சென்னை: லோக்சபா தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுக்களில் திமுக தீவிரமாகியுள்ளது. இதில் முதல் கட்சியாக காங்கிரஸுடன் அக்கட்சி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இந்த பேச்சுவார்த்தை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணியை விட திமுக கூட்டணி தற்போதைய சூழலில் பலமாக உள்ளது. காரணம், கடந்த லோக்சபா தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜக இப்போது இருக்காது என்று தெரிகிறது. காரணம், பாஜகவை கூட்டணியை விட்டு விலக்கி விட்டதாக அதிமுக அறிவித்து விட்டது. மீண்டும் இவர்கள் சேருவார்களா என்பது தெரியவில்லை. அதேபோல கடந்த தேர்தலின்போது விஜயகாந்த் தலைமையில் இருந்த தேமுதிக தற்போது அவரை இழந்து நிற்கிறது. அதிமுகவில் கடந்த தேர்தலின்போது எடப்பாடி பழனிச்சாமியின் தோளோடு தோள் கோர்த்து நின்ற ஓ.பன்னீர் செல்வம் இப்போது அவருடன் இல்லை. இப்படி பல குழப்பங்கள் அதிமுக கூட்டணியில் உள்ளது.
மறுபக்கம் திமுக தெளிவாக உள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக முழு பலத்துடன் மோதிய போதும் கூட அதை தகர்த்து தமிழ்நாட்டில் 38 தொகுதிகளை திமுக தட்டிச் சென்றது. தேனியில் மட்டுமே திமுக கூட்டணிக்கு தோல்வி கிடைத்தது.
ஆளுக்கு எத்தனை தொகுதிகள்?
கடந்த தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டு இருபதையும் வென்றது. காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிட்டு, தேனியைத் தவிர மற்ற எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றன. விடுதலைச் சிறுத்தைக் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் வென்றார், தொல். திருமாவளவன் பானைச் சின்னத்தில் வெற்றி பெற்றார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக ஆகியவை தலா ஒரு இடத்தில் போட்டியிட்டு வென்றன
இந்தத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்கிறது.. இந்திய ஜனநாயகக் கூட்டணி நீங்கலாக (அவர்கள் பாஜக பக்கம் போய் விட்டா்கள்). இதில் புதிதாக யாரேனும் வருவார்களா என்று தெரியவில்லை. ஒரு வேளை பாமகவோ அல்லது தேமுதிகவோ அல்லது இருவருமே சேர்ந்தோ வந்தார்கள் என்றால் அதற்கேற்றார் போல தொகுதிகளில் மாற்றம் வரலாம். ஒரு வேளை புதிதாக எந்தக் கட்சி வந்தாலும் அது திமுகவின் எண்ணிக்கையில்தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பாமக, தேமுதிக இணைந்து வந்தால் காங்கிரஸின் எண்ணிக்கையும் கூட குறைய வாய்ப்புண்டு என்பதால் யாரும் வரக் கூடாது என்பதே காங்கிரஸின் "பிரார்த்தனை"யாக இருக்கக் கூடும்!.
13 முதல் 15 சீட் வரை எதிர்பார்க்கும் காங்கிரஸ்
தற்போதைய சூழலில் திமுகவிடம் இரட்டை இலக்கத்தில் சீட் கேட்கும் திட்டத்தில் காங்கிரஸ் உள்ளதாக கூறப்படுகிறது. 13 முதல் 15 சீட் வரை காங்கிரஸ் எதிர்பார்ப்பதாக சொல்கிறார்கள். தென்னிந்தியாவில் அதிக அளவிலான வெற்றியை பெற காங்கிரஸ் ஆர்வமாக உள்ளது. காரணம், வட இந்தியாவில் காங்கிரஸ் வெல்வது மிகப் பெரிய சவாலாக இருப்பதால், அதிக வாய்ப்புகள் உள்ள தென்னிந்தியாவில் அதிக சீட்களை வெல்வதுதான் புத்திசாலித்தனம் என்று காங்கிரஸ் யோசிக்கிறது.
கர்நாடகா, தெலங்கானாவில் இந்த முறை அதிக தொகுதிகளை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளது. அங்கு தற்போது காங்கிரஸ் ஆட்சிதான் நடந்து வருகிறது. ஆந்திராவையும் அது குறி வைத்துள்ளது. தமிழ்நாட்டில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வென்றால் சிறப்பாக இருக்கும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.
நாளை ஒரு வேளை மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் கூட அதிகாரப்பூர்வமான பிரதான எதிர்க்கட்சியாக வருவதற்கு அதிக எம்.பிக்களை காங்கிரஸ் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். தற்போது லோக்சபாவில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அவல நிலையை போக்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.
9 தொகுதிகள் தவிர்த்து கூடுதலாக என்ன கிடைக்கும்
கடந்த முறை தமிழ்நாட்டில் போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் காங்கிரஸ் மீண்டும் போட்டியிட விரும்புகிறது. இது போக கோவை மண்டலத்தில் கூடுதல் தொகுதிகளை அது எதிர்பார்க்கிறதாம். தேவைப்பட்டால் தேனி தொகுதியை விட்டுக் கொடுக்கவும் அது தயாராக உள்ளது. அந்தத் தொகுதியில் திமுக சார்பில் தங்கத்தமிழ்ச்செல்வன் போட்டியிடவும் வாய்ப்பிருக்கிறது. கடந்த தேர்தலில் அவர் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2வது இடத்தைப் பெற்றவர் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன். அவர் தற்போது எம்எல்ஏவாக உள்ளார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி கேட்கும் 13 தொகுதியோ அல்லது 15 தொகுதியோ திமுக தர வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். காரணம், திமுக அதிக தொகுதிகளில் இந்த முறை போட்டியிட விரும்புகிறதாம். கடந்த முறை பெரம்பலூரில் ஐஜேகே கட்சி சார்பில் பாரிவேந்தர் போட்டியிட்டு உதயசூரியன் சின்னத்தில் வென்றார். அந்தத் தொகுதியிலும் இந்தத் தேர்தலில் திமுகவே தனது வேட்பாளரை நிறுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக இவ்வளவுதான் கொடுக்குமா?
காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் ஒரு சீட் அதிகரித்து 10 சீட் ஒதுக்க திமுக முன்வரலாம் என்று தெரிகிறது. காரணம், காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கினால், மற்ற கட்சிகளும் கூடுதலாக கேட்கலாம் என்று திமுக யோசிக்கிறது. ஒரு வேளை பாமக கூட்டணிக்கு வந்தால் காங்கிரஸுக்கு சீட் குறையும் அபாயமும் உள்ளதை மறுக்க முடியாது.
காங்கிரஸுக்கான சீட் ஒதுக்கீட்டை முடித்து விட்டால், திமுகவுக்கு மிகப் பெரிய சுமை நீங்கி விடும் என்பதால் முதலில் காங்கிரஸுக்கான ஒதுக்கீடு குறித்த பேச்சுக்களை திமுக கையில் எடுத்துள்ளது. காங்கிரஸ் - திமுக பேச்சுக்கள் சுமூகமாக முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
{{comments.comment}}