மும்பை: கர்நாடக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, விமானத்தின் அவசர கால கதவைத் திறந்த விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில் தற்போது மும்பையில் ஒரு பயணி நடு வானில் விமானத்தின் அவசர கால கதவைத் திறக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பயணி மீது தற்போது மும்பை விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து திருச்சி செல்வதற்காக காத்திருந்த இன்டிகோ விமானத்தில் பயணம் செய்த கர்நாடக பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா, தவறுதலாக அவசர கால கதவைத் திறந்ததாக சர்ச்சை வெடித்தது. அந்த பயணத்தின்போது தேஜஸக்வி சூர்யாவுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்ததால் இது அரசியல் ரீதியாகவும் சூட்டைக் கிளப்பியது. இந்த விவகாரம் குறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவும் விளக்கம் அளித்திருந்தார். தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டு விட்டதாக அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து சமீபத்தில் ஒரு வீடியோ வெளியானது. அதில் ஒரு பயணி, விமானப் பெண் ஊழியரைக் கூப்பிட்டு, தான் வெற்றிலை எச்சிலை துப்ப வேண்டும், ஜன்னலைத் திறக்க முடியுமா என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படி பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரம் அனல் பறந்து வந்த நிலையில், தற்போது மும்பையில் ஒரு பயணி விமானத்தின் அவசர கால கதவைத் திறக்க முயன்ற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 24ம் தேதியன்று நாக்பூரிலிருந்து கிளம்பிய இன்டிகோ விமானம் மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதும் ஒரு பயணி அவசர கால கதவைத் திறக்க முயன்றுள்ளார். இது விமானிக்குத் தெரிய வந்தது. உடனடியாக விமான ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பயணியிடம் சென்று அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
பின்னர் இதுகுறித்து விமான ஊழியர்கள் சார்பில் விமான நிலைய போலீஸில் புகார் தரப்பட்டது. அதன் பேரில், சம்பந்தப்பட்ட பயணி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அந்த பயணி மீது ஐபிசி 336, விமான விதிமுறைச் சட்டம் 23 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பயணி, "மன்னிப்பு கடிதம்" ஏதும் எழுதிக் கொடுத்தாரா என்பது குறித்துத் தெரியவில்லை.
{{comments.comment}}