சென்னை: விமான சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். இது வருந்தத்தக்க நிகழ்வு. ஆனால் இதில் அரசியல் செய்வது தவறு என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னையில் பிரமாண்ட வான் சாகச கண்காட்சி நடைபெற்றது. இதற்காக கடந்த சில நாட்களாக விமானப்படையின் பல்வேறு வகையான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சாகச ஒத்திகை செய்து வந்தன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற விமான சாகச கண்காட்சியின் போது கடும் வெயில் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைந்ததன் காரணமாக 240த்திற்கும் மேற்பட்டவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 93 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்ததற்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசு மெத்தனமாக இருந்ததே காரணம் என்று பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் தமிழ்நாடு அரசு இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. நேற்றே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் நேரிலும் விளக்கம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
மெரினாவில் நடைபெற்ற விமான சாகசத்தை பார்வையிட வந்த யாரும் உயிரிழக்கவில்லை என அரசு கூறவில்லை. ஐந்து பேர் உயிரிழந்தது எதிர்பாராத ஒன்று தான். இது வருந்தத்தக்க சம்பவம். அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. ஆனால் இதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். கூட்ட நெரிசலால் உயிரிழப்பு ஏற்படவில்லை. வெயிலின் தாக்கத்தால் தான் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வந்த பின்பு யாரும் உயிரிழக்கவில்லை. இறந்த பின்னரே ஐந்து பேரும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசு முடிவு எடுக்கும்.
விமான சாகச நிகழ்ச்சிக்குரிய நேரத்தை முடிவு செய்தது விமானப்படை தான். நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து தலைமைச் செயலர் தலைமையில் இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடந்தப்பட்டது. விமானப்படை கேட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. தேவையான அளவுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது என இந்திய விமானப்படையே நேற்று தெரிவித்திருந்தது. விமான சாகச நிகழ்ச்சியின் போது போதுமான அளவு குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. வெயிலின் தாக்கம் காரணமாக குடை, தண்ணீர் எடுத்து வருமாறும், தொப்பி அணிந்து வருமாறும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
விமானப்படை கேட்டது 100 வசதிகளுடன் கூடிய வார்டுகள் தான். ஆனால், அரசு சார்பில், நான்காயிரம் படுக்கை வசதிகள் தயாராக இருந்தன. தமிழக அரசின் விரிவான ஏற்பாடுகளை இந்திய விமானப்படை அதிகாரிகள் பாராட்டி இருந்தனர். மருத்துவமனைகளில் முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை தருவதற்காக 65 மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். பல்வேறு மருத்துவக் குழுக்கள் களத்தில் இருந்தது. அவசர மருத்துவ உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எல்லாரும் அனுதாபமும், வருத்தமும் தெரிவிக்கின்றோம். இதனை யாரும் அரசியல் மட்டும் செய்யக் கூடாது. இவர்கள் உயிர் இழந்தது எதிர்பாராத ஒன்று என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வீரராக பிறந்து வீரராக மறைந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
கங்குவா பட எடிட்டர் நிஷாத் யூசுப் திடீர் மரணம்.. வீட்டில் மர்மமான முறையில் உயிரிழப்பு!
இட்லி-கறிக்குழம்பு .. தலை தீபாவளி கொண்டாடும் புது மாப்பிள்ளைக்கான ஸ்பெஷல் காம்போ!
தீபாவளி 2024 : பாரம்பரிய முறையில் எண்ணெய் வைத்து குளிக்க இதுதான் நல்ல நேரம்!
Monsoon: சூடு பிடிக்கும் மழைக்காலம்.. நோய்களைத் தவிர்ப்பது எப்படி.. மாணவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்!
அக்டோபர் 30 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
கடக ராசிக்காரர்களே.. வெற்றி வாசல் தேடி வரும்.. தனுசு ராசியா.. உஷாரய்யா உஷாரு!
நவம்பர் 1ம் தேதி.. 11 மாவட்டங்களில் பரவலாக கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!
Draft electoral Roll: தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய தொகுதி சோழிங்கநல்லூர்.. சிறிய தொகுதி கீழ் வேளூர்!
{{comments.comment}}