மதுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரைக்கு பயணம் செய்து ஆய்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் தனது அண்ணனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியைப் பார்ப்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் நிலவுகிறது.
"கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் திட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுவரை 2 கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 3வது கட்டமாக தென் மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் மதுரையில் இன்று நடந்தது.
இன்றைய கூட்டத்தில், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய
மாவட்டங்களுக்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தொழில்துறையினரும் பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்தனர்.
உழவர் சங்கத்தினரும் பல்வேறு கோரிக்கைகளை முதல்வரை சந்தித்து அளித்தனர். முன்னதாக மதுரை விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் தடபுடலாக வரவேற்பு அளித்தனர். பிரமாண்ட பேனாவுடனும் தொண்டர்கள் ஸ்டாலினை வரவேற்க வந்ததால் பரபரப்பும் ஏற்பட்டது.
முதல்வர் நடத்திய இந்த கள ஆய்வுக் கூட்டத்தில் 5 மாவட்ட ஆட்சித் தலைவர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அழகிரி வீட்டுக்கு செல்வாரா?
முதல்வர் தனது மதுரை பயணம் குறித்து போட்டுள்ள டிவீட்டில் "பாசமிகு மதுரை மண்ணில்" என்று குறிப்பிட்டுள்ளார். இதே மதுரையில்தான் அவரது அண்ணன் அழகிரி வசித்து வருகிறார். எனவே சகோதரப் பாசத்தோடு, அண்ணனையும் முதல்வர் பார்ப்பாரா என்ற ஆர்வமான எதிர்பார்ப்பு திமுகவினர் மத்தியில் நிலவுகிறது.
சமீபத்தில்தான் முதல்வரின் மகனும், இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மதுரை வந்து தனது பெரியப்பா அழகிரியைச் சந்தித்தார். அவருடன் அவரது நண்பரான அன்பில் மகேஷும் உடன் வந்திருந்தார். தனது தம்பி மகனை வாசலிலேயே நின்று வரவேற்று பாசத்தோடு கட்டி அணைத்து வீட்டுக்குள் கூட்டிச் சென்றார் அழகிரி.
இதேபோல அண்ணன் வீட்டுக்கு தம்பியும் போவாரா என்ற பாசமான எதிர்பார்ப்பில் திமுகவினர் உள்ளனர்.
{{comments.comment}}