நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர்கள்.. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்திக்குப் பிறகு.. 3வது இடத்தில் மோடி

Jun 09, 2024,10:29 PM IST

டெல்லி: இந்தியாவில் தொடர்ச்சியாக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர், அதிக காலம் பதவி வகித்த பிரதமர் வரிசையில், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்திக்கு அடுத்து 3வது இடத்தில் நரேந்திர மோடி இருக்கிறார்.


இந்தியாவில் இதுவரை 15 பிரதமர்கள் இருந்துள்ளனர். இதில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பிரதமராக பதவி வகித்துள்ளனர். இந்தியப் பிரதமர்கள் குறித்த பல சுவாரஸ்யமான தகவல் தொகுப்பை இங்கு பார்ப்போம்.


- ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி ஆகியோர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பிரதமர்களாக இருந்துள்ளனர்.


- குல்ஸாரிலால் நந்தா 2 முறை தற்காலிக பிரதமராக பதவி வகித்துள்ளார். இரு முறையும் அவர் தலா 13 நாட்கள்தான் பிரதமர் பதவியை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




- ஜவஹர்லால் நேரு மொத்தம் 4 முறை பிரதமர் பதவியை வகித்துள்ளார். நாடு சுதந்திரமடைந்ததும் ஆட்சி மாற்றத்தின்போது அவர் 15 அமைச்சர்களுடன் முதல் முறையாக பிரதமர் பதவியை ஏற்றார். அதன் பின்னர் 1952ம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அதைத் தொடர்ந்து 1957 மற்றும் 1961 ஆகிய தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்று பிரதமர் பதவியை ஏற்றார்.


- இந்தியாவில் அதிக காலம் தொடர்ச்சியாகவும், மொத்தமாகவும் பிரதமர் பதவியை வகித்த ஒரே பிரதமர் ஜவஹர்லால் நேருதான். மொத்தம் 16 வருட காலம் 286 நாட்கள் அவர் பிரதமர் பதவியை வகித்துள்ளார். அவரது சாதனையை இப்போதைக்கு யாரும் முறியடிக்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.


- இந்தியாவில் அதிக காலம் பதவி வகித்த 2வது பிரதமர் என்ற சாதனை இந்திரா காந்தியிடம் உள்ளது. தொடர்ச்சியாக 11 வருடம் 59 நாட்களும், அதிக காலம் என்று பார்த்தால் 15 வருடம் 350 நாட்களும் இந்திரா காந்தி பிரதமராக இருந்துள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமர்களில் இந்திரா காந்திக்கும் தனி இடம் உண்டு. இவரது காலத்தில்தான் கிழக்கு பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு வங்கதேசம் என்று தனி நாடாக மலர்ந்தது என்பது நினைவிருக்கலாம்.


- தற்போது 3வது முறையாக இன்று பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, இந்தியாவில் அதிக காலம் பதவி வகித்த 3வது பிரதமராக திகழ்கிறார். இவர் மொத்தம் 10 வருட காலம் 13 நாட்கள் பிரதமராக இருந்துள்ளார். தற்போது புதிதாக பதவியேற்ற பின்னர் முழுப் பதவிக்காலத்தையும் அவர் நிறைவு செய்தாலும் கூட இந்திரா காந்தியின் மொத்தப் பதவிக்கால சாதனையை முறியடிக்க முடியாது. அதேசமயம், தொடர்ச்சியாக அதிக முறை பிரதமர் பதவியை வகித்த 2வது பிரதமர் என்ற நிலைக்கு மோடி உயருவார். மேலும் ஒரு முறை பிரதமர் பதவியை வகித்தால் மட்டுமே மோடியால், நேருவின் சாதனையை முறியடிக்க முடியும்.


- இந்தியாவின் மிக முக்கியமான பிரதமர்களில் ஒருவராக அறியப்படும், பொருளாதார மறுமலர்ச்சியின் நாயகாக அறியப்படும் மன்மோகன் சிங் அதிக காலம் பிரதமர் வகித்தவர்களின் வரிசையில் 4வது இடத்தில் இருக்கிறார். அவர் மொத்தம் 10 வருடம், 4 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தார்.


- இந்த நால்வரைத் தவிர வேறு எந்தப் பிரதமரும் இரட்டை இலக்க வருடங்களில் பிரதமராக இருந்ததில்லை. அடல் பிஹாரி வாஜ்பாய் அதிகபட்சம் 6 வருடம் 80 நாட்கள் பிரதமராக இருந்துள்ளார். ராஜீவ் காந்தி 5 வருடம்  32 நாட்களும், பி.வி.நரசிம்ம ராவ் 4 வருடம் 330 நாட்களும் பிரதமர்களாக இருந்துள்ளனர்.


- வி.பி சிங் (343 நாட்கள்) , ஐகே குஜ்ரால் (332), எச்.டி.தேவே கெளடா (324), சந்திரசேகர் (223), சரண் சிங் (170) ஆகியோர் நாள் கணக்கில் பிரதமர்களாக இருந்துள்ளனர். 


-  இந்தியாவில், குறைந்தபட்சம் ஒரு முறையாவது முழுமையாக தங்களது பதவிக்காலத்தை முடித்த பிரதமர்கள் என்று பார்த்தால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பி.வி.நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி ஆகியோர் மட்டுமே.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்