சென்னை: மணிப்பூருக்கு செல்ல மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்து அதுதொடர்பான நடவடிக்கைகளில் இறங்கிய நிலையில், அந்த மாநில அரசு அனுமதி தரவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.
மணிப்பூர் நிலவரம் குறித்து பல்வேறு கட்சிகளும் கவலை தெரிவித்துள்ளன. நாட்டு மக்களும் கவலை அடைந்துள்ளனர். நிற்காமல் நீடித்துக் கொண்டிருக்கும் கலவரங்கள் முடிவுக்கு வந்து மணிப்பூர் அமைதிக்குத் திரும்ப வேண்டும் என்று அனைவரும் கோரிக்கையும், வேண்டுதலும் விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கலவரம் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பல்வேறு தலைவர்கள் செல்ல முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் மாநில அரசு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு அனுமதி வழங்குவதில் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வருகிறது. இந்தப் பின்னணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கூட மணிப்பூர் செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த மூன்று மாதங்களாக கலவர பூமியாகயிருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் உண்மை நிலையறிய தலைவர் நம்மவர்
கமல்ஹாசன் அவர்கள் அந்த மாநிலத்திற்கு செல்வதற்கு ஆயத்தமானார்.
அதன்பொருட்டு பயண ஏற்பாடுகளை செய்யவும், அதற்கான சூழ்நிலையை அறியவும் நம்மவர் அவர்கள் தனது பிரதிநிதியாக, கட்சிப்பொதுச் செயலாளர் அருணாச்சலம் அவர்களை அனுப்பிவைத்தார். இதற்கிடையில் அம்மாநில அரசு தலைவர் பயணம் செய்வது பாதுக்காப்பானதாகயிருக்காது என்று கூறி அனுமதிக்க மறுத்துவிட்டது.
தொடர்ந்து தலைவர் நம்மவர் அவர்கள், மணிப்பூர் மாநில அரசை கலைத்து விட்டு அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவர வேண்டுமென ட்வீட் செய்தார். இன்று, தலைவரின் அந்தக்கருத்தை வலியுறுத்தும் விதமாக, அங்குள்ள நிலையையும், தலைவரின் பிரதிநிதி பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் அவர்கள் அந்த மக்களை பார்த்து வந்த காட்சிகளையும் இவ்வுலகிற்கு வீடியோவாக வெளியிட்டுள்ளோம்.
மக்கள் நீதி மய்யம் மற்றும் தலைவர் நம்மவர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி கொண்டுவந்து மீண்டும் அமைதி திரும்ப வழிவகுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரு வீடியோ ஒன்றையும் மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் விடுத்துள்ள வீடியோ:
{{comments.comment}}