டெல்லி: மகாத்மா காந்தி லண்டன் கல்லூரியில் 3 ஆண்டு சட்டப் படிப்பை படித்துள்ளார் என்று மகாத்மா காந்தி பவுன்டேஷனின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி பள்ளிப் படிப்பு மட்டுமே படித்தவர். அவர் சட்டம் படிக்கவில்லை என்று ஜம்மு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விவாதங்கள் வெடித்துள்ளன.
இந்த நிலையில் மகாத்மா காந்தி குறித்த அனைத்துத் தகவல்களும் அடங்கிய இணையதளம் என்று டைம்ஸ் இதழால் பாராட்டப்பட்ட மும்பை மகாத்மா காந்தி ஆய்வுக் கழகத்தின் இணையதளத்தில் இதுதொடர்பாக தேடியபோது காந்தியின் படிப்பு குறித்த விவரம் அதில் காணப்பட்டது. அந்தத் தகவலின்படி பார்த்தால், மகாத்மா காந்தி லண்டனில் சட்டப் படிப்பை முடித்துள்ளார் என்பது தெளிவாகிறது.
Mahatma Gandhi's Education என்றதலைப்பில் சூசன் வாலஸ் என்பவர் இதுகுறித்து விரிவாக எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள தகவலின் சுருக்கம்:
மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஒரு வழக்கறிஞராக மட்டுமல்லாமல் அதையும் தாண்டிய திறமையாளராக இருந்துள்ளார். ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய பெரும் தலைவர்.
மகாத்மா காந்தியின் கல்வி என்பது பல்வேறு சவால்களைக் கொண்டதாக இருந்தது. ஆரம்பக் கல்வி முதல் கடைசியாக படித்த சட்டக் கல்வி வரை அவர் பல்வேறு போராட்டங்களை சந்திக்க நேரிட்டது. ஆனால் அந்த சவால்களையும் தாண்டித்தான் அவர் தனது படிப்பை முடித்துள்ளார்.
மகாத்மா காந்தி போர்பந்தர் நகரில் தனது ஆரம்பக் கல்வியைப் படித்துள்ளார். அப்போது காந்தி ஒரு சராசரியான மாணவராகத்தான் இருந்துள்ளார். படிப்பிலோ அல்லது விளையாட்டிலோ அவர் பெரியவராக திகழ்ந்ததில்லை. ஆனால் எதையும் விரைவாகவும், உடனடியாகவும் கிரகிக்கும் திறமை அவருக்கு இருந்தது. கூச்சசுபாவம் அதிகம் கொண்டவராக காந்தி இருந்தார்.
ஆரம்பக் கல்வியை முடித்த பின்னர் ராஜ்கோட்டுக்கு காந்தி இடம் பெயர்ந்தார். காரணம் அவரது தந்தைக்கு அங்கு வேலை மாற்றம் வந்ததால் காந்தியும் ராஜ்கோட்டுக்கு இடம் பெயர நேரிட்டது. அங்கு ஆல்பிரட் உயர்நிலைப் பள்ளியில் காந்தி சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 11. இங்கு அவரது படிப்பில் நல்ல முன்னேற்றம் தென்பட்டது. ஆங்கிலம் உள்பட அனைத்துப் பாடங்களிலும் சிறப்பாக செயல்பட்டார் காந்தி.
ஆனால் 13 வயதில் காந்திக்குத் திருமணம் முடித்து வைத்து விட்டார்கள். அப்போது அவரது மனைவி கஸ்தூரி பாய்க்கு 11 வயதுதான்.
பள்ளிக் கல்வியில் இப்படி சிக்கல்கள் வந்த போதிலும், அதைத் தாண்டி மகாத்மா காந்தி பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர், பவ்நகரில் உள்ள சமல்தாஸ் கலைக் கல்லூரியில் அவர் சேர்ந்தார். ஆனால் படிப்பைத் தொடர முடியாமல் பாதியிலேயே நிறுத்தி விட்டு போர்பந்தருக்குத் திரும்பினார். அங்கு குடும்பத்தினருடன் இணைந்திருந்த காந்திக்கு மீண்டும் படிக்கும் ஆர்வம் வந்தது. இந்த முறை சட்டம் படிக்க விரும்பினார். ஆனால் லண்டனில் போய் படிக்க ஆசைப்பட்டார்.
ஆனால் கடல் கடந்து போய் படிப்பதை காந்தியின் தாயார் விரும்பவில்லை. இருப்பினும் காந்தி படிப்பதில் ஆர்வமாக இருந்ததால் அவரிடம் சில சத்தியங்களை வாங்கிக் கொண்டு லண்டன் செல்ல அனுமதித்தார். இதையடுத்து 1888ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டம் படிப்பதற்காக லண்டன் வந்து சேர்ந்தார் காந்தி. லண்டனில் உள்ள லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் சட்டப் படிப்பில் சேர்ந்தார் காந்தி. இது 3 ஆண்டு படிப்பாகும். இந்த 3 ஆண்டு படிப்பை வெற்றிகரமாக முடித்து 1891ம் ஆண்டு ஜனவரி மாதம் பட்டம் பெற்றார் காந்தி.
சட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டு 1891ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டனிலிருந்து தாயகம் திரும்பினார் மகாத் காந்தி. இந்தப் படிப்பில் சேர்ந்தபோது இருந்த காந்திக்கும், படிப்பை முடித்த பிறகு இருந்த காந்திக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருந்தன. அந்த அளவுக்கு காந்தி மிகவும் முதிர்ந்த, கூச்ச சுபாவம் முற்றிலும் நீங்கிய, அச்சமில்லாத நபராக மாறியிருந்தார் காந்தி. நல்ல பேச்சாளராகவும் அவர் மாறியிருந்தார். 1893ம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்த காந்தி அதன் பின்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு கிளம்பிச் சென்றார். அங்கு அவர் வெற்றிகரமான வழக்கறிஞராக உயர்ந்தார். இதுதான் காந்திக்கான அடையாளத்தையும், அவருக்கான போராட்டக் களத்தையும் வெற்றிகரமாக உருவாக்கிக் கொடுத்தது.
இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
{{comments.comment}}