- பொன் லட்சுமி
அந்த காலம் முதல் இந்த காலம் வரை ஏன் இனி வரப் போகும் காலம் வரையிலும் மாமியார் மருமகள் உறவு என்றாலே எப்பொழுதும் சண்டை போட்டு கொண்டு தான் இருப்பார்கள் என்ற எண்ணம் தான் நம்மிடம் மேலோங்கி இருக்கிறது... அதற்கு முக்கிய காரணம் அன்றும் சரி இன்றும் சரி திரைப்படங்கள் முதல் டிவி தொடர் வரையிலும் ஒன்று மாமியாரை வில்லியாக காட்டுகிறார்கள் அல்லது மருமகளை வில்லியாக காட்டுகிறார்கள்.
அதுமட்டுமா, இந்த உறவுகளையே வில்லியாக சித்தரித்து விடுகிறார்கள்.. டிவியைப் போட்டால் ஒவ்வொரு சீரியலிலும் ஒரு மாமியார் அல்லது மருமகளை மோசமாகத்தான் சித்தரிக்கிறார்கள்.. அது ஏன்.. கொலை செய்யத் திட்டம் போடுவது போலெல்லாம் சீன் வைப்பது ரொம்பத்தான் ஓவரா போய்ட்டிரு்கு.
நிஜத்தில் என்ன நிலவரம்.. எல்லா மாமியாரும் கெட்டவர்களும் இல்லை, எல்லா மருமகளும் கெட்டவரும் இல்லை.. இன்றும் ஒரு சில வீடுகளில் மாமியாருக்கு சேலை கட்டி அழகு பார்க்கும் மருமகளும் இருக்கிறார்கள், அதேபோல மருமகளுக்கு பூ வைத்து அழகு பார்க்கும் மாமியார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்... எல்லாமே நம்ம கைல தாங்க இருக்கு.. மாமியார் மருமகள் உறவு ஆரோக்கியமான உறவாக மாற யாருடை அட்வைஸும் தேவையில்லை.. சம்பந்தப்பட்ட மாமியார் மருமகள்களே அதைச் செய்யலாம்.. வாங்க பார்க்கலாம்.
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுங்கள் :-
ஒரு வீட்டுக்கு மருமகளாக அடி எடுத்து வைக்கும் பெண் பல கனவுகளுடன் தான் அந்த வீட்டிற்குள் வருகிறாள்.. அந்தப் பெண் சிறந்த மருமகளாக மாறுவது அந்த வீட்டில் இருப்பவர்கள் நடந்து கொள்ளும் முறைதான் தீர்மானிக்கிறது... முதலில் அந்த மருமகளை குடும்பத்தில் ஒரு சக உறுப்பினராக ஏற்றுக்கொள்ள வேண்டும் .. பெரும்பாலான வீடுகளில் சமையற்கட்டில் இருந்து தான் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது.
பல பெண்களுக்கு திருமணம் ஆன புதிதில் சமையல் அவ்வளவாக வராது.. மாமியார்தான் அதை பக்குவமாக எடுத்துக் கூறி, அவரை முழுமையாக்க வேண்டுமே தவிர உங்க வீட்டில் உங்க அம்மா இப்படி தான் சமையல் பண்ண சொல்லி தந்தாங்களா என்று கிண்டலடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதேபோல சமையல் கட்டை விட்டுக் கொடுக்க பல மாமியார்கள் முன்வர மாட்டார்கள். நான் சமைச்சாதான் என் மகன் சாப்பிடுவான் என்று விதண்டாவாதம் பிடிப்பார்கள்.. அதையும் தவிர்க்க வேண்டும். மருமகளையும் எல்லாவற்றிலும் ஈடுபடுத்த வேண்டும், சம உரிமை தர வேண்டும். அப்படிச் செய்யாமல் அந்நியப் பெண் போல ஒதுக்கி வைத்து வந்தால், மாமியார் மீது மருமகளுக்கு மன கசப்பை தான் ஏற்படுத்தும்.. மாமியார் மருமகளுக்கு ஆலோசனை சொல்வதில் தவறு ஏதுமில்லை.. அதே சமயத்தில் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஈகோவை விட்டுத் தள்ளுங்கள் :-
இத்தனை வருடமாக தான் மட்டுமே நிர்வகித்து வந்த குடும்பத்தை இன்று வந்த மருமகள் பொறுப்புகளை எடுத்துக் கொள்வது சில மாமியார்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது... உளவியல் ரீதியாக அவர்கள் இதை ஒரு பின்னடைவு போல பார்க்கிறார்கள். எல்லாமே பறி போகப் போகுதே என்று பயப்படுகிறார்கள். ஆனால் அது தேவையில்லை. அவர்களும் ஒரு காலத்தில் அந்த வீட்டுக்கு மருமகளாக தான் வந்தோம் என்று புரிந்து கொண்டாலே, பல பிரச்சினைகளை வராமலேயே தவிர்க்க முடியும்.
தன் காலத்திற்கு பிறகு தன் குடும்பத்தையும் மகனையும் பாதுகாத்து குடும்பத்தை வழி நடத்தும் பொறுப்பு மருமகளுக்கு தான் இருக்கு என்பதை மாமியார் புரிந்து கொள்ள வேண்டும்... அதேபோல மருமகளாக இந்த குடும்பத்திற்கு வந்ததும் எல்லா பொறுப்பும் உடனே தனக்கு கிடைக்க வேண்டும் என்று மருமகளும் நினைக்க கூடாது.. ஏனென்றால் குடும்பத்தை பொறுப்பாக நடத்துவதில் மாமியாருக்கு பல வருட அனுபவங்கள் இருக்கும்... மருமகளுக்கு அந்த அனுபவங்கள் கிடைக்க அவகாசம் தேவைப்படும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஒருவேளை குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு மருமகள் கையில் கிடைத்தால் செலவுகளை குறைத்து சிக்கனமாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்... நீங்கள் சிக்கனவாதி என்று பெயரெடுத்தால் போதும் மாமியாரிடம் நன்மதிப்பை பெற்று விடலாம்... நீ பெரியவளா நான் பெரியவளா என்னும் ஈகோவை விட்டு தள்ளிவிட்டு இருவரும் சமமாக பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளும்போது அங்கு பூசல்கள் வெடிப்பதற்கு வாய்ப்பே இல்லை.
பரஸ்பரம் மரியாதை கொடுங்கள் :-
மாமியாரும் சரி, மருமகளும் சரி பரஸ்பரம் மரியாதை கொடுப்பது அவசியம். மரியாதை என்பது நீங்கள் அவருக்கு நேரில் கொடுப்பதை விட மற்றவர்களிடம் அவர்களைப் பற்றி பேசுவதில் தான் இருக்கிறது... பிரச்சனை இல்லாத குடும்பம் என்று எதுவுமே கிடையாது.. எல்லார் வீட்டிலேயும் கண்டிப்பாக மாமியார் மருமகள் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.
மருமகள் ஏதாவது மாமியாருக்கு பிடிக்காத விஷயத்தை செய்தாலோ அல்லது மாமியார் மருமகளுக்கு பிடிக்காத விஷயத்தை செய்தாலோ நேரடியாக அவர்களிடமே நீங்கள் செய்வது எனக்கு பிடிக்கவில்லை என்று கூற பழகிக் கொள்ளுங்கள்.. அதை விட்டு விட்டு மூன்றாம் நபர்களான அடுத்தவர்களிடம் குறை கூறிக் கொண்டிருந்தால் அது உங்கள் உறவுக்குள் விரிசலை தான் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்..
ஒருவரை ஒருவர் குறை கூறுவதை தாண்டி அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை அடுத்தவர்களிடம் பாராட்டி பேசும் போது அது நிச்சயமாக எதிர் தரப்பினரை சென்றடையும். அது நாளடைவில் உங்கள் மீது மரியாதையை வர வைக்கும். அமைதியான குடும்பத்திற்கு இந்த பரஸ்பர புரிந்துணர்வும், மரியாதையும் முக்கியமானது.
உதவி செய்யுங்கள் :-
மாமியாராக இருந்தாலும் சரி மருமகளாக இருந்தாலும் சரி ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது மற்றொருவர் தன்னால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்... சில வீடுகளில் குழந்தை பெற்ற மருமகள் வேலை செய்யும் போது மாமியார் எந்த உதவியுமே செய்ய வருவதில்லை. அதற்கு மாறாக கூறும் வார்த்தை என்னவோ நீ மட்டும் தான் இந்த உலகத்துல குழந்தை பெத்து இருக்கிற மாதிரி நடந்துக்கிற, நாங்களும் அந்த காலத்துல நாலு குழந்தை பெத்தவங்க தான் எங்க வேலைய நாங்க மட்டும்தான் பார்த்திருக்கிறோம். அப்படி சொல்வதை முதலில் நிறுத்துங்க... இந்த மாதிரி வார்த்தையை நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் மீதான மதிப்பு மரியாதை எல்லாம் தானாகவே குறைந்து விடும்.
இதுவே தன்னுடைய மகள் குழந்தை பெற்றிருந்தால் நீ ஏன் இந்த வீட்டு வேலை எல்லாம் செய்கிறாய் அப்படிங்கற பதில் வருகிறது... சில வீடுகளில் மருமகளுக்கு ஒரு நியதி மகளுக்கு ஒரு நியதி என்று தான் இன்றும் இருக்கிறது.. இந்த மாதிரியான குணநலன்களை நீங்கள் கொண்டிருந்தால் கண்டிப்பாக உங்களது மருமகள் மனதில் உங்களுக்கான மரியாதை குறைந்து விடும்... அதேபோல சில வீடுகளில் வேலைக்கு செல்லும் மருமகளாக இருக்கும்போது வீட்டிலும் வேலை பார்த்துக்கொண்டு வெளியிலும் வேலை பார்த்துக் கொண்டு வருவது மிகவும் கஷ்டமாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் தன்னால் முடிந்த அளவு சிறு சிறு வேலைகளையாவது செய்து கொடுங்கள். இது உங்கள் மீது பாசத்தையும் அன்பையும் பல மடங்கு பெருக வைக்கும்.
சில வீடுகளில் மாமியார் நல்லவர்களாக இருக்கும் பட்சத்தில் மருமகள்கள் வீட்டின் எல்லா வேலையையுமே மாமியார் தலையில் சுமத்துகிறார்கள். இதுவும் மிகவும் தவறான விஷயமாகும். அப்படி செய்வதற்கு முன்பு இதுவே தன்னுடைய தாயாக இருந்தால் நாம் இப்படி செய்வோமா என்று ஒரு கணம் யோசித்துப் பார்த்தாலே போதும்... இத்தனை காலமாக அந்த குடும்பத்தை பொறுப்பாகவும், நமது கணவனை அன்பாகவும் பாசமாகவும் வளர்த்த மாமியாருக்கு நம்மால் முடிந்த அளவிலான உதவியை செய்ய வேண்டும்... இவ்வளவு காலமும் இந்த வீட்டிற்காக உழைத்தவர்களுக்கு இனியாவது நாம் ஓய்வு கொடுக்க வேண்டும் வேண்டும் என்று எண்ணம் வந்து விட்டாலே போதும் மருமகளின் மீது மாமியாருக்கு தனி மரியாதையை வந்துவிடும்...
ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துங்கள் :-
பொதுவாக நம்மை யாரோடும் ஒப்பிட்டு பேசுவது நமக்கு பிடிக்காது... ஆனால் நம்மில் பலர் அதைத்தான் அடிக்கடி செய்து கொண்டு இருக்கிறார்கள்... ஒரு வீட்டில் இரண்டு மருமகள் இருக்கும்பட்சத்தில் ஒரு மருமகளை இன்னொரு மருமகளுடன் ஒப்பிட்டு பேசுவது இன்றும் பல குடும்பங்களில் வாடிக்கையாக இருக்கிறது... அதேபோல மாமியாரை அடுத்தவருடன் ஒப்பிட்டு பேசும் மருமகள்களும் இருக்கிறார்கள்.
இதுவே பல குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அடித்தளமாக அமைகிறது.. இரண்டு மருமகள்கள் இருக்கும் வீட்டில் ஒரு மருமகள் கொஞ்சம் வசதியாகவும், இன்னொரு மருமகள் கொஞ்சம் வசதி குறைவாகவும் இருக்கும் பட்சத்தில் அங்கு ஒப்பிட்டு பேச்சு அதிக அளவில் இருக்கிறது.
இது நாளடைவில் மாமியார் மருமகள் இடையில் மனக்கசப்பை ஏற்படுத்தி அவர்கள் மீது வெறுப்பை வளர செய்து விடுகிறது... இதை தவிர்ப்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். ஒரு மருமகள் இருந்தாலும் சரி, ஒன்றுக்கு மேற்பட்டோர் இருந்தாலும் சரி யாருடனும், யாரையும் ஒப்பிடாதீர்கள்.
அடிக்கடி சந்திப்பது அவசியம்:-
இப்பொழுது கூட்டுக் குடும்பம் என்பது மிகவும் அரிதாகி விட்டது... தனிக்குடித்தனம் பெருகிவிட்ட நிலையில் மாமியார் மருமகள் இருவரும் ஒரே வீட்டில் வசிப்பது என்பது எல்லோருக்கும் கிடைப்பதில்லை.. அப்படி இருக்கும் பட்சத்தில் அடிக்கடி தொடர்பில் இருக்க முயற்சி செய்யுங்கள்... ஏதாவது பண்டிகை நாட்களிலோ திருமண நாள் பிறந்தநாள் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளுங்கள்.. முடிந்தால் குறைந்தது வாரத்தில் இரண்டு நாட்களாவது போன் பண்ணி நலம் விசாரித்துக் கொள்ளுங்கள்.
மாதத்தில் ஒரு நாளாவது மாமியார் மருமகள் வீட்டுக்கு சென்று அல்லது மருமகள் மாமியார் வீட்டிற்கு சென்று குடும்பத்தோட அமர்ந்து உணவருந்துங்கள்.. இது உங்களுடைய உறவை மிகவும் பலப்படுத்தும்.. அடுத்தவர்கள் எவ்வளவு புத்திமதி கூறினாலும் சரி, எந்த உறவிலும் மனப்பூர்வமாக உண்மையாக இருந்தால் மட்டும் தான் அந்த உறவு நீடிக்கும்.. மனதளவில் இவள் இனி எனக்கு மருமகள் இல்லை என் மகள் என்று எந்த மாமியார் நினைக்கிறாரோ, அதேபோல இவர் எனக்கு மாமியார் அல்ல தாய் என்று எந்த மருமகள் நினைக்கிறாரோ அந்த குடும்பம் தான் மிகவும் சந்தோசமாக இருக்கும்.
இது அவரவர் மனநிலையை பொறுத்தது. இந்த உலகில் நாம் வாழ்வது எவ்வளவு காலம் என்று யாருக்கும் தெரியாது.. வாழ்க்கை ஒருமுறைதான், அதை சிறப்பாக கொண்டு செல்ல மனதளவில் முயற்சி செய்ய வேண்டும்... விட்டுக் கொடுப்பது, எதிர்பார்ப்பற்ற பாசத்தைக் காட்டுவது, உணர்வுகளை மதிப்பது .. இப்படிச் சின்ன சின்னதாக இரு தரப்பும் விட்டுக் கொடுத்து நீக்குப் போக்காக நடந்து கொண்டாலே போதும்.. உங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைதான்.. கொண்டாட்டம்தான்.. ஹேப்பிதான்!
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}