ரயில்வே பட்ஜெட் ஒழிப்பு.. புள்ளிவிவரங்களுடன் வானதி சீனிவாசனுக்கு மீண்டும் சு. வெங்கடேசன் சவால்!

Aug 05, 2024,06:52 PM IST
மதுரை: பொதுபட்ஜெட் உரை குறித்தும், ரயில்வே பட்ஜெட் குறித்தும் நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் மதுரை எம்.பி சு. வெங்கடேசன். மேலும் இதுதொடர்பாக பதில் அளிக்குமாறும் கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.

பட்ஜெட் உரை தொடர்பாக சு. வெங்கடேசன் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு வானதி சீனிவாசன் பதிலளித்திருந்தார். இதையடுத்து சு. வெங்கடேசன் தற்போது நீண்டதொரு விளக்கம் அளித்து வானதி சீனிவாசனுக்கு பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளார். அந்த அறிக்கை:

ரயில்வே பட்ஜெட் பற்றிய எனது உரையை நீங்கள் விமர்சித்தீர்கள். அந்த விமர்சனத்திற்கு நான் பதிலளித்தேன். அந்த எனது பதிலுக்கு நீங்கள் பதிலளித்துள்ளீர்கள். இவ்வாறு அரசின் பட்ஜெட் பற்றி பொதுவெளியில்  விவாதிப்பது ஆரோக்கியமான விஷயம். ஏனெனில் இத்தகு விவாதங்களின் வழியாகத்தான் உண்மைகளும் தடுமாற்றங்களும் தவறுகளும் பொதுமக்களுக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரியவரும். 

பொது வெளியில் விவாதம் நல்லது



அவ்வகையில் ரயில்வே பட்ஜெட்  தொடர்பான அரசின் தடுமாற்றங்கள் பொதுமக்களுக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிய நம்மிருவருக்கும் இடையே நடைபெறும் இந்த விவாதம் பேருதவி செய்யும். எனது உரையை விமர்சித்தும் எனது பதிலுக்குப் பதிலளித்தும் இவ்விவாதத்தை நீங்கள் தொடங்கி வைத்தற்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நிதி வெளிப்படைத்தன்மை, செயல்பாட்டுத் திறன்,  கொள்கைச் சீரமைப்பு ஆகியவற்றுக்காக ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்ததாக கூறும் திருமிகு வானதி சீனிவாசன் அவர்களே, உங்களின் அரசு நியமித்த பிபேக் தேப்ரா கமிட்டியின் பரிந்துரை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? 

அந்த கமிட்டி, ரயில்வேயைத் தனியார்மயம் ஆக்குவதற்காக ரயில் பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைக்கப் பரிந்துரைத்தது. மறுசீரமைப்பு என்பதன் அர்த்தமே தனியார்மயம் தான். அதற்காகத்தான் உங்களது அரசு பட்ஜெட்டை ஒழித்தது. நீங்கள் கூறும் நிதி வெளிப்படைத்தன்மை இப்போது சுத்தமாக இல்லை. ஏனென்றால் பொது பட்ஜெட்டில் ரயில் என்ற வார்த்தைகூட இல்லாதபோது எப்படி வெளிப்படைத்தன்மை இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள்? பட்ஜெட்டைத் தோண்டித் துருவி ஆராய்பவர்களுக்கு ஏதேனும் விவரம் கிடைக்கும். மற்றபடி வரவுசெலவு அறிக்கையிலிருந்து பொதுச்சமூகம் திட்டங்கள் பற்றியோ, அதன் நிலைமை பற்றியோ என்ன தெரிந்துகொள்ள முடியும்? 

ரயில்வே பட்ஜெட் இருந்தபோது எக்ஸ்பிளநேட்டரி மெமோ ரேண்டாம் என்று ஒன்று இருந்தது. அது எல்லா விவரங்களையும் பட்ஜெட் ஆவணங்களோடு இணைந்து வெளிப்படுத்தும். அந்த வெளிப்படைத்தன்மை இப்போது அதிகாரப்பூர்வமாக கைவிடப்பட்டுவிட்டது. பொதுச்சமூகத்தை அறியாமையில் நிறுத்தியதைத்தான் வெளிப்படைத்தன்மை என்றும் அரசின் சாதனை என்றும் நீங்கள் பேசுகிறீர்கள்.

பிங்க் புத்தகம்



ரயில்வே பட்ஜெட்டில் பிங்க் புத்தகம் பற்றி கூறியிருக்கிறீர்கள். 2014- 15 தேர்தலின்போது இடைக்கால பட்ஜெட் வெளியிடப்பட்டது. அப்போது பிங்க் புத்தகம் "லிஸ்ட் ஆப் ஒர்க்ஸ் "என்று அழைக்கப்பட்டது. ஜூலை 2014இல் ரெகுலர் பட்ஜெட் படிக்கும்போது "ஒர்க்ஸ் மெஷினரி அண்ட் ரோலிங் ஸ்டாக் ப்ரோக்ராம்" என்று பிங்க் புத்தகம் வெளியிடப்பட்டது. அதேபோல உங்களது ஆட்சியில் 2019- 20 தேர்தலின்போது இடைக்கால பட்ஜெட் வெளியிடப்பட்டது. அப்போது பிங்க் புத்தகம் "லிஸ்ட் ஆஃப் ஒர்க்ஸ் "என்ற பெயரில் வெளியிடப்பட்டது. 2019 ஜூலையில் தேர்தல் முடிந்தவுடன் ரெகுலர் பட்ஜெட் வெளியிட்டபோது பிங்க் புத்தகம் "ஒர்க்ஸ் மெஷினரி அண்ட் ரோலிங் ஸ்டாக் ப்ரோக்ராம்" என்று அழைக்கப்பட்டது.

2024- 25 தேர்தலுக்கு முன்பு வெளியிடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் பிங்க் புத்தகம் "லிஸ்ட் ஆப் ஒர்க்ஸ்" என்றுதான் அழைக்கப்பட்டது. எனவே ரெகுலர் பட்ஜெட் படிக்கும் போது "வொர்க்ஸ் மிஷினரி அண்ட் ரோலிங் ஸ்டாக் ப்ரோக்ராம்" என்று பிங்க் புக் வெளியிடப்பட வேண்டும். ரயில்வே அமைச்சகத்தின் இணையதளத்தில் பைனான்ஸ் பட்ஜெட் என்ற இயக்குநரகத்தில் சென்று பாருங்கள். உங்களுக்கு உண்மை கிடைக்கும். ரயில்வே வாரியம் ஆகஸ்ட் 12க்கு பிறகுதான், அதாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகுதான், வெளியிடுவோம் என்று கூறுகிறது. இதில் நடந்துகொண்டிருக்கும் அரசியல் வெளிப்படையானது. எந்தவொரு ரயில்வே அதிகாரியிடமும் பேசிப்பாருங்கள் இந்த எளிய உண்மையை முழுமையாக விளக்குவார்.

அதனால்தான்  நாடாளுமன்ற விவாதத்தில் எதிர்கட்சிகள் அனைத்தும் பிங்க் புத்தகம் பற்றி  கேள்வி எழுப்பிய போது இரயில்வே அமைச்சர் நீங்கள் சொன்னதைப் போல “அதுதான் ஏற்கனவே வெளியிட்டாகிவிட்டதே” என்று சொல்லவில்லை. மாறாக பதில் சொல்லி மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு எந்தப் பதிலும் சொல்லாமல் நழுவிப்போனார்.

கவச்சுக்கு நிதி ஒதுக்கீடு 1112 கோடியா? 



கவச் பொருத்துவது என்றால் ஏதேனும் ஒரு ரயில்வேயின் தண்டவாளத்திலும் ரயில் நிலையத்திலும் பொருத்த வேண்டும். எனவே அது பிங்க் புத்தகத்தில் குறிப்பிடப்பட வேண்டும். இடைக்கால பட்ஜெட்டின் லிஸ்ட் ஆஃப் வொர்க்ஸ் 2024-25 என்ற பிங்க் புத்தகத்தில் தென் மத்திய ரயில்வேக்கு ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 16 ரயில்வேயில் எந்த ரயில்வேயிலும் பிங்க் புத்தகத்தில் கவச் பொருத்துவதற்காக பணம் ஒதுக்கப்படவில்லை.  நிதி அமைச்சரின் பட்ஜெட்டில் ரயில்வே தொடர்பான ஐந்து ஸ்டேட்மெண்டுகள் உள்ளன. அதில் எந்த ஸ்டேட்மெண்டிலும் கவச் பொருத்துவதற்கான பணம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்படவில்லை. அப்படி இருக்க ரூ1112 கோடி ஒதுக்கீடு என்ற விபரம் எந்தப் புத்தகத்தில் உள்ளது என்பதை வானதி சீனிவாசன் விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

உண்மை என்ன தெரியுமா? கவச் 68,000 கிலோ மீட்டர் தூரத்திற்கும் 14,800 எஞ்சின்களிலும் பொருத்த 45 ஆயிரம் கோடி தேவை. நீங்கள் ஒதுக்கியதாகச் சொல்லி இருப்பது 1112 கோடி. எப்போது கவச் பொருத்தி முடிப்பீர்கள்? அம்ரித் காலம் முழுக்க எடுத்துக்கொண்டு விக்சித் பாரத் வரும் 2047இல் கூட நீங்கள் கவச் பொருத்தி முடிக்க மாட்டீர்கள் என்று உங்களின் பதிலிலிருந்து தெரிகிறது. உங்களது அரசாங்கத்தின் விபத்துத் தடுப்பு எச்சரிக்கை உணர்வு அவ்வளவுதான். 

49 ஆயிரம் கோடி ரூபாயை நீங்கள் அயோத்தியில் சாலைகளும் விமானதளமும் ரயில் நிலையங்களும் அமைப்பதற்குச் செலவு செய்தீர்கள். ஆனால் கவச் பொருத்த ஆயிரம் கோடி என்கிறீர்கள். சென்ற ஆண்டு 516 கோடி ஒதுக்கியதாக உங்கள் ரயில்வே வாரிய தலைவர் கூறினார். ஆனால் ஒரு கிலோ மீட்டர் கூட கவச் பொருத்தவில்லை என்று பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுகிறது. தென் மத்திய ரயில்வேயில் பொருத்தப்பட்ட 1500 கிலோ மீட்டருக்கு மேல் ஒரு இன்ச் கூட கவச் பொருத்தப்படவில்லை என்பதை பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுகிறது. அப்படி இருக்க நீங்கள் கவச்சுக்கு ஒதுக்கப்பட்டது குறித்து கூறியிருப்பது வேடிக்கையானது. மனித உயிர்கள் குறித்தும் இரயில்வேயின் பொதுபாதுகாப்பு குறித்தும் அரசாங்கத்தின் பொறுப்புணர்வு இவ்வளவுதானா?

தமிழ்நாட்டுத் திட்டங்கள்



தமிழ்நாட்டில் 10 புதிய பாதைத் திட்டங்களுக்கு ரெகுலர் பிங்க் புத்தகத்தில் எவ்வளவு ஒதுக்கி இருக்கிறீர்கள் என்ற கேள்வியை நான் எழுப்பி இருக்கிறேன். முதலில் அந்தப் பிங்க் புத்தகத்தை வெளியிடுங்கள். அதன் பிறகு உண்மை தெரிந்துவிடும்.

நீங்கள் திருவனந்தபுரம்- கன்னியாகுமரி; வாஞ்சி மணியாச்சி- நாகர்கோயில்; மதுரை- வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடி திட்டங்கள் பற்றி கூறியிருக்கிறீர்கள். நல்லது. ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். 2017இல் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது உங்களது அமைச்சரவை கூறியது என்ன தெரியுமா? இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு அதாவது 2022 ஆண்டில் இந்த மூன்று திட்டங்களும் முடிந்து மக்களுக்கு திறந்துவிடப்படும் என்று தம்பட்டம் அடித்தது. ஆனால் 2024 ஆண்டிலும் இத்திட்டம்  முடியவில்லை என்பதை நீங்கள் ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குக் காரணம் என்ன? போதிய திதி ஒதுக்குவது இல்லை என்பதுதான். இதைத்தான் நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். 

காட்பாடி- விழுப்புரம்; கரூர்- திண்டுக்கல்; ஈரோடு -கரூர் ஆகிய மூன்று இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கும், 10 புதிய பாதை திட்டங்களைப் போலவே வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கிய அரசுதான் மோடி அரசு. இடைக்கால பட்ஜெட்டில் 150 கோடி ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒதுக்குவதாக கூறினீர்கள். அது உண்மைதானா என்பது பிங்க் புத்தகம் வெளியிடப்பட்ட பிறகுதான் வெட்ட வெளிச்சமாகும்.

மேற்கண்ட மூன்று விசயங்களுக்குச் சமாளிக்கக் கூடிய காரணங்களைத் தேடி கண்டுபிடித்து எழுதியுள்ள நீங்கள், மூத்தோர் பயணச்சலுகை பறிக்கப்பட்டதுபற்றி எதுவும் எழுதவில்லை. அதுகூட வெளியிடப்படாத பிங்க் புத்தகத்தின் உள்ளே இருக்கிறது என்று சொல்லியிருக்கலாம்.

ஆளுங்கட்சியின் உறுப்பினர்களே பெரும்பான்மையான எண்ணிக்கையில் இருக்கும் நாடாளுமன்றத்துக்கான இரயில்வே நிலைக்குழு, மூத்தோர் பயணச்சலுகையைத் திருப்பித்தர பரிந்துரைத்துள்ளது. ஆனால் திருப்பித்தர மறுக்கிறது அரசு.

இரயில்வே பட்ஜெட், பிங்க் புத்தகம், தொடர் விபத்துகள், தமிழ்நாடு புறக்கணிப்பு, மூத்தோர் பயணச் சலுகை குறித்தெல்லாம் இடைவிடாது கேள்வி எழுப்புகிறோம். உண்மையான ஒதுக்கீடுகளையும், புள்ளிவிபரங்களையும் முன்வைத்து பதில் சொல்ல வேண்டிய அமைச்சர் அப்படிப்பட்ட புள்ளிவிபரங்கள் கைகொடுக்காததால்தான் ஆவேசமாக கத்தி ஆர்பரித்து ஒரு அரசியல் பொதுக்கூட்டம் போல நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

உண்மைகள் உங்களுக்கு எதிராக இருக்கும் போது தப்பிச்செல்ல பல வழிகள் உண்டு. அதைத்தான் உங்களது அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.  வானதி சீனிவாசன் அவர்களே! மீண்டும் சொல்கிறோம், இரயில்வே துறையில் தமிழ்நாட்டின் உரிமை, பயணிகளின் பாதுகாப்பு, ஊழியர்களின் நலன், இவற்றிற்காகத்  தொடர்ந்து நாங்கள் குரல்கொடுப்போம். அவை மக்களை ஏமாற்றும் முயற்சி அல்ல. ஏமாற்ற நினைப்போரை அம்பலப்படுத்தும் முயற்சி என்று கூறியுள்ளார் சு. வெங்கடேசன்.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

அதிகம் பார்க்கும் செய்திகள்