சென்னை: ஆளுநர் ஆர். என். ரவியின் பேச்சுக்கள், செயல்பாடுகளைக் கண்டித்து ஏப்ரல் 12ம் தேதி மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக கூட்டணி அறிவித்துள்ளது.
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருப்பது, பல்வேறு பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கும் கருத்துக்கள் உள்ளிட்டவை தொடர்பாக ஆளுநர் ஆர். என். ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் சட்ட மசோதாக்கள் குறித்தும், ஸ்டெர்லைட் போராட்டம் குறித்தும் ஆளுநர் நேற்று பேசிய கருத்துக்கள் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளன. ஆளுநரின் இந்தப் பேச்சுக்களுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஆளுநர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக கூட்டணி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக கூட்டணி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் பேச்சுக்கள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவும், மர்மமானதாகவும் இருக்கின்றன. அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீகரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதை மறந்து பாஜக - ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளத் துடிக்கிறார்.
குறிப்பாக சனாதனத்துக்கும், வர்ணாசிரம தர்ம முறைகளுக்கும் ஆதரவாக அவர் பொது மேடைகளில் எடுத்து வைத்த கருத்துக்கள் அபத்தமானவை. திராவிடம் என்றசொல்லுக்கு எதிராக தினந்தோறும் தனது பாய்ச்சலைத் தொடர்ந்தார். திருக்குறளுக்குத் தவறான பொருள் சொல்லி திருக்குறளே தவறாக மொழிபெயர்க்கப்பட்டதாகச் சொல்லிக் கொண்டார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் உருவாக்கி நிறைவேற்றப்பட்ட 14 கோப்புகளுக்கு இன்னும் அனுமதி தராமல் தாமதித்து வைத்துள்ளார் ஆளுநர். அதிலும் குறிப்பாக 42 உயிர்களைப் பலி வாங்கிய ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் அவசரச் சட்டத்துக்கு இன்னும் அனுமதி தராமல் இருக்கிறார். ஆனால் ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் நிறுவனங்களின் உரிமையாளர்களை அவர் வெளிப்படையாக சந்தித்தது பொது வெளியில் பரவி கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.
ஆளுநர் பதவியே எந்த மாநிலத்துக்கும் அவசியமில்லாத பதவியாகும். தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்துக் கொண்டு இரட்டையாட்சி நடத்துவதற்கு பாஜக நினைத்து அவர்களை மகிழ்விக்க தினமும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுவெளியில் உதிர்த்து வரும் ஆளுநரைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வருகிற 12.4.2023 அன்று மாலை 4 மணியளவில் ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சட்டமன்ற மாண்பைக் குலைக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் நிறுத்தும் வரை நமது போராட்டம் ஓயாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டறிக்கை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திக. தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஎம் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ செலாளர் முத்தரசன், இந்தியயூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் ஆகியோரது பெயரில் வெளியாகியுள்ளது.
{{comments.comment}}