அரசுப் பள்ளிகளில் தனியார்: அண்ணாமலை அறிக்கை.. அன்பில் மகேஷ் மறுப்பு.. தனியார் பள்ளிகளின் விளக்கம்!

Jan 02, 2025,06:45 PM IST

சென்னை: அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளிடம் தமிழ்நாடு அரசு தாரை வார்ப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை விடுத்துள்ளார். ஆனால் திட்டவட்டமாக மறுத்து கண்டித்துள்ளார்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். அதேசமயம், இதுகுறித்து விரிவான விளக்கம் ஒன்றை தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கமும் விடுத்துள்ளது.


அண்ணாமலையின் தகவல் தவறு என்றும், இதுபோன்ற அவதூறான செய்திகளை பரப்புவதை கண்டிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார். அதேபோல அண்ணாமலையின் கூற்றை தனியார் பள்ளிகள் சங்கமும் மறுத்துள்ளது.


அண்ணாமலை அறிக்கை




தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பாக அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் துவக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றான, 500 அரசுப் பள்ளிகள், அவற்றின் அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளால் மேம்படுத்தப்படும் என்ற தீர்மானத்தை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் வரவேற்றிருக்கிறார். 


500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதியில்லையா என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. தமிழக அரசின் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, இந்த ஆண்டு மட்டும் ரூ.44,042 கோடி. இது தவிர, ஒவ்வொரு ஆண்டும், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தனது தேர்தல் வாக்குறுதிகளில், சிதிலமடைந்த 10,000 அரசுப் பள்ளிக் கட்டிடங்களைப் புதிதாகக் கட்டிக் கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, நான்கு ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. 


சமீபத்தில், மாவட்டக் கல்வி அலுவலகங்களின் இணைய இணைப்புக் கட்டணமான ரூ.1.5 கோடியைக் கூட கட்டாமல், இணைப்பு துண்டிக்கப்படும் நிலைக்குச் சென்றது பள்ளிக் கல்வித் துறை. கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது? நாட்டின் நாளைய தூண்களான மாணவ சமுதாயத்தின் கல்விக்குக் கூட, தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலையில் திமுக அரசு தள்ளப்பட்டிருக்கிறதா? அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தாமல், இந்த நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு? என்று அவர் அதில் கூறியிருந்தார்.


தனியார் பள்ளிகள் சங்கத்தின் விளக்கம்




இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் விடுத்துள்ள விளக்கம்:  தமிழ்நாட்டிலுள்ள 13,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மழலையர் துவக்கப் பள்ளிகள் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள், சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர வாரிய பள்ளிகள் என ஒட்டு மொத்த பள்ளிகளுக்கும் பல்வேறு சங்கங்கள் இயங்கி வந்தன. அந்த சங்கங்களை எல்லாம் ஒருங்கிணைந்து பெரும்பான்மையான சங்கங்கள் ஒன்றுகூடி தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் ஒரு புதிய ஒரு சங்கத்தை உருவாக்கி அந்த சங்கத்தின் துவக்க விழாவிற்கு பள்ளிக் கல்வித்துறை அரசு செயலாளர், தனியார் பள்ளி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களை வாழ்த்துரை வழங்கவும் விழாவினை துவக்கி வைக்கவும் அழைத்தோம். அவர்கள் அனையரும் வருகை தந்து விழாவினை சிறப்பித்தார்கள்.


அரசு பள்ளிகளில் பயின்ற நாங்கள் தான் தனியார் பள்ளிகளை நடத்தி வருகிறோம். நாம் அரசு பள்ளிகளுக்கு எந்த விதத்திலாவது பயன்பாடாக இருக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் அடிப்படையில் அந்த நிகழ்வின் போது பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றிய அதே தருணத்தில் வரும் கல்லியாண்டில் 500 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அருகாமையில் இருக்கிற தனியார் பள்ளிகள் அந்த பள்ளிகளில் பயில்கிற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலே நூலகங்கள் பள்ளிக்கு வர்ணம் பூசுதல், பள்ளி விளையாட்டு மைதானங்களை சுத்தப்படுத்துதல், தூய்மைப் படுத்துதல் விளையாட்டு உபகரணப் பொருட்களை வாங்கிக் கொடுத்தல், மாணவர்களுக்குத் தேவையான இதர General knowledge என்று சொல்லக் கூடிய பொது அறிவு வளர்ச்சிக்கான புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தல், அதற்கான பொருட்கள் வாங்கிக் கொடுத்தல், கணிணி உள்ளிட்ட கண்டுபிடிப்புகள் சம்பந்தப்பட்ட நவீன பொருட்களை வாங்கிக் கொடுத்தல் என்று பலவேறு வகையிலே உதவிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மாணவர்களின் வளர்ச்சிக்காக அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த CSR மூலம் தனியார் பள்ளிகளில் பங்களிப்பு இருக்கும் என்று தான் சொல்லப்பட்டதே தவிர எந்த இடத்திலும் அரசு பள்ளிகளை தத்தெடுப்போம் என்று நாங்களும் சொல்லவில்லை தத்தெடுப்போம் என்று அமைச்சர் உள்ளிட்ட அதிகாரி பெருமக்கள் யாரும் சொல்லவில்லை.


அது சொல்லப்படாத ஒரு வார்த்தையை அரசியலாக்கி தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளை தத்தெடுக்கிறதா? என்று கேட்பது உண்மையாகவே 500 பள்ளிகளுக்கு CSR மூலம் உதவ தயராக உள்ளோம் என்று சொன்ன தனியார் பள்ளி தாளாளர்களுடைய அந்தப் பெருந்தன்மையை கொச்சைப் படுத்துவதாக உள்ளது. ஆகவே தயவுகூர்ந்து இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.


எந்த இடத்திலும் தத்தெடுக்கப்படும் என்ற வார்த்தை யாராலும் உபயோகப்படுத்தப்படவில்லை. அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு தனியார் பள்ளிகள் CSR மூலம் பங்களிப்பார்கள், உதவுவார்கள் என்றுதான் சொல்லப்பட்டதே தவிர, தத்தெடுக்கும் என்ற வார்த்தை இல்லை என்பதை இந்த நேரத்திலே தெளிவுபடுத்திக் கொள்கிறோம். முக்கிய குறிப்பாக 500 அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு மற்றும் மக தேவையான பொருட்களை CSR மூலம் வழங்க வழங்க முன்வந்துள்ள தனியார் பள்ளிகளும் பெற்றோர் ஆசிரியர் கழகம் முழு ஆதரவும் நன்றியும் தெரிவித்துள்ளதை இங்கு பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.


அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்




இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் இதுகுறித்து விளக்கம் அளிக்கையில், அரசுப் பள்ளிகளை யாருக்கும் அரசு தாரை வார்க்கவில்லை. ஒரு செய்தியின் உண்மைத் தன்மையினை ஆராய்ந்து அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளை நாங்கள் யாருக்கும் தாரை வார்க்கவும் இல்லை, தத்து கொடுக்கவும் இல்லை.  அப்படி வெளியான செய்திகள் தவறானவை. அரசியல் கட்சிகள் பொறுப்பாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் அரசு விடுமுறை... ஜனவரி 17ம் தேதி லீவு.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

news

ஃபெங்கல் புயல் தீவிர பேரிடர்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.. கெஜட்டிலும் அறிவிக்கை வெளியானது

news

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி: 4 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழக அரசு

news

அஜித் மகள் பிறந்தநாள்...க்யூட்டான குடும்ப போட்டோக்களை பகிர்ந்த ஷாலினி

news

யார் அந்த சார்?...கனிமொழி சொன்ன பதில்...இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லையே

news

சபரிமலையில் குவியும் காணிக்கை...41 நாளில் வருமானம் எவ்வளவு தெரியுமா?

news

மதுரை திருமங்கலத்தில் 1000 கிலோ கறி, 2500 கிலோ அரிசி..ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் கறி விருந்து

news

ஜல்லிக்கட்டுக்கு போன இடத்தில் மல்லுக்கட்டு...புதுக்கோட்டையில் நடந்த பரபரப்பு

news

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா?....சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவும் துவங்கிடுச்சு

அதிகம் பார்க்கும் செய்திகள்