸ்வரூபாவை விட கெளரி இரண்டு வயது மூத்தவள். இருந்தாலும் இருவருக்குள்ளும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு அப்படி ஒரு அன்பும், நேசமும், நட்பும் உயிரோடு இழையோடிக் கிடந்தது. இருவரும் நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஸ்வரூபாவின் தந்தையார் விசைத்தறி வைத்திருந்தார். கெளரியின் தாய் கைத்தறி நெசவு வைத்திருந்தார். கெளரிக்கு அப்பா கிடையாது என்பதால், அம்மா தான் கஷ்டப்பட்டு அவரை வளர்த்தார்.
ஸ்வரூபாவிற்கு காலை பொழுது விடியும் போதே, கெளரி வீட்டில்தான் விடிய வேண்டும். அங்கு சென்று அவளை பார்த்தால் தான் அன்றைய பொழுது நன்றாக இருக்கும். இருவரும் ஒன்றாக தான் எப்போதும் இருப்பார்கள். அப்படி ஒரு இணை பிரியாத தோழிகள். இரவு நேர சினிமாவிற்கு செல்வது என்றால் இருவருக்கும் கொள்ளை பிரியம். கார்த்திக்-ரேவதி, ராம்கி-நிரோஷா படம் என்றால் கேட்கவே வேண்டாம். தெருவில் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு மொத்தமாக தியேட்டருக்கு சென்று விடுவார்கள். அடுத்த நாள் அந்த கதையை பற்றி பேசி விமர்சனம் செய்வது தான் இவர்களின் முக்கிய பொழுதுபோக்கு. தாயம், பல்லாங்குழி, பாண்டி விளையாட்டுக்கள் இவர்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும்.
இப்படியே காலம் கடந்தது. இருவருக்கும் திருமண வயது வந்தது. ஸ்வரூபாவிற்கு திருமணமாகி ஆந்திராவிற்கு சென்று விட்டாள். திருமணம் ஆவது இயற்கைதான்.. அப்போது பிரிவும் கூட இயற்கைதானே.. ஆனால் அந்த பிரிவை இருவராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தொலைப்பேசி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் ஏதும் இல்லாத அக்காலத்தில், இருவராலும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. எப்போதாவது ஸ்வரூபா தனது அம்மா வீட்டிற்கு வரும் போது தான் இருவரும் சந்தித்துக் கொண்டனர். பிறகு கெளரிக்கும் திருமணம் நடந்து திருவண்ணாமலைக்கு சென்று விட்டாள். வாழ்க்கை ஓட்டத்தில் கெளரி- ஸ்வரூபா இருவருக்கும் தங்களின் குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கே நேரம் சரியாக இருந்தது. இருந்தாலும் இருவரின் நட்பும் நினைவுகளிலேயே தொடர்ந்தது.
ஸ்வரூபாவிற்கு ஆண் குழந்தையும், கெளரிக்கு பெண் குழந்தையும் பிறந்தது... இப்படி போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு வசந்த காலம் போல, ஒரு அடை மழைக்காலம் போல.. அழகான அந்தத் தருணம் வந்தது.. ஆம்.. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கெளரியும், ஸ்வரூபாவும் சந்தித்து கொண்டனர். ஸ்வரூபா தனது கணவர், மகனுடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்ற போது கெளரியின் குடும்பத்தையும் சந்தித்தாள்.. எதிர்பாராத அந்த சந்திப்பு.. இருவரது உள்ளங்களையும் எகிற வைத்தது.. உள்ளுக்குள் உற்சாகம் வெடிக்க.. இருவரும் கட்டித் தழுவி, முத்தம் கொடுத்து, ஆனந்த கண்ணீரில் மூழ்கினர்.
கெளரி தனது வீட்டுக்கு ஸ்வரூபவையும், அவளது கணவரையும் அழைத்துச் சென்றாள். நேரம் போனதே தெரியாமல் 20 ஆண்டு கதைகளை மனம் விட்டு பேசினர் இரு தோழியரும். அப்போது கெளரி பழைய புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து ஸ்வரூபாவிடம் காட்டினாள். அந்த போட்டோ கெளரி கர்ப்பமாக இருந்த போது அவளின் வளைகாப்பு சமயத்தில் எடுத்துக் கொண்டது. அந்த புகைப்படத்தில் கெளரி அணிந்திருந்த நகைகள் ஸ்வரூபாவிற்கு அவளது அம்மா வீட்டினர் போட்ட நகைகள். ஸ்வரூபாவின் அம்மா, கெளரியையும் தன்னுடைய சொந்த மகளாக நினைத்ததால், "கெளரி, இது ஸ்வரூபாவின் நகைகள். இதை அணிந்து கொண்டு போட்டோ ஸ்டூடியோவிற்கு சென்று போட்டோ எடுத்துக் கொள்" என கொடுத்தது.
அந்த போட்டோவை காட்டி, "ஸ்வரூபா, இந்த போட்டோவை பார்த்தால் உனக்கு என்னடி தோன்றுகிறது?" என கேட்டாள் கெளரி.
அந்த போட்டோவை பார்த்ததும் ஸ்வரூபாவின் கண்களில் கண்ணீர் மளமளவென கண்ணீர் பெருகியது. தன்னுடைய நகைகளை கெளரி அணிந்ததை அணிந்ததை கண்ட ஸ்வரூபாவிற்கு அப்படி ஒரு ஆனந்தம். அந்த ஆனந்த கண்ணீருடன் புன்னகைத்தாள். கெளரியை கட்டித் தழுவிக் கொண்டாள்.
"கெளரி, உனக்கு நகைகள் ரொம்ப அழகாக இருக்குடீ" என்றாள் புன்னகை மாறாமல் ஸ்வரூபா... நகை மட்டுமா அழகாக இருந்தது.. கெளரி, ஸ்வரூபாவின் முகத்தில் தெறித்த அந்த அழகான புன்னகையும்தான். அவர்களின் நினைவுகள் அங்கு அழகாக மலர்ந்தபோது நட்பும் சேர்ந்து மகிழ்ந்து சிரித்தது!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
6 அல்ல 8 முறை.. பாஜக தலைவர் அண்ணாமலை.. தன்னைத் தானே.. சாட்டையால் அடித்து போராட்டம்!
சாட்டையும்.. புளிச்ச கீரையும்.. இப்படித்தான் செய்வார்களாம்.. தங்களைத் தாங்களே அடித்துக் கொள்வது ஏன்?
போராட எத்தனையோ வழிகள் உள்ளன.. அண்ணாமலை செய்வது கேலிக்கூத்தாக இருக்கு.. ஆர்.எஸ்.பாரதி
2022ம் ஆண்டில்.. ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யபிரியா.. சதீஷ் குற்றவாளி!
December.. எம்ஜிஆர் முதல் மன்மோகன் சிங் வரை.. மீண்டும் தனது குரூர முகத்தைக் காட்டிய டிசம்பர்!
சென்னையில் இன்று மாலை தொடங்குகிறது 48வது புத்தக கண்காட்சி.. ஜனவரி 12 வரை வாசிப்பு விருந்து!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதர்.. சிறந்த பொருளாதார மேதை.. நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
மறைந்த மன்மோகன் சிங் இறுதிச் சடங்குகள்.. முழு அரசு மரியாதைகளுடன்.. நாளை ராஜ்காட்டில் நடைபெறும்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேரில் சென்று அஞ்சலி.. டெல்லியில்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}