லக்னோ: மாபியாக்கள் பொதுமக்களை மிரட்டிய காலம் மலையேறி விட்டது. இனி அவர்களால் யாரையும் மிரட்ட முடியாது. அவர்கள்தான் மிரண்டு போய் உள்ளனர் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் உத்தரப் பிரதேசத்தைக் கலக்கி வந்த தாதா ஆதிக் அகமது. பின்னர் அரசியல்வாதியாகி எம்.எல்.ஏவாகவும், எம்.பியாகவும் இருந்தார். சமீபத்தில் அவரும் அவரது தம்பியும் பிரயாக்ராஜ் நகரில் செய்தியாளர்கள் போர்வையில் ஊடுறுவிய 3 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். நேரலையில் இந்தப் படுகொலையை நாடு முழுவதும் மக்கள் பார்த்து அதிர்ந்தனர்.
உ.பி. போலீஸார் மீது பல்வேறு கறைகளையும், கேள்விகளையும் படிய வைத்துள்ளது இந்தப் படுகொலை. இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று அவர் முதல் முறையாக இந்தப் படுகொலை குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், உத்தரப் பிரதேசத்தில் 2017ம் ஆண்டுக்கு முன்பு வரை சட்டம் ஒழுங்கு கேலிக்கூத்தாக இருந்தது. தினசரி ஒரு கலவரத்தை மாநிலம் பார்த்தது. மாநிலத்தின் அடையாளமே கலவரமாகத்தான் இருந்தது. ஆனால் எனது அரசு அந்த ஆண்டு பதவிக்கு வந்தது முதல் இதுவரை ஒரு கலவரத்தைக் கூட உ.பி. பார்க்கவில்லை.
இந்த அரசு, மாநிலத்தை கலவரமற்ற பூமியாக மாற்றியுள்ளது. முன்பு மாபியாக்கள் மக்களை மிரட்டிக் கொண்டிருந்தனர். மக்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் இனியும் மாபியாக்களால் மக்களை மிரட்ட முடியாது. அவர்கள்தான் தற்போது பயந்து போயுள்ளனர். மாநிலத்தின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அருமையான மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாறியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் முதலீடு செய்யும் ஒவ்வொருவரும் பாதுகாக்கப்படுவர் என்றார் யோகி ஆதித்யநாத்.
ஆதிக் அகமது படுகொலை செய்யப்படுவதற்கு முன்புதான் அவரது மகன் ஆசாத்தை உ.பி. போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர் என்பது நினைவிருக்கலாம். ஆதிக்கின் மனைவி தலைமறைவாக இருக்கிறார். அவரது குடும்பமே தற்போது சிதறிப் போய் விட்டது குறிப்பிடத்தக்கது.
{{comments.comment}}