அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து.. மத்திய அரசு அறிவிப்பு.. மக்கள் போராட்டம் வென்றது!

Jan 23, 2025,08:24 PM IST

மதுரை: மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள நாயக்கர் பட்டி, அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம், பெருமாள் மலை உள்ளிட்ட 48 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை உள்ளடக்கிய  பகுதிகளில் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பை வெளியிட்டது. இதனை அடுத்து டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மேலூர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். 


கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த சட்டப்பேரவை குளிர்காலகூட்டத் தொடரில் டாங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்காமல் அரிட்டாப்பட்டிக்கு உட்பட்ட 500 ஏக்கரை மட்டும் தவிர்த்து பிற இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 




மக்களின் எழுச்சி மிக்க போராட்டம்


இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்  மேலூர் பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் கடந்த ஜனவரி 7ஆம் தேதி  ஆயிரக்கணக்கானோர் பேரணியாக நடந்து வந்து அமைதிப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இந்த நிலையில், இந்தத் திட்டம் வராது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருத்தது. நான் இருக்கும் வரை இத்திட்டம் வராது என்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்தத் திட்டம் வராது என்று தெரிவித்திருந்தார். இருப்பினும் திட்டம் முழுமையாக இதுவரை கைவிடப்படவில்லை என்பதால்  மக்களின் போராட்டமும் தொடர்ந்து வந்தது.


இந்நிலையில், இது குறித்து மத்திய அரசிடம் நேரடியாக கோரிக்கை வைக்க விவசாயிகள் குழு ஒன்றை தமிழக பாஜக குழு டெல்லி அழைத்துச் சென்றது. அப்போது, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதியளித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அறிந்த அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.


மத்திய அரசு பணிந்துள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்


மத்திய அரசின் இந்த முடிவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள செய்தியில்,  நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி #Tungsten சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்.


சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின்  உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது!


இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.




அண்ணாமலை வரவேற்பு:


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த முடிவை வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில்,  அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு மக்கள் சார்பில் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். போர்க்கால அடிப்படையில் இதுதொடர்பான அரசாணையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார்


காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை 


மக்களின் போராட்டத்திற்கும், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் ஒருமனதாக இயற்றிய தனித் தீர்மானத்திற்கும் கிடைத்த வெற்றிதான் டங்ஸ்டன் சுரங்க திடடம் ரத்து. டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.


அரிட்டாப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள மக்களின் உறுதியான   போராட்டமும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றிய தனித் தீர்மானமும் கார்ப்பரேட்டுகளுக்கு துணை போக இருந்த ஒன்றிய பாஜக அரசின் முயற்சிகளை தவிடு பொடியாக்கியுள்ளது.


இதன் மூலம், பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டி, சமண திருத்தலம், வரலாற்று தொன்மையான இடங்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.


எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை:




மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன்.


இது மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கும். மக்களின் குரலாக களத்தில் போராட்டங்கள், சட்டப்பேரவையில் #டங்ஸ்டன்தடுப்போம், #மேலூர்காப்போம்" என்ற வாசகம் பதிந்த மாஸ்க் அணிந்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றதுடன் இந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை எதிர்த்தும், இவ்விவகாரத்தில் மேலூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் விதமாக நான் சட்டமன்றத்தில் ஆதாரங்களுடன் விடியா திமுக-வின் கபட நாடகத்தை எடுத்துவைத்து பேசியதன் தொடர்ச்சியாக அதிமுக  மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.


தங்கள் உரிமைகளுக்காக, தொடர்ந்து போராடி வென்ற மேலூர் மக்களுக்கு எனது வாழ்த்துகள். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் இரட்டை வேட நாடகமாடி மக்களை ஏமாற்ற முயற்சித்த  முதல்வர் மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 


மேலூர் மக்களின் போராட்டத்தை உணர்ந்து, அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்ததன் மூலம் மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.


கனிமொழி வரவேற்பு


திமுக எம்.பி. கனிமொழி இதுகுறித்துக் கூறுகையில், மக்கள் நடத்தியப் போராட்டத்தாலும்,  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு மேற்கொண்ட போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி இது என்று தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. திருச்சி சிவா, மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்  என பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மத்திய அரசின் முடிவை வரவேற்றுள்ளனர்.


பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வரவேற்பு


மத்திய அரசின் முடிவை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் ஜி. சுந்தரராஜன் கூறுகையில்,  மதுரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோத முயற்சியைத் தோற்கடித்த மதுரை மக்களின் உறுதியான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி இது.


இது தொடர்பாக தனித்தீர்மானம் இயற்றிய தமிழ் நாடு முதல்வருக்கும், தமிழக அரசுக்கும், மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைத்துக் கட்சிகள், அமைப்புகளுக்கும் நன்றி.


இந்த விஷயத்திற்காக குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாராட்டுகள். 


தமிழ்நாட்டின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக,, நான் முதல்வராக இருக்கும் வரை அனுமதிக்க மாட்டோம் என்று உணர்வின் வெளிப்பாடாக அறிவித்த முதல்வர் என அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மினி பஸ்களில்.. இனி மினிமம் டிக்கெட் ரூ. 4.. அதிகபட்சம் 10 ரூபாய்.. புதிய கட்டண விகிதம் அறிவிப்பு

news

வெயில் தொடங்கி விட்ட போதும்.. ஜனவரி 30 முதல் பிப்ரவரி 3 வரை.. மிதமான மழைக்கு வாய்ப்பு!

news

ஸ்ரீஹரிகோட்டாவில் செஞ்சுரி அடிக்கும் இஸ்ரோ.. நாளை 100வது செயற்கைக் கோளை ஏவுகிறது!

news

தலித் ஊழியரை பொய் வழக்கில் சிக்க வைத்ததாக.. இன்போசிஸ் இணை நிறுவனர் உள்ளிட்டோர் மீது வழக்கு

news

ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் அருகே.. ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி அன்பு!

news

தமிழக வெற்றிக் கழகத்தில்.. அடுத்தபடியாக.. பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க விஜய் உத்தரவு!

news

வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த ஒரே முதல்வர் யார் தெரியமா.. டாக்டர் அன்புமணி பேச்சு

news

சீமான் என்ன பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா?.. விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!

news

அமெரிக்கா செல்லவுள்ளார் பிரதமர் மோடி.. டிரம்ப்புடன் முக்கியப் பேச்சு.. எப்போது, எத்தனை நாட்கள்?

அதிகம் பார்க்கும் செய்திகள்