மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் ஒவ்வொரு மாதம் இரண்டாவது சனிக்கிழமை இயற்கை சந்தை நடைபெற்று வரும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறு தானியங்களில் பொங்கல் வைக்கும் விழா, கரும்பு கடிக்கும் போட்டி என பல்வேறு போட்டிகள் வருகிற 11ம் தேதி நடைபெற உள்ளன.
மகாத்மா காந்தியடிகள் அகிம்சை போராட்டத்தை மட்டும் கையில் எடுக்கவில்லை.மாறாக அவர் வாழ்ந்த நாட்களில் உணவுகளில் கூட அகிம்சையை கையாண்டவர். மாடுகள் மூலம் பெறப்படும் பால் பொருட்களை கூட தவிர்த்தவர். இப்படி உணவுகளில் கூட அகிம்சையை கையாண்டு இயற்கையான பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களையும், யோகா சார்ந்த வாழ்வியல் நெறிமுறைகளையும் கொள்கைகளாக கொண்டவர்.
ஆரோக்கியமாக வாழ்வதால் உடல் நலத்தையும் மனநலத்தையும் பாதுகாக்க முடியும் என்ற நோக்கில் வாழ்ந்து காட்டியவர். அந்த வரிசையில் காந்தியடிகள் பின்பற்றிய இயற்கையோடு இணைந்த அகிம்சை உணவு பழக்க வழக்கங்களையும், உடல் பாதுகாப்பையும் வழங்கக்கூடிய வகையில், மதுரை காந்தி மியூசியத்தில் இயற்கை சந்தை என்ற தலைப்பில் உணவு திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த உணவுத் திருவிழா கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6:00 மணி வரை செயல்படுகிறது. இங்கு இயற்கையில் விளைந்த காய்கறிகள், பாரம்பரிய அரிசிகள், பருப்பு தானியங்கள், நாட்டு விதைகள், பாரம்பரிய தின்பண்டங்கள்,கேழ்வரகு, சம்பா கோதுமை, மக்காச்சோளம் போன்ற சிறுதானியங்களால் செய்யப்பட்ட குக்கீஸ், லட்டுக்கள், இனிப்பு பலகாரங்கள், இயற்கையாக தயாரிக்கப்பட்ட இன்ஸ்டன்ட் சூப் வகைகள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மளிகை பொருட்கள், மதிப்பு கூட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் போன்ற பல்வேறு வகையான ஸ்டால்கள் போடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது தெருவிற்கு தெரு செயற்கை ரசாயனங்கள் பூசப்பட்ட விதவிதமான உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மக்கள் தங்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு இயற்கை சார்ந்த வாழ்வியலில் நாட்டம் கொண்டு இயற்கை சந்தையில் விற்கப்படும் பொருட்களை வாங்க ஆர்வத்துடன் செல்கின்றனர்.
இயற்கை சார்ந்த உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிக்கவும் மக்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தவும் இயற்கை சந்தை நடைபெற்று வரும் நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களில் பொங்கல் வைக்கும் விழா, கரும்பு கடிக்கும் போட்டி, உரியடி திருவிழா நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 11ம் தேதி இந்த விழா நடைபெறவுள்ளது.
எனவே மதுரை மக்கள் அனைவரும் கடந்த மாதம் சந்தைகளை மிஸ் செய்து விட்டோம் என நினைக்காமல், இந்த மாதத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் இரண்டாவது சனிக்கிழமையில், நடைபெறவுள்ள இயற்கை சந்தையுடன் பொங்கல் திருவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு இயற்கையான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அப்புறம் இன்னொரு விஷயம், இதில் கலந்து கொள்வதற்கு அனுமதி இலவசம்.. ஸோ மறக்காம போங்க, என்ஜாய் பண்ணுங்க!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
{{comments.comment}}