"சபரிமலை".. இதுவரை இல்லாத அளவுக்கு.. கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்..  பூதாகரமாகும் விவகாரம்!

Dec 14, 2023,06:58 PM IST

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கட்டுக் கடங்காமல் அலைமோதுவதால் கோவில் நிர்வாகம் செய்வதறியாது திகைத்து போய் உள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிய கேரள அரசை எதிர்த்து பல இடங்களில் போராட்டம் நடந்து வருவதால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.


கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோவில். இது மற்ற கோவில்களை போல் இல்லாமல் வருடத்திற்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்காக கார்த்திகை முதல் தேதி நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து டிசம்பர் 27 ம் தேதி வரை நடை திறந்திருக்கும். அதற்கு பிறகு மீண்டும் நடை அடைக்கப்பட்டு ஜனவரி 01 ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் திறக்கப்படும். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின் போது தான் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள்.


முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு சபரிமலையில் ஐயப்பன் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் காணப்படுகிறது. நவம்பர் 17 ம் தேதி முதல் நடைதிறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வந்தாலும், டிசம்பர் 06ம் தேதிக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்படுகிறது. இதற்கு காரணம், மண்டல பூஜை துவங்கிய போது கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ஆரம்பத்தில் குறைவான பக்தர்கள் மட்டுமே வந்துள்ளனர். தற்போது மழை ஓய்துள்ளதால் கூட்டம் அதிகரிக்க துவங்கி உள்ளது. இந்த ஆண்டு பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் அதிக அளவில் வந்துள்ளதும் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.




சுவாமி தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் மூலம் 90,000 பேரும், நேரடியாக 30,000 புக்கிங் செய்துள்ளனர். பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் சுவாமி தரிசனம் செய்வதற்கு 22 மணிநேரத்திற்கும் மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானம் செல்வதற்கே 14 மணி நேரம் காத்திரக்க வேண்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சபரிமலை சென்ற 11 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த விவகாரம் பெரும் பிரச்சனையை கிளப்பி உள்ளது. தினசரி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை 75,000 ஆக குறைக்க போலீசாரே தேவசம் போர்டிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் கேரள கோர்ட்டும் தலையிட்டு தேவசம் போட்டு மற்றும் கேரள அரசிற்கு பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. 


பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் ஏற்கனவே தரிசன நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 18 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கிடையில் கேரள அரசும், தேவசம் போர்டும் கூட்டத்தை முறையாக கட்டுப்படுத்த தவறியதே பக்தர்களின் அவதிக்கும், சிறுமி உயிரிழந்ததற்கும் காரணம் என பாஜக யுவ மோர்சா உள்ளிட்ட சில அமைப்புகளும் கேரளாவின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றன. பக்தர்கள் சாப்பாடு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். ஆனால் இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை என முதல்வர் சாதாரணமாக பதிலளித்தார் என அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 


இதனால் அவசர ஆலோசனை கூட்டம் நடத்திய கேரள முதல்வர் பினராயி விஜயன், பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருக்க 10,000 பேர் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 80,000 பேர் வரை மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள ஐகோர்ட்டும், என்எஸ்எஸ் மூலம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தண்ணீர், பிஸ்கட்கள் வழங்க கேரள அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


மண்டல பூஜை காலத்திலேயே இந்த அளவிற்கு கட்டுக்கடங்காமல் கூட்டம் உள்ளது என்றால் அடுத்து வரும் மகரஜோதி தரிசனத்தின் போது இன்னும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தால் என்னாவது. இந்த நிலையை கேரள அரசும் தேவசம் போர்டும் உடனடியாக சரியான முறையில் கையாண்டு, பக்தர்கள் சிரமமின்றி, விரைவில் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


அரசியல் கட்சிகள் போராட்டம் ஒரு புறம், கேரள கோர்ட்டின் உத்தரவுகள் ஒரு புறம், கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சபரிமலையில் குவிந்துள்ள பக்தர்கள் கூட்டம் குறித்து மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் அறிவுறுத்தல் என கேரள அரசிற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் கேரளாவில் சபரிமலை விவகாரம் பெரிய பிரச்சனையாக பேசப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை மக்களே.. ரெடியா.. 12ம் தேதி முதல் கன மழை வெளுக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த அலர்ட்!

news

அண்ணாமலைக்குப் பின்னாடி.. விஜய்க்கு சீமான் கொடுத்த இடம்.. அந்த அன்புத்தம்பிதான் ஹைலைட்டே!

news

தவெக விஜய்க்கு பின்னால் இருக்கும் விஐபி யார்?.. பரபரக்கும் அரசியல் களம்.. அட, இவர் தானாமே!!

news

Delhi Ganesh.. 400க்கும் மேற்பட்ட படங்கள்.. ஹீரோ டு காமெடியன்.. மறக்க முடியாத டெல்லி கணேஷ்

news

நவம்பர் 10 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

விருச்சிக ராசிக்காரர்களே.. மகிழ்ச்சியான செய்திகள் வீடு தேடி வரும் நாள்

news

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு

news

2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?

news

நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்