சென்னை: தமிழ்நாட்டில் அதிமுகவுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வருகிற 2026 சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
இதன் மூலம் கடந்த 2021 சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக திரும்பியுள்ளது. சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், அமித்ஷாவும் இன்று சந்தித்துப் பேசினர். அதன் பிறகு செய்தியாளர்களை இரு தலைவர்களும் கூட்டாக சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, புதிய தலைவராகவுள்ள நயினார் நாகேந்திரன், அதிமுக தரப்பில் கே.பி. முனுசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமித்ஷா கூறியதாவது:
வருகிற 2026 சட்ட.சபைத் தேர்தலை அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிற கட்சிகளுடன் இணைந்து சந்திக்கவுள்ளோம். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி ஆட்சியையும் நாங்கள் நிச்சயம் அமைப்போம். இந்தக் கூட்டணியானது அதிமுகவுக்கும் பலன் தரக் கூடியது. பாஜகவுக்கும் பலன் தரக் கூடியதாகும்.
1998 முதல் அதிமுக கூட்டணியை அமைதது வருகிறது. 30 இடங்களில் ஒரு முறை வென்றுள்ளோம். வரும் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியமைக்கப் போகிறது என்று உறுதியாக நம்புகிறேன். கூட்டணி ஆட்சியே தமிழ்நாட்டில் அமையும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்.
கூட்டணியில் இணைவதற்கு அதிமுக தரப்பு எந்த நிபந்தனையையும் நாங்கள் வைக்கவில்லை. இது இயல்பான கூட்டணி. அதிமுகவின் உட்கட்சி விகவகரத்தில நாங்கள் தலையிடப் போவதில்லை. தேர்தலில் வெற்றிக்குப் பின்னர் கூடிப் பேசி அமைச்சரவை அமைப்போம். பொது செயல் திட்டம் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் கூட்டணி செயல்படும்.
வருகிற தேர்தலில் திமுகவின் மிகப் பெரிய மோசடி ஊழல், டாஸ்மாக் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றை மக்களிடம் கொண்டு செல்வோம்.
மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே நீட் தேர்வு விவகாரம், தொகுதி மறுவரையறை ஆகிய பிரச்சினைகளை திமுக கையில் எடுத்து வருகிறது. நீட் தேர்வு குறித்து அதிமுகவுடன் பேசுவோம் என்றார் அமைச்சர் அமித்ஷா.
{{comments.comment}}